மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 38 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: குருதியால் விளைந்த சுதந்திரம்!

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என நாடே திருவிழாக்கோலம் பூண்டது. 1919, மார்ச் 29 அன்று ஜாலியன்வாலா பாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது.

பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் நேரடி ஆட்சியின் கீழ் 1858 முதல் இந்திய நிலப்பரப்பின் பெரும் பகுதியைக் கொண்டுவந்தார்கள். முதலாம் உலகப் போரின் முடிவில், பஞ்சாப்பிலும் வங்காளத் திலும் புரட்சிகர இயக்கங்கள் தோன்றி வேகமாக வளர்ந்தன. புரட்சிகர இயக்கங்கள், ‘முழு சுதந்திரம் ஒன்றே தீர்வு’ என்று உரக்க அறிவித்தன. இது பிரிட்டிஷ்காரர்களைக் கலக்கம்கொள்ளச் செய்தது. அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் முறியடிக்கவும் பலம் பொருந்திய சட்டம் தேவை என்று அவர்கள் முடிவுசெய்தார்கள்.

சிட்னி ரெளலட் தலைமையில் அவர்கள் ஒரு குழு அமைத்து, புரட்சிகர இயக்கங்களின் செயல்பாடு களை மதிப்பிட்டார்கள். இந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் ரெளலட் சட்டத்தை முன்மொழிந்தார்கள். இந்தச் சட்டத்தின்படி தீவிரவாதி என்று சந்தேகிக்கும் யாவரையும் கைதுசெய்யலாம். இரண்டு ஆண்டுகள் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி சிறைவைக்கலாம். ஊடகத்தைக் கட்டுப் படுத்தவும் இந்தச் சட்டம் முழு அதிகாரத்தை வழங்கியது. நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், ஆள்தூக்கிக் கறுப்புச் சட்டமாக இந்தச் சட்டத்தை விவரித்தனர். இந்தச் சட்டம் இயற்றப்பட்டதுமே இதற்கு எதிராக நாடு தழுவிய ரெளலட் சத்தியாகிரகத்துக்கு காந்தி அழைப்புவிடுத்தார். ஜின்னா தனது ‘பேரரசின் சட்டமன்ற சபை உறுப்பினர்’ பதவியை ராஜினாமா செய்தார். தாகூர் 1915-ம் ஆண்டு ஆங்கில அரசு தனக்கு வழங்கிய Knighthood விருதைத் துறந்தார்.

போராட்டங்களின் கதை - 38 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: குருதியால் விளைந்த சுதந்திரம்!

ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என நாடே திருவிழாக்கோலம் பூண்டது. 1919, மார்ச் 29 அன்று ஜாலியன்வாலா பாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. கடையடைப்பின் வெற்றி அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை வழங்கியது. டெல்லியில் நடைபெற்ற கடையடைப்பின்போது காவல்துறையினர் சுட்டதில் போராட்டக் காரர்கள் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். இந்த மரணங்கள் நாடு முழுவதும் ரெளலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.

அமிர்தசரஸில் போராட்டங்கள் தீவிர மடைவதை அறிந்த பிரிட்டிஷ் காவல்துறை, காங்கிரஸ் தலைவர்களான வழக்குரைஞர் சைஃபூதின் கிச்லூ, மருத்துவர் சத்பால் இருவரையும் கைதுசெய்து ரகசியமான இடத்தில் சிறைவைத்தது. இருவரையும் விடுதலை செய்யக் கோரி, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் முன்பு போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக் காரர்கள்மீதான காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். ‘இதற்கு எதிராக அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டங்கள் நடைபெறும்’ என்று அனுமானித்த பிரிட்டிஷார், பஞ்சாப் மாகாணத்தின் சட்டம் - ஒழுங்குப் பொறுப்பை ராணுவத்தின் வசம் ஒப்படைத்தனர்.

