மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 42 - அரபு வசந்தம்... பாலைவன மனங்களின் உரிமைக் குமுறல்!

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னால் இந்த உலகத்தில் யாரையும் ஒரு பொய் உலகத்துக்குள் நீண்டகாலம் அடைத்து வைத்திருக்க இயலாது.

வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாகவே மன்னராட்சி, சர்வாதிகாரம், ஒரு நபர் ஆட்சி அல்லது ஒற்றைக் கட்சியின் ஆட்சி என விதவிதமான முறைகளில் மக்களின் பங்கேற்பு இல்லாத ஆட்சிகள்தான் நடைபெற்றுவந்தன. துனிசியாவில் தெருவோரமாகப் பழங்கள் விற்ற இளைஞன் முகமது புவாசிசி, ஊராட்சி அலுவலகம் முன்பாகத் தீக்குளித்துத் தன்னை மாய்த்துக்கொண்டதன் வழியாக, துனிசியாவின் ‘மல்லிகைப் புரட்சி’யைச் சாத்தியமாக்கினான். துனிசியாவில் பற்றி எரிந்த நெருப்பின் பொறிகள் மெல்ல காற்றில் பரவி, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சிகளைக் கதிகலங்கச் செய்தன.

வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள், கட்டுப்பாடுகள், காவல்துறை-ராணுவத்தின் அடக்குமுறைகள் என நெடுங்காலமாக உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்த மக்களின் மனநிலை, ஒரு எரிமலைபோல் துனிசியாவில் வெடித்தது. அங்கு தொடங்கிய மக்கள் எழுச்சி பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ, சிரியா, லிபியா என ஒரு சுழற்று சுழற்றியது. இந்த ஒட்டுமொத்தப் புரட்சியைத்தான் `அரபு வசந்தம்’ என அழைக்கிறோம். ஜனநாயகம், சுதந்திரம் என்கிற இலக்குகளுடன் பெரும் திரளான மக்கள் இந்தப் புரட்சியில் பங்குகொண்டனர்.

போராட்டங்களின் கதை - 42 - அரபு வசந்தம்... பாலைவன மனங்களின் உரிமைக் குமுறல்!

எகிப்த்!

துனிசியா அனுபவத்திலிருந்து ஊக்கம் பெற்று 2011, ஜனவரி 25-ம் தேதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் மற்றும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத சர்வாதிகாரியாக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு இது என்னவென்றே முதலில் புரியவில்லை. அவர் உடனடியாக இணைய சேவைகளை முடக்கி, கடுமையான அடக்குமுறையை ஏவினார். பத்து லட்சம் பேர் ஒரே நேரத்தில் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியதும், மக்களின் கோபம் கடுமையாக இருப்பதை அறிந்துகொண்ட முபாரக், தனது மந்திரி சபையைக் கலைத்துவிட்டு, அவருக்குக் கீழே துணை அதிபர் என்கிற புதிய பதவியை முதன்முறையாகக் கொண்டுவந்தார். போராட்டங்கள் இன்னும் வலுப்பெற்றன, மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடாரம் கட்டித் தங்கத் தொடங்கினார்கள். முபாரக் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவத்தின் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு ஓடினார்.

பஹ்ரைன்!

இது ஜனவரி எனில், பிப்ரவரியில் பஹ்ரைனில் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசியல் சுதந்திரம் என்கிற கோரிக்கையுடனும் பெரும் திரளான மக்கள் தலைநகரம் மனாமாவின் முத்துச் சதுக்கத்தில் (Pearl Square) கூடினார்கள். இதைத் தொடக்கத்திலேயே அடக்கிவிட வேண்டும் என்று காவல்துறை கடும் தாக்குதலில் இறங்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில், முதல் நாளே நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தச் சம்பவம் மேலதிகமானவர்களைப் போராட்டம் நோக்கி வரச் செய்தது. சில தினங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதே சதுக்கத்தில் திரண்டார்கள். மனாமாவிலிருந்த முத்துச் சதுக்கத்துக்கு ‘தஹ்ரீர் சதுக்கம்’ எனப் பெயர் மாற்றினார்கள். பஹ்ரைன் மன்னர் உடனடியாக மூன்று மாத காலத்துக்கு அவசரநிலையை அறிவித்தார்.

லிபியா!

பஹ்ரைனில் புரட்சி வெடித்த அதே நாளில், லிபியாவிலும் போராட்டங்கள் தொடங்கின. பென்காசி நகரத்தில் அரசுக்கு எதிராக மக்கள் திரண்டதும், லிபியாவின் அதிபர் முவம்மர் கடாபி “அரசை எதிர்ப்பவர்களை எலிகளைப்போல் சுட்டுத்தள்ளுங்கள்!” என்றார். லிபியாவில் இந்தப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாகவே மாறியது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்காவின் நேட்டