
ஒரு பிடி உப்பு... உணர்ந்தெழுந்த மக்கள்.... மிரண்ட பேரரசு!
இந்தியாவில் பிரிட்டிஷார் மட்டுமே உப்பை உற்பத்தி செய்யவும் விற்கவும் முடியும் என்ற கறுப்புச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு 1882-ல் பிறப்பித்தது. உப்பு உற்பத்தியில் பிரிட்டிஷாருக்கு மட்டுமே முழுமையான உரிமையை இந்தச் சட்டம் அளித்தது. இந்தச் சட்டத்தால், கடற்கரைகளில் உப்பளங்களை வைத்து, உப்பு உற்பத்தி செய்துகொண்டிருந்த லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. உப்பை வீட்டில் பதுக்கிவைத்திருந்தால் சட்டப்படி குற்றம் என்று கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.
மதுவுக்கும் உப்புக்கும் ஒரே வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி மக்கள் மனங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் மாநாட்டில், இந்தச் சட்டத்தை எதிர்ப்பது என்று முடிவுசெய்யப்படுகிறது. ஆனாலும், காங்கிரஸ் கட்சிக்குள் இந்தத் தேர்வு குறித்து இரு கருத்துகள் நிலவின. `பிரிட்டிஷாரை எதிர்க்க, உப்பு ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயம் அல்ல’ என்று பல தலைவர்கள் கருதினார்கள். முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் திட்டமிட்டு நிகழ்த்தும் பொறுப்பை காந்தியிடம் ஒப்படைத்தது காங்கிரஸ். முதல் போராட்டத்தில் காந்தி, உப்பைத் தலைப்பாக மாற்றுவது என்று முடிவுசெய்கிறார். முதலில் காந்தி, அன்றைய வைஸ்ராய் இர்வின் அவர்களுக்கு இந்தப் போராட்டம் குறித்துக் கடிதம் எழுதினார். ஆனால், அவரிடமிருந்து வந்த பதில் கடிதத்தில் இந்த வரிக்குறைப்பு பற்றியோ, உப்பு சட்டம் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை.

அகமதாபாத்தின் சபர்மதியில் தொடங்கி, தண்டி வரை ஒரு ஊர்வலம் செல்வது என்று முடிவுசெய்யப்படுகிறது. இந்த ஊர்வலம் கிராமங்களின் வழியே நடந்தது. ஒவ்வொரு நாள் காந்தி தங்கும் கிராமத்திலும், ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உப்பு சட்டத்துக்கு எதிராகவும், இந்திய கிராமங்களில் நிலவும் தீண்டாமை, குழந்தைத் திருமணம், சுகாதாரமின்மை, மது ஒழிப்பு என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார் காந்தி. இதற்கு எதிராக ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதை அவரது தொண்டர்களுக்கும் கடுமையாக வலியுறுத்தினார். சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து காந்தியுடன் 70 பேர் ஊர்வலமாகக் கிளம்பிய செய்தி பிரிட்டிஷாரை எட்டியது. ஆனால், ஓர் ஊர்வலம் எப்படி 240 மைல் தூரத்தைக் கடக்கும், சில தினங்களில் இது நீர்த்துப்போகும் என்ற எண்ணத்தில் பிரிட்டிஷார் அலட்சியமாக இருந்தனர்.
உப்பால் பாதிக்கப்படாதவர்கள் உண்டா... ஊர்வலம், ஒவ்வொரு கிராமமாகக் கடக்கக் கடக்க, மக்கள் அதில் இணைந்து கொண்டேயிருந்தார்கள். ஆங்கிலேய அரசு, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. காந்தி, பெரும் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தார். ‘மாணவர்கள் கல்விக் கூடங்களுக்குச் செல்ல வேண்டாம்’ என்றார். ஆங்கிலேயர்களிடம் பணியாற்றிய இந்தியர்கள் அனைவரையும் வீதிக்கு அழைத்தார்.
23 நாள்களில் 240 மைல்களைக் கடந்து ஊர்வலம் தண்டியை அடைந்தபோது, அது 50,000 பேர் கொண்ட ஒரு மானுடக் கடல்போல் காட்சியளித்தது. ஏப்ரல் 6-ம் தேதி அதிகாலை, காந்தி தண்டியின் கடற்கரைக்குச் சென்று தன் கையில் ஒரு பிடி உப்பை எடுத்து உயர்த்தினார். ‘இனி உப்பு வரியைச் செலுத்த மாட்டோம், இனி நாமே நமக்கான உப்பைக் காய்ச்சுவோம்’ என்று அப்போதே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உப்பு காய்ச்சினார்கள். உப்பு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக நாடெங்கும் 60,000-க்கும் மேற்பட்டவர்களை பிரிட்டிஷ் அரசு கைதுசெய்தது. உடனே காந்தி, பிரிட்டிஷார் பெரிய அளவில் சேமித்துவைத்திருக்கும் தர்ஷனாவிலுள்ள உப்பைத் தன்னுடைய ஆதரவாளர்கள் கைப்பற்றுவார்கள் என்று அறிக்கை வெளியிட்டார். மறுகணமே காந்தி கைதுசெய்யப்பட்டார். கராச்சியிலும் கல்கத்தாவிலும் சில வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றபோதிலும், இந்த முறை காந்தி தனது இயக்கத்திலிருந்து பின்வாங்கவில்லை.
