மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 41 - குலக்கல்வித் திட்டம்: சமூகநீதியே சமத்துவத்துக்கான தீர்வு!

குலக்கல்வித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
குலக்கல்வித் திட்டம்

அதிகாரபூர்வமாக அந்தத் திட்டத்தின் விவரங்கள் வெளிவந்ததும், தமிழகமெங்கும் விவாதங்கள் எழுந்தன.

காங்கிரஸ் கட்சி, 1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியில் எழுச்சியுடன் பங்குகொண்டது. காமராஜர் உள்ளிட்ட அதன் தலைவர்கள் பலர் சிறைக்குச் சென்றார்கள். இந்த ஆகஸ்ட் புரட்சி நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அதாவது, 1942 ஜூலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் ராஜாஜி. பிறகு, மீண்டும் நாடு சுதந்திரம் அடையும் தறுவாயில்தான் காங்கிரஸில் இணைந்தார். ஆனால் 1952-ம் ஆண்டு, தேர்தலில் போட்டியிடாமல் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, ஆளுநரின் நியமனத்தின் வாயிலாக காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டின் முதலமைச்சானார்.

1938-ல் ‘இந்தி மொழிப்பாடம் கட்டாயம்’ என எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தாரோ, அதேபோல் இந்த முறை அவர் கட்சியை, அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல், சட்டமன்ற ஒப்புதல் பெறாமல், ‘ஒரு புதிய கல்வித் திட்டம் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.

ராஜாஜி அமைச்சரவையின் கல்வி அமைச்சர் டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ், மதராஸ் சட்டமன்றத்தில் “தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் கால அளவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைப்பது என்றும், அந்த நேரத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தொழில்களைக் கற்றுக்கொள்ள வசதி செய்து கொடுக்கவும் சர்கார் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்த குழந்தைகள் வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் பிறர் செய்யும் தொழில்களை கவனிக்கச் செய்து, கற்கச் செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது. விவசாயத் தொழில்கள், கொட்டகை போடுதல், செங்கல் அறுப்பு வேலைகள், கிணறுகள் வெட்டுதல் போன்ற பல வேலைகளில் பள்ளிச் சிறுவர் சிறுமியரைப் பழக்கப்படுத்துவது என்பதும் யோசிக்கப்பட்டுவருகிறது” என்றார். இதையடுத்து முதலமைச்சர் ராஜாஜி “அவனவன் சாதித் தொழிலை அவனவன் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியது இல்லை. குலத்தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்?” என்றார்.

அதிகாரபூர்வமாக அந்தத் திட்டத்தின் விவரங்கள் வெளிவந்ததும், தமிழகமெங்கும் விவாதங்கள் எழுந்தன. இது மறைமுகமாக வருணாசிரமத்தை நிலைநிறுத்தும் திட்டம் என்று இந்தத் திட்டத்தின் நகலை வாசிக்கும் எவறும் எளிதில் புரிந்துகொள்ளலாம். இது சமூகநீதிக்கு எதிரானது என திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தன. ‘விடுதலை’ நாளிதழில் “சிறுவர் கல்வியைப் பாழாக்கும் புதிய திட்டம், உஷார்!” என்று பெரியார் தலையங்கம் எழுதினார். “துப்புரவுத் தொழிலாளியின் பிள்ளைகள் ஆசிரியராகவோ, மருத்துவராகவோ வருவதை ஏன் தடுக்க வேண்டும்?” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கேள்வி எழுப்பியது. இந்தக் குரல்கள் எதையும் மதிக்காமல், ராஜாஜி சோதனை முயற்சியாக, மதுரை மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

போராட்டங்களின் கதை - 41 - குலக்கல்வித் திட்டம்: சமூகநீதியே சமத்துவத்துக்கான தீர்வு!