காங்கிரஸ் தலைவர்களின் விடுதலை கோரி, காவல்துறையினரின் துப்பாக்கிக்சூட்டைக் கண்டித்து, அமிர்தசரஸ் நகரின் மையத்திலுள்ள ஜாலியன்வாலா பாக் திடலில் 1919, ஏப்ரல் 13 அன்று, மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நாளில்தான் ‘குருகோவிந்த் சிங் கால்ஸா’ இயக்கத்துக்கு அடிக் கல் நாட்டிய நாள் என்பதால், வருடம்தோறும் அமிர்தசரஸ் பெரும் திருவிழாவாக இருக்கும். ஏப்ரல் 13 வைகாசி நாள் என்பதால், இந்த நாளை மத வேறுபாடுகளின்றி சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து கொண்டாடு வார்கள்.

ஒரு திருவிழா நாளில் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், ஜாலியன்வாலா பாக்கில் மக்கள் மெல்ல மெல்லக் கூடினார்கள். ஜாலியன்வாலா பாக் நான்கு புறமும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்டுள்ள திடல் என்பதால், அதன் ஒரே நுழைவாயிலின் வழியே இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளமென உள்ளே நுழைந்தார்கள். இந்தச் சூழலில் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டயர், 100 பிரிட்டிஷ் படையினர், 50 இந்தியச் சிப்பாய் களுடன் ஜாலியன்வாலா பாக்கின் நுழைவாயிலை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்தார். எச்சரிக்கை கள் ஏதும் கொடுக்காமல் அதிரடியாகக் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டார்.

எங்கு திரும்பினாலும் மதில் சுவர்கள்... மக்கள் திக்குத் தெரியாமல் திடலெங்கும் ஓடினார்கள். மதில்கள்மீது ஏற முயன்றார்கள். இருக்கும் ஒரே வாயிலின் வழியே தப்பிக்க முயன்றார்கள். காற்றைக் கிழித்துக்கொண்டு பாயும் துப்பாக்கித் தோட்டாவிலிருந்து தப்பிக்க, திடலிலிருந்த கிணற்றுக்குள் பலர் குதித்தார்கள்.

ஜாலியன்வாலா பாக் திடல் முழுக்க ரத்த வெள்ளம். திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம். காயம்பட்டவர்களின் முனகல்கள்... ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்ததால், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல இயலாத நிலை. பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைக்குத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 379 பேர் என்று அறிவித்தது. ஆனால், எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றன சாட்சியங்கள். ஜாலியன்வாலா பாக்குக்குள் இருந்த கிணற்றிலிருந்து மட்டும் 120 சடலங்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் 1,337 பேர் என்கின்றன குறிப்புகள். ஆனால், இந்த எண்ணிக்கை பல ஆயிரம் என்கிறது நாட்டுப்புற வழக்காறுகள். அமிர்தசரஸ் நகரின் காற்றில் பல நாள்கள் ரத்த வாடை நிலைத்திருந்தது.

பஞ்சாப்பின் துணை ஆளுநர் மைக்கேல் ஓ’டயர் (Michael O’Dwyer), “துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி ஜெனரல் டயரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே” என அறிவித்தார். ஜாலியன்வாலா பாக் படுகொலைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஹண்டர் ஆணைக்குழு முன்னர், ஜெனரல் டயர் ஆஜரானார். அந்த விசாரணையில் அவர், “நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டே இருந்தேன். மக்களின் நெஞ்சில் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று நினைத்தேனோ, அந்த அளவுக்கு நான் அதிகமாகச் சுட்டுவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால், இறந்தவர்கள், காயம்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந் திருக்கும். நான் அங்கு போனது வெறுமனே கூட்டத்தைக் கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சில் ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுவதுமுள்ள எல்லோருக்குமே குலைநடுக்கம் ஏற்பட வேண்டும் என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.

ஹண்டர் ஆணைக்குழு தனது விசாரணையின் முடிவில், ‘மக்கள் கலைந்து செல்ல எந்தவித அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. நிலைமை யைச் சரிசெய்ய டயர் கையாண்ட உத்தி கண்டனத்துக்கு உரியது. டயர், அவருடைய அதிகாரத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டார். பஞ்சாப்பில் பிரிட்டிஷ் அரசைத் தூக்கி எறிவதற்கான எந்தச் சதி வேலையும் அப்போது இல்லை’ என்று அறிக்கை வெளியிட்டது. ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பிறகு, பிரிட்டிஷார் இன்னும் கடுமையான நெருக்கடிகளையே சந்தித்தனர். ஒருவழியாக ரெளலட் சட்டத்தை 1922-ல் திரும்பப் பெற்றனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் இத்தகைய கறுப்புச் சட்டங்கள் இருந்தன என்பது வரலாறு எனில், இன்றைக்கு நாம் வாழும் சுதந்திர இந்தியாவில் இதைவிடக் கொடூரமான ஒரு டஜன் கறுப்புச் சட்டங்கள் இருக்கின்றன என்பதை எப்படிப் புரிந்துகொள்வது... பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய பகத் சிங், திலகர், காந்தி, நேரு, வ.உ.சி மீது தேசத்துரோகம் செய்ததாக 124 ஏ-வின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கும் நம் நாட்டில், `அரசுக்கு எதிராகப் பேசுதல்’ என்கிற பெயரில் அந்தக் கொடிய 124 ஏ சட்டம் அருந்ததி ராய் முதல் இடிந்தகரை மக்கள் வரை பலர்மீது பாய்ந்திருக்கிறது/ பாய்கிறது என்றால் நாம் ஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வி எழுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 19 வயது சிறுமிக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக, செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பான், சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் கையில் வெறும் காகிதப் பிரசுரங்கள்தான் இருந்தன என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது... காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்தானே. ஜாலியன்வாலா பாக் போராட்டத்துக்குப் பிறகு பிரிட்டிஷார் ரெளலட் சட்டத்தைத் திரும்பப் பெற்றனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் குண்டர் சட்டம், தடா, பொடா, தேசத்துரோகம், NSA, UAPA என வருடம்தோறும் கறுப்புச் சட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கின்றன என்றால், எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்?

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 38 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: குருதியால் விளைந்த சுதந்திரம்!

சர்தார் உத்தம்!

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, உத்தம் சிங் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். பகத் சிங்கின் நெருங்கிய நண்பரான உத்தம் சிங், பஞ்சாப்பிலிருந்து புறப்படுகிறார். ஆப்கானிஸ்தான், சோவியத் யூனியன் வழியாக லண்டன் சென்றடைகிறார். மெல்ல மெல்ல அங்கே தனக்கான நட்பு வட்டங்களை உருவாக்கிக்கொண்டு வேலை தேடுகிறார். ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நினைவுகள் அவர் மனதை அலைக்கழிக்கின்றன; அவரைத் துன்புறுத்துகின்றன. தம் மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஜெனரல் டயர், அதற்கு ஆணையிட்ட மைக்கேல் ஓ’டயர் ஆகிய இருவரையும் தேடுகிறார். ஜெனரல் டயர் இறந்துவிட்ட செய்தி அவரை வந்தடைகிறது. மைக்கேல் ஓ’டயரைத் தேடி அவரை நெருங்குகிறார். அவரது வீட்டிலேயே வேலைக்குச் சேர்கிறார். ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து மைக்கேல் ஓ’டயரைச் சுட்டுக் கொல்கிறார் உத்தம் சிங். இது திரைப்படம்தானா அல்லது உண்மைச் சம்பவத்துக்குள்ளேயே நாம் வாழ்கிறோமா என்கிற அளவுக்குத் தொழில் நேர்த்தியுடன் வெளிவந்திருக்கிறது `சர்தார் உத்தம்’ திரைப்படம்!