காந்தி கைதுசெய்யப்பட்டது இந்தியா முழுமையிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் கடற்கரைகள் அனைத்திலும் மக்கள் உப்பைக் காய்ச்சத் தொடங்கினார்கள். கோழிக்கோட்டிலிருந்து பையனூர் வரை கேலப்பன் உப்பு சத்தியாக்கிரகத்தை வழிநடத்தினார். பெஷாவரில் இந்தச் சத்தியாக்கிரகத்தை கான் அப்துல் கஃபார்கான் முன்னெடுத்தார். திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்குச் சென்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் ராஜாஜி, ஏ.என்.சிவராமன், ஜி.ராமசந்திரன், துரைசாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் ராஜூ, ஜி.கே.சுந்தரம், ஓ.வி.அழகேசன், ரா.வெங்கட்ராமன், மட்டப்பாறை வெங்கட ராமையா முதலிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
காந்தியின் ஆதரவாளர்கள் 2,500 பேர் தர்ஷனாவிலிருந்த மொத்த உப்பையும் கைப்பற்ற முற்பட்டார்கள். அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அப்பாஸ் தியாகியும், கஸ்தூரிபாய் காந்தியும் கைதுசெய்யப்பட்டார்கள். இருப்பினும் சரோஜினி நாயுடு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பிரிட்டிஷார் ஏவிய வன்முறையில், இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்தியா முழுவதும் 90,000-கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
இந்தியாவெங்கும் பெரும் கொந்தளிப்பு ஏற்படுவதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, உப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது; காந்தியை விடுதலை செய்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் பல நடவடிக்கைகள் உலக அளவில் பேசப்பட்டாலும், உலக ஊடகங்கள் அனைத்திலும் உப்பு சத்தியாக்கிரகம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தப் போராட்டம் வன்முறையற்று நடைபெறுவதால், பிரிட்டிஷாரால் அவர்கள் நினைத்ததுபோல் கையாண்டு ஒடுக்க முடியவில்லை.
`உப்பு, அனைவருடனும் தொடர்புடையது. உப்பு, மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும்’ என்று காந்தி நம்பினார். இந்தியாவில் பிரிட்டிஷாரின் வருமானத்தில் 8.2% உப்பிலிருந்து வந்தது என்பதையும் காந்தி அறிந்திருந்தார். உப்பில் கைவைத்தால், அது பிரிட்டிஷாருக்கும் வலிக்கும் என்ற அவரது கணிப்பு எத்தனை சரியானது என்பதை இந்தப் போராட்டத்தின் விளைவுகளின் வழியே நாம் அறிந்துகொள்ளலாம். “உப்பை நான் கையில் ஏந்துவதன் மூலம் பிரிட்டிஷ் பேரரசின் அடித்தளத்தை நான் அசைக்கிறேன்” என்றார் காந்தி.
‘ஆங்கிலேயரிடமிருந்து சலுகைகளைப் பெற, இந்தப் போராட்டம் தவறியது’ என இந்தப் போராட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் இந்தப் போராட்டம், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வீதிக்கு வரச்செய்தது. ஒரு வருடத்துக்குத் தொடர் செயல்பாடாக இந்தப் போராட்டம் மக்களிடம் இருந்தது. ஒரு சட்ட மறுப்பு இயக்கமாக லட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் நடைபெற்ற இந்த எளிய போராட்டம், இன்றைக்கும் உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், தனது பல பேச்சுகளில் உப்பு சத்தியாக்கிரகம் எனும் போராட்டம் தனக்குப் பெரும் படிப்பினையைக் கொடுத்தது என்றார். ஒரு பெரும் மக்கள் திரளை வன்முறையற்ற வழியில் போராட்டக்களத்தில் வைத்திருக்க இயலும் என்கிற வகையில், அவருக்குக் கிடைத்த பெரும் ஆதர்சம் இந்தப் போராட்டம் என்றார். எத்தனை எளிமையாக ஒரு போராட்டம் நடைபெற்றாலும், அந்தப் போராட்டத்தின் கருவில் உண்மை இருப்பின் அது எல்லைகளைக் கடந்தும் வரலாற்றைக் கடந்தும் வழிகாட்டும் ஓர் இயக்கமாக மாறும் என்பதற்கு உப்பு சத்தியாக்கிரகம் ஒரு முன்னுதாரணம்!
(தொடரும்)
****

On The Salt March
தாமஸ் வெபர், காந்தியின் வாழ்வு குறித்து வியப்படைந்து இந்தியாவுக்கு வருகிறார். காந்தியின் தண்டி யாத்திரை நிகழ்ந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து, அதே பாதையில் மீண்டும் செல்கிறார். 1983-ல் அவர் மேற்கொண்ட பயணம்தான் ‘On The Salt March’ என்கிற நூலாக உருவெடுத்தது. காந்தி இந்தப் பயணத்தில், எவ்வாறு இந்தியாவின் எளிய ஜனங்களை ஒரு மாபெரும் தேசியப் போராட்டத்தில் பங்குகொள்ளச் செய்தார், இந்தப் பயணத்தில் பங்குகொண்ட தொண்டர்களை அவர் எவ்வாறு பயணத்துக்குத் தயார்செய்தார், தன் தொண்டர்களை அவர் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணைந்து அமரச் செய்தார், எளிய ஜனங்களை ஒன்றிணைத்து ஒரு பேரரசை வீழ்த்தும் வலிமையைப் பெற்றார் என்பதை அறிந்து, வியந்து பதிவுசெய்திருக்கிறார்!