திருச்சியில் திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழுக் கூட்டத்தில், குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தை அறிவிக்க, தந்தை பெரியாருக்குப் பொறுப்பளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாகப் போராட்டங்கள் தொடங்கின. திராவிடர் கழகத்தின் மன்னார்குடி மாநாட்டில், கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் சட்டமன்றத்துக்கு முன்பாக குலக்கல்வித் திட்டத்துக்கு எதிராக மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டதும், உடனடியாக அங்கே அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அது இன்னும் போராட்டத்துக்கு வலு சேர்த்தது. பெரும் திரளான மக்கள் பங்கேற்புடன் சட்டமன்ற நுழைவாயில் மறியல் வெற்றிகரமாக நடைபெற்றது. மலபார் போலீஸின் தடியடிகளின் வழியே பெரும் வன்முறைகளை அரசு கட்டவிழ்த்தது. பலர் படுகாயமடைந்தனர். அன்றைக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

பேரறிஞர் அண்ணா, ராஜாஜியின் வீட்டுக்கு முன்பாக மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அரசு உடனடியாக விழித்துக்கொண்டது. அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நாவலர், என்.வி.நடராசன், கே.ஏ.மதியழகன் ஆகியோர் கட்சி அலுவலகத்தில்வைத்தே கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், தி.மு.க-வின் 40 தொண்டர்கள் ராஜாஜியின் வீட்டு நுழைவாயிலை அடைந்தார்கள். அனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

தூத்துக்குடியில் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு முன்பாகவும் மறியல் போராட்டத்துக்கு, பெரியார் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு, குலக்கல்வி எதிர்ப்பு போராட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

நாடு முழுவதும் இந்தச் செய்திகள் செல்ல, பத்திரிகைகள் தங்களின் கடுமையான கண்டனங்களோடு இந்தத் திட்டத்தை எதிர்த்து எழுதின. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தும் விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பின. காமராஜர், முன்னாள் முதல்வர் ஓமந்தூரார், செங்கல்வராயன், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வெளிப்படையாகப் பேட்டியளித்தார்கள். சட்டமன்றத்திலும் இந்தப் போராட்டங்கள் எதிரொளித்தன. குலக்கல்வித் திட்டத்தை நிறுத்திவைத்து, ஒரு நிபுணர்குழு அமைத்து, பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானத்தில் ராஜாஜி அரசு தோல்வியடைந்தது. ‘இது தேவர் - அசுரர் போராட்டம்’ என்றார் ராஜாஜி. ‘இல்லை, இது ஆரிய - திராவிடப் போராட்டம்’ என்றார் பெரியார்.

ராஜாஜி, தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு, இந்தத் திட்டத்தை ரத்து செய்தார். ஆனாலும், கல்வியாளர் பாருலேக்கர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து மீண்டும் புறவழியில் கொண்டுவர அடிப்படை வேலைகளைச் செய்தார். பிறகு, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற சி.சுப்பிரமணியமும் இந்தக் குலக்கல்வித் திட்டத்தைக் கொஞ்சம் பெயர் மாற்றி அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், இந்த முறை சட்டமன்றத்தில் எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலித்தன. திட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டது. மனிதனை அடிமைப்படுத்தி வைக்கும் தந்திரமுடைய குலக்கல்வித் திட்டத்துக்கு காமராஜர், பெரியார், அண்ணா, பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகிய சமூகநீதி ஜாம்பவான்கள்தான் சவக்குழியை வெட்டினார்கள். கல்கி கிருஷ்ணமூர்த்தியும், ம.பொ.சி-யும் தொடர்ந்து குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்தார்கள். 1954-ல் ராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். காமராஜர் தமிழகத்தின் முதல்வரானார். ஒரு வழியாகக் குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டு காமராஜர் பள்ளிகளை மேலும் விரிவாக்கினார்.

பெற்றோர் செய்யும் தொழிலைக் குழந்தைகள் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதும், கட்டாயப்படுத்துவதும் நேரடியாகச் சாதியை மேலும் வலுப்படுத்தும் திட்டம்தான். இன்றைக்கும், “அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல்... இப்படி அனைவரும் படிப்பதால்தான் இந்த லோகத்தில் எல்லா அழிவுகளும் நடக்கின்றன” என்று வெளிப்படையாக வெளிவரும் பேட்டிகளை நாம் கவனிக்க வேண்டும்.

1954-ல் விரட்டியடிக்கப்பட்ட குலக்கல்வித் திட்டம்தான் புதிய பெயரில் திரும்பவும் வந்திருக்கிறது. நம் குழந்தைகளின் எதிர்காலக் கல்வியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த முறை அது ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ என்கிற புதிய பெயரில் வலம்வருகிறது. அதே சட்டம், அதே நடைமுறை. இந்த முறையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலும், மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமலும் இதற்கு அவசர அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

கல்வியில் வேத கலாசாரத்தைத் திணிப்பது, தொழிற்கல்வி என்ற பெயரில் தகப்பன் தொழிலை மகன்/மகள் கற்றுக்கொள்ள நிர்பந்திப்பது, மதிய உணவுத் திட்டத்தை மாற்றுவது, 3, 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு, மூன்று மொழித் திட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என ஒரு நூறு வஞ்சகங்களுடன் எளிய மக்களிடமிருந்து கல்வியை வெகுதூரம் விலக்கிவைக்கும் தடுப்புகளை இந்தத் திட்டம் கொண்டுவரத் துடிக்கிறது.

ஒரு காலத்தில் சென்னை மாகாணத்தில் மருத்துவம் படிக்க, சம்ஸ்கிருதம் அறிந்திருப்பது முன் நிபந்தனையாக இருந்தது. இந்தக் கொடிய தடை, நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தகர்த்தெரியப்பட்டது என்பது வரலாறு.

“நீ படிப்பது வீண்” என்று பாபாசாகேப் அம்பேத்கரிடம் அவரின் ஆசிரியர்கள் சிலர் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அவர் இன்று உலகின் ஆகப்பெரிய ஆய்வாளராகக் கொண்டாடப்படுகிறார். கொலம்பியா உள்ளிட்ட உலகப் பல்கலைக்கழகங்கள் அவரைக் கொண்டாடி மகிழ்கின்றன என்பதை ஒவ்வொரு மாணவருக்கும் நாம் பள்ளிக் கல்வியிலேயே உணர்த்த வேண்டும்; உணர்த்திக்கொண்டேயிருக்க வேண்டும்!

(தொடரும்...)

போராட்டங்களின் கதை - 41 - குலக்கல்வித் திட்டம்: சமூகநீதியே சமத்துவத்துக்கான தீர்வு!

நான் ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறேன்?

வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் மட்டும் புதிய கல்விக் கொள்கை ஏன் இத்தனை வலுவாக, இத்தனை பரவலாக எதிர்க்கப்படுகிறது... அப்படி அந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது... மும்மொழிக் கொள்கையில் என்ன தவறு... மாணவர்கள் மூன்று மொழிகள் கற்றுக்கொண்டால் அவர்களுக்கு ஆதாயம்தானே ஏற்படும்... தொழிற்கல்வியில் என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது... அபிலாஷின் இந்தப் புத்தகம், மத்திய அரசின் கல்விக் கொள்கையில் என்னென்ன பாதகமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன, அவற்றை அனுமதித்தால் எத்தனை பெரிய பின்னடைவை நாம் சந்திப்போம் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. அழுத்தமான அரசியல், வரலாற்று ஆதாரங்களை அளிப்பதன் மூலம் தன்னுடைய வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் வலு சேர்க்கிறார் அபிலாஷ். ஏன் புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்பட வேண்டும் என்பதை விளக்குவதோடு நின்றுவிடாமல், கல்வி என்பது அடிப்படையில் என்ன, அதை எப்படி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும் அக்கறையோடு விவாதிக்கிறார்!