மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 40 - விவசாயிகள் நெடும்பயணம்: மனசாட்சியை உலுக்கிய பாதங்கள்!

மனசாட்சியை உலுக்கிய பாதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனசாட்சியை உலுக்கிய பாதங்கள்!

காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளுமே இந்தியாவின் விவசாயக் கொள்கைகளைப் பொறுத்தவரை, விவசாயிகளை அவர்களின் நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி, நிலங்களைப் பெரும் நிறுவனங்களுக்கு வழங்கவே துடித்துவருகின்றன

ஒவ்வொரு வருடமும், இந்த பூமியில் வாழும் மனிதர்கள் உட்கொள்ளத் தேவைப்படும் உணவு தானியங்களைவிட 150% அதிகமாகவே விவசாயிகள் விளைவித்துத் தருகிறார்கள். அவ்வளவு உபரியான விளைபொருள்கள் இருந்தும், இந்த பூமியில் இன்னும் பட்டினியும் வறுமையும் நிலவுகின்றன என்றால், அதற்குக் காரணம் என்ன... உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் மத்தியில்தான் இந்தப் பட்டினியும் வறுமையும் அதிகம் இருக்கின்றன எனில், இந்தப் பரிதாப நிலையை நாம் மாற்ற வேண்டாமா?

மகாராஷ்டிரா மாநிலம், இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழும் அதேநேரத்தில் அங்கிருக்கும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி பெரிய பள்ளத்தாக்குபோல் மாறிவருகிறது. 2016-ம் ஆண்டில், அங்குள்ள பழங்குடி விவசாயிகள் 17,000 பேரின் மரணத்தை முன்னிட்டு, மும்பை உயர் நீதிமன்றம் இந்த அவலநிலை குறித்துத் தனது கவலையைப் பதிவுசெய்தது.

காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளுமே இந்தியாவின் விவசாயக் கொள்கைகளைப் பொறுத்தவரை, விவசாயிகளை அவர்களின் நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி, நிலங்களைப் பெரும் நிறுவனங்களுக்கு வழங்கவே துடித்துவருகின்றன. 1990-களில் தொடங்கிய சரிவிலிருந்து விவசாயிகளால் இன்றுவரை மீள முடியவில்லை. அதனால், மகாராஷ்டிரா முழுவதும் விவசாயிகளின் மத்தியில் பெரும் குமுறல் நிலவியது. தொடர் மரணங்கள் அவர்களின் வாழ்வில் பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தின. ‘இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை’ என்கிற மனநிலையில் இருந்த விவசாயிகளை நம்பிக்கையளித்து, அகில இந்திய கிசான் சபா அணிதிரட்டத் தொடங்கியது. விழிப்புணர்வுப் பிரசாரங்கள், கடன் தள்ளுபடி தொடர்பான பெரும் மாநாடுகள், சவப்பெட்டிப் பேரணி, கடையடைப்பு, அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல், நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டங்கள் என 2015 முதல் 2017 வரை தொடர் போராட்டங்கள் மகாராஷ்டிரா எங்கும் நடந்தன.

போராட்டங்களின் கதை - 40 - விவசாயிகள் நெடும்பயணம்: மனசாட்சியை உலுக்கிய பாதங்கள்!

2017, ஜூன் மாதம் 11 நாள்கள், விவசாயிகள் தங்களின் பால், பழங்கள் உள்ளிட்ட விளைபொருள்களைப் பெரு நகரங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி, நகரங்களை நிலைகுலையச் செய்தார்கள். 2017 அக்டோபரில் மீண்டும் ஒரு விவசாய சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் மாநில மாநாடு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில், ஜனவரியில் ஒரு பெரும் இயக்கம் திட்டமிடப்பட்டது. 2018, ஜனவரி 19 அன்று விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளுக்காக, சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தனர். அதில் 1,33,300 பேர் மகாராஷ்டிரத்தில் கைதாகி சிறை அதிகாரிகளைத் திணறடித்தார்கள்.

இந்த வெற்றிக்குப் பின்னர், ஜனவரி 28-ல் கூடிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, மார்ச் 29-ம் தேதி ஒரு லட்சம் விவசாயிகள் திரண்டு தலைநகர் மும்பையை முற்றுகையிடுவது என்று முடிவெடுத்தது. அதுவும் நாசிக்கிலிருந்து மகா பாதயாத்திரையாக (நெடும் பயணம்) சென்று அரசை நிர்பந்திப்பது; தங்களின் வலிமையைக் காட்டுவது என்று முடிவுசெய்தது. இந்த நெடும் பயணத்தின் கோரிக்கைகளைப் பட்டியலிடத் தொடங்கினார்கள்... விவசாயக் கடன் தள்ளுபடி; விளைபொருள்களுக்கு நல்ல விலை; எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும்; வன உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பூச்சித் தாக்குதலுக்குக் காப்பீடு வேண்டும்; புல்லட் ரயில், நான்குவழிச் சாலைகள் போன்ற திட்டங்களின் பெயரால் விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது; பழங்குடி கிராமங்கள் மூழ்கும் வகையில் ஆறுகள் இணைப்புத் திட்டங்களைக் கைவிடவேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் பல சுற்று விவாதங்களுக்குப் பின்பு அடைந்தார்கள்.

நெடும் பயணம் தொடங்கும் நாளில், நாசிக் நகரத்தில் 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுமினார்கள். பெண்கள் இந்தப் பேரணியின் முன்னத்தி ஏராகச் செல்ல, விவசாயிகள் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். மெல்ல மெல்ல ஒவ்வோர் ஊரிலும் விவசாயிகள் வந்து இணைந்துகொண்டேயிருந்தார்கள்.

நெடும் பயணத்துக்கான திட்டமிடுதல் விறுவிறுப்பாக நடந்தது. ஒவ்வொரு நாளும் பகலில் 30-35 கி.மீ தூரத்தை நடந்து கடப்பது என்று முடிவுசெய்தார்கள். மதிய உணவு, இரவு உணவுக்கான இடங்கள், இரவு தங்கல் என எல்லா விஷயங்களையும் துள்ளியமாகத் திட்டமிட்டார்கள். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நடப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கால்களில் செருப்புகள் இல்லை. பலரது கால்கள் பாலம் பாலமாக வெடித்து ரத்தம் வடியத் தொடங்கின. ரத்தம் வடிய வடிய அவர்கள் நடந்தார்கள். இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்க, வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் நடந்தார்கள். வெயிலின் கொடூரம், உடல் சோர்வைக் கடந்தும் விவசாயிகள் இரவில் பாடினார்கள், ஆடினார்கள். அடுத்த நாள் நடப்பதற்கான உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டு உறங்கினார்கள்.

நம் தொலைக்காட்சிகள் தங்களின் பிரைம் டைம் விவாதங்களில், வருடத்தில் ஒரு முறைகூட விவசாயம் பற்றிப் பேசுவதில்லை. ஆனாலும், நெடும் பயணத்தின் செய்திகளை ஊடகங்களால் தொடர்ந்து மறைக்க முடியவில்லை. விவசாயிகள் நடந்து வரும் செய்தி அடுத்தடுத்த நகரத்தை எட்டியபோது, மக்கள் அவர்களை வரவேற்க நகரங்களில் திரண்டார்கள். இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், தலித்துகள் என அனைவரும் தெருக்களில் காத்திருந்தனர். தண்ணீர், சர்பத், பிஸ்கட், உணவு, செருப்புகள் என நடந்துவருபவர்களின் தேவையறிந்து பொருள்களுடன் காத்திருந்தனர். இந்தப் போராட்டத்துக்கான நிதியைக் கையில் வைத்துக்கொண்டும் பல அமைப்புகள், தனிநபர்கள் வழியில் காத்திருந்தார்கள்.

மும்பை நகரின் காட்கோபரில், மாதா ராமாபாய் அம்பேத்கர் நகர் மக்கள், பெரும் எண்ணிக்கையில் திரண்டு வரவேற்றார்கள். மும்பையின் டப்பாவாலாக்கள் விவசாயிகளை வரவேற்கக் காத்திருந்தார்கள். “நாங்களும் விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகள்தானே” என்று அவர்கள், உரிமையுடன் வந்தவர்களைத் தழுவிக்கொண்டார்கள்.

மும்பைக்குள் நுழையும்போது 50,000 பேர் கொண்ட பெரும் பேரணியாக அந்த நெடும் பயணம் மாறியது. திரும்பிய பக்கமெல்லாம் சிவப்புக்கொடிகள், சிவப்பு பேனர்கள், சிவப்புத் தொப்பிகள் என ஒரு சிவப்புச் சமுத்திரம் அலைவீசி மும்பை நகருக்குள் நுழைவதுபோலவே இருந்தது. மார்ச் 11, காலை 6 மணிக்கு நடக்கத் தொடங்கியவர்கள், மாலையில் சயனிலுள்ள சோமையா மைதானத்தை வந்தடைந்தார்கள். அங்கே அவர்கள் தீவிரமாக ஒரு விஷயத்தை விவாதித்தார்கள். `அடுத்த நாள் காலை இங்கிருந்து கிளம்பி நாம் மும்பையில் ஆசாத் மைதானத்தைச் சென்றடைந்தால், அது இந்தப் பெருநகரத்தின் குழந்தைகளுக்குப் பெரும் இடையூறாக இருக்கும்’ என யோசித்தார்கள்.

மார்ச் 12-ம் தேதி, மும்பையிலுள்ள பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இருந்ததால், காலையில் ஊர்வலம் செல்வதில்லை என்று முடிவுசெய்யப்பட்டது. அதிகாலை 6 மணியிலிருந்து நடந்து சோர்ந்தவர்கள், அன்றைய இரவு மும்பை நகரம் சற்று அடங்கியதும் நள்ளிரவு முழுவதும் மீண்டும் நடந்தார்கள். இந்த நடை, முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தது. போராடுகிறவர்கள் தங்களுக்குச் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை இத்தனை தெளிவுபட உணர்த்தியது, ஒரு வரலாற்று நிகழ்வாக மதிப்பிடப்பட்டது.

மாணவர்கள் இரவில் நன்றாக உறங்க வேண்டும் என்பதால், ஒலிபெருக்கிகளை இயக்காமல், முழக்கங்கள் எழுப்பாமல், ஐம்பதாயிரம் பேர் இரவில் ஒரு பூனையைப்போல் நிசப்தமாக நடந்து அன்றைய இரவே ஆசாத் மைதானத்தை வந்தடைந்தார்கள்.

மார்ச் 12 அதிகாலையில், விவசாயிகள் ஆசாத் மைதானத்தை வந்தடைந்த செய்தி மும்பை மக்களையும், ஊடகங்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. விவசாயிகளின் இந்தச் சமூகப் பொறுப்பு அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் புடைசூழ, மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில், ‘வாக்குறுதிகளை எழுத்துபூர்வமாகப் பெறாமல் மும்பையைவிட்டுச் செல்வதில்லை’ என்பதில் போராட்டக்குழுவினர் உறுதியாக இருந்தனர். பேச்சுவார்த்தை முடிந்து ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே, மாநிலத்தின் முதன்மைச் செயலர் கையொப்பமிட்ட கடிதத்துடன் மூன்று அமைச்சர்கள் ஆசாத் மைதானத்துக்கு வந்து போராட்டத் தலைமையிடம் அதை ஒப்படைத்தனர். அந்த உடன்படிக்கை அடுத்த நாளே மகாராஷ்டிர சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகளின் பிரச்னை என்பது எங்கோ, யாருக்கோ நிகழும் பிரச்னை அல்ல. மூன்று வேளை உணவை உட்கொள்ளும் நம் ஒவ்வொருவருடைய பிரச்னையும்தான் என்று நாம் உணரும் நாளில்தான், இந்தப் போராட்டங்கள் முழுப் பரிணாமம் பெறும்!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 40 - விவசாயிகள் நெடும்பயணம்: மனசாட்சியை உலுக்கிய பாதங்கள்!

போராளி

1952-ல் பிறந்த அசோக் தவாலே, தனது மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 முதல் விவசாயிகளின் பிரச்னைகளில் அக்கறை காட்டியவர், இப்போது அகில இந்திய கிசான் சபாவின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். 1978-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர், 2005 முதல் 2015 வரை மகாராஷ்டிர மாநிலத்தில் அதன் மாநிலச் செயலாளராகச் செயலாற்றினார். 2022 முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக அரசியல் பணியாற்றிவருகிறார். 2015 முதல் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து, அது மும்பை நெடும் பயணமாகப் பரிணமித்ததில் அசோக் தவாலேயின் பங்கு முதன்மையானது!