
சுதேசிய உணர்வு மக்களிடம் தீவிரமாகப் பரவியதால், நெல்லையில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி, 1885-ல் பம்பாயில் தொடங்கப்பட்டது. மெல்ல மெல்ல அந்தக் கட்சி தனது செயல்பாடுகளின் வழியே ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்தது. மகாராஷ்டிரத்திலும் வங்கத்திலும்தான் அது முதன்முதலில் வெகுமக்கள் இயக்கமாகப் பரவி வளர்ந்தது. சாதி, மதங்களைக் கடந்து, மக்கள் ஒன்றிணைவது ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் கர்சனின் கண்களை உறுத்தியது. இந்திய மக்களைப் பிளவுபடுத்த அவர்தான் முதன்முதலில் இந்து-முஸ்லிம் என்று மக்களின் எண்ணிக்கையை வைத்து பிரிவினைகளின் விதைகளை விதைக்க முயன்றார். ஆனால், நினைத்ததற்கு மாறாக தேசிய இயக்கம் மேலும் வலுப்பெற்றது, ஊக்கம் பெற்றது!
பிரிட்டிஷ் அரசு சும்மா விடுமா... 1905-ல் இந்தியாவின் வங்காள மாகாணத்தை இந்து - இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அடிப்படையில், இரண்டாகப் பிரிக்க கர்சன் உத்தரவிட்டார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையில், வங்காளம் முழுவதும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. 1906-ல் காங்கிரஸின் மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. கல்கத்தா மாநாட்டில்தான் சுயராஜ்ஜியம், அந்நியப் பொருள்களை விலக்குவது, நாடு முழுவதும் சுதேசி முயற்சிகளை முன்னெடுப்பது என்கிற முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. வங்கம் முழுவதும் பல தொழில்களில் சுதேசி முதலீடுகள் அரும்பத் தொடங்கின.
மகாராஷ்டிரத்தில் திலகரும், பஞ்சாப்பில் லாலா லஜபதி ராயும் பல சுதேசி முன்னெடுப்புகளைச் செய்தனர். இருப்பினும், தமிழ்நாட்டில் அப்படியான முயற்சிகள் ஏதும் நடைபெறாமல் இருந்ததால் பாரதியார், ‘தூங்குமூஞ்சி மாகாணம்’ என்றார். இந்தச் சூழலில், தமிழகத்தின் தெற்கிலிருந்து முக்கியச் செய்திகள் வந்தன. இந்தியாவில் இதுகாறும் எடுக்கப்பட்ட சுதேசிச் செயல்பாடுகளின் உச்சமாக இந்த முடிவு வரலாற்றையே அலங்கரித்தது. உலக கடல் வணிகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆங்கிலேயர்களின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்கு எதிராக, வ.உ.சி சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியைப் பதிவுசெய்து, தொடங்கினார். சென்னை, கடலூர், தஞ்சை, மதுரை, சேலம், கொழும்பு என ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, சுதேசி கப்பல் கம்பெனிக்குப் பங்குகளைச் சேர்த்தார். மறுபுறம் ஆங்கிலேய கம்பெனியுடன் உரசல், மோதல், கைகலப்புகள் தாண்டி சுதேசி கப்பல் கம்பெனியின் வெற்றிக்கொடி பறந்தது. சுதேசி கப்பல் கம்பெனியின் செய்திகள், இந்தியா முழுவதும் தலைப்புச் செய்திகளாக விவாதிக்கப்பட்டன.
வ.உ.சி-க்கு தோழமைகளாக வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவாவும், இடையன்குளம் பத்மநாப ஐயங்காரும் சுதேசி இயக்கத்தில் இணைந்து தங்களின் செயல்பாடுகளால், சொற்பொழிவுகளால் அதன் தலைமையில் இடம்பெற்றார்கள். 1908-ல் தூத்துக்குடி கடற்கரையில், அனல்பறக்கும் உரைகளை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்பது ஒரு தினசரி நிகழ்வாக மாறியது. அதே கடற்கரையில் சோமசுந்தர பாரதியார், சூசை பர்னாந்து ஆகியோர் உரையாற்றியபோது ஐயாயிரம் பேர் அதைக் கேட்கிறார்கள்.
கடற்கரையில் வெப்பம் நிறைந்த உரைகளைக் கேட்ட தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள், குறைந்த கூலி, வார விடுமுறை இல்லை என்கிற கோரிக்கைகளுடன் தங்களின் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். ஆலை இயங்கவில்லை, வேலை நிறுத்தம் ஒரு வாரத்தைக் கடந்தது. நிதி திரட்டி தொழிலாளர்களின் குடும்பங்களைப் பசியாற்றினார்கள். மாற்று வேலைகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். பிப்ரவரி 27-ல் தொடங்கிய வேலை நிறுத்தம், மார்ச் 7-ம் தேதி தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
சுதேசிய உணர்வு மக்களிடம் தீவிரமாகப் பரவியதால், நெல்லையில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். குதிரை வண்டிக்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்குப் பணியாற்ற மறுத்தனர். சுதேசியத்துக்கு எதிராகப் பேசிய ஒரு வக்கீலுக்குப் பாதி சவரம் செய்த நிலையில் சவரத் தொழிலாளி எழுந்து சென்ற உணர்வுபூர்வமான சம்பவமும் நடந்தது.

வங்காளத்தில் 1908-ல் விபின் சந்திர பால் ஆறு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலை பெறும் மார்ச் 8-ம் தேதியை சுயராஜ்ய நாளாகக் கொண்டாட சுதேசி இயக்கம் முடிவுசெய்தது. தூத்துக்குடி கடற்கரையில் திட்டமிடப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியாளர் விஞ்ச் 144-வது பிரிவின் கீழ் தடை விதித்தார். கூடவே நெல்லை மூவரான வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோரை நெல்லை ஆட்சியாளர் முன்பு ஆஜராகும்படி உத்தரவிட்டார். உத்தரவின் நகல் வந்துசேரும் நேரத்தில், மூவரும் தூத்துக்குடியில் நான்காயிரம் பேர் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர் பிறப்பித்துள்ள உத்தரவையும் மக்கள் மத்தியில் வாசித்துக் காண்பித்தார்கள்.
அடுத்த நாள் காலை, மூவரும் நெல்லை ஆட்சியர் முன்பு ஆஜரானார்கள். “உங்களிடம் நியாயம் கிடைக்காது. எங்கள் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுங்கள்” என்று மூவரும் முறையிட்டனர். முதல் நாள் விசாரணை முடிந்ததும், நெல்லையப்பர் கோயிலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து, அங்கே சுயராஜ்ஜிய நாள் கொண்டாட்டங்களை மீண்டும் ஒரு முறை மேற்கொண்டனர். மார்ச் 10, தூத்துக்குடியில் சுயராஜ்ஜிய நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஆங்கிலேயர்கள் நடக்கக் கூடாது என நினைத்த சுயராஜ்ஜிய கொண்டாட்டம், மக்கள் திருவிழாபோல் நடப்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை.
மார்ச் 12-ம் தேதி, மூவரும் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மார்ச் 13-ம் தேதி, தூத்துக்குடியில் கடைகளெல்லாம் திடீரென மூடப்பட்டன. மக்கள் அங்கிருந்து ரயிலேறி நெல்லை நோக்கி வந்தனர். தூத்துக்குடியில் கோரல் மில் மற்றும் பெஸ்ட் அண்ட் கோ ஆகிய ஆங்கிலேய கம்பெனிகளில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தூய்மைப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. குதிரை வண்டிகள் ஓடவில்லை. ஆங்கிலேயர்களுக்கு இறைச்சி விற்பதை நிறுத்தினார்கள். ரிசர்வ் காவலர்களும், சிறைக் கைதிகளும் உணவின்றித் தவித்தனர்.
நெல்லையிலும் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்துக் கல்லூரிக்குள் நுழைந்தனர். கல்லூரி மூடப்பட்டது, மாணவர்கள் அனைவரும் வீதிக்கு வந்தனர். சி.எம்.எஸ் கல்லூரிக்குள் நுழைந்த கூட்டம், கல்லூரியைச் சேதப்படுத்தியது. நெல்லை நகராட்சி அலுவலகக் கட்டடச் சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அஞ்சல் நிலையம் தீ வைக்கப்பட்டது. நகராட்சியின் மண்ணெண்ணெய் கிடங்குக்குத் தீ வைக்கப்பட்டது. முன்சீப் கச்சேரி, முன்சீப் நீதிமன்றம், காவல் நிலையம் தாக்கப்பட்டன.
திருநெல்வேலி காவல் நிலையத்துக்குள் நுழைந்த மக்கள் கூட்டம், அங்கு சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகளை விடுவித்தனர். அங்கிருந்த கத்திகளை, குண்டுகளை அழித்தனர். வழி நெடுகிலும் இருந்த தந்திக் கம்பிகளை வெட்டி வீசினார்கள். தெருவிளக்குகள் அனைத்தும் உடைக்கப்பட்டன. நெல்லை டவுன் காவல் நிலையத்துக்குள் நுழைந்த மக்கள், அங்கே மாட்டப்பட்டிருந்த மன்னர் ஏழாம் எட்வர்டின் படத்தைக் கீழே தள்ளி அடித்து நொறுக்கினர்.
நெல்லை ஆட்சியர், அதிகாரிகள், பாளையங்கோட்டையிலிருந்து வந்த ரிசர்வ் படையினருடன் நெல்லை டவுன் நோக்கி வந்தபோதுதான் எரிந்துகொண்டிருக்கும் அரசு அலுவலகங்களைப் பார்த்துத் திகைத்தார்கள். அந்த தருணத்தில்தான் ரிசர்வ் படையும் சுதேசி மக்களின் எழுச்சியும் எதிர்கொண்டன. மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், நால்வர் பலியானார்கள். இது குறித்து, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும், மதராஸ் சட்டசபையிலும் விவாதம் நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டதற்கும் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியதற்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றனர்.
கலவரத்தைத் தூண்டிவிட்ட குற்றத்துக்காக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்ட முக்கிய சுதேசித் தலைவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சுதேசி கப்பல் ஓட்டியதற்காக வ.உ.சி-க்கு மட்டும் 40 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மக்கள்மீது திமிர்வரி விதிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு நெல்லையில் தண்டக்காவல் படை நிறுத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் நிகழ்ந்த இந்த மிக முக்கிய எழுச்சியை, ஆங்கிலேயர்கள் தங்களின் ஆவணங்களில் தொடர்ச்சியாக, ‘கலகம்’ என்றே குறிப்பிட்டனர். இதை ஓர் எழுச்சியாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அன்று மட்டுமல்ல, இன்றும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை அரசு அங்கீகரிப்பதில்லை.
இன்றைக்கும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய எழுச்சிகளை ஒன்றிய அரசு, `கலகம்’, `கலவரம்’ என்கிறது. போராட்டக்காரர்களை தேசத்துரோகிகள், காலிஸ்தான், அர்பன் நக்சல், தீவிரவாதிகள் என்றுதான் வெளிப்படையாக அழைக்கிறது. சிந்தித்துப் பார்த்தால், ஆட்சியாளர்கள் மட்டுமே மாறியிருக்கிறார்கள், அரசு என்கிற நிறுவனத்தின் மனோபாவம் கொஞ்சம்கூட மாறவில்லை என்பது புரிகிறது. இது ஒருபுறமெனில், இதற்குச் சற்றும் குறைவில்லாத கொடுமை, வ.உ.சி எனும் ஆளுமையை ஒரு சாதியின் தலைவராக மட்டுமே மாற்ற ஒரு குழு முயல்வது. இதையெல்லாம் எங்கே போய்த்தான் முறையிடுவது?
(தொடரும்)

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி-யும் 1908!
1908, மார்ச் 13, வெள்ளிக்கிழமை. கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டு, திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்த எழுச்சியை இந்த நூல் அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது. ஏராளமான சான்றுகளைக்கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் நூல், அதன் பின்னணியையும், விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகன் வ.உ.சி-யோடு, எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையையும் மீட்டுருவாக்கம் செய்கிற இந்நூலை ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியிருக்கிறார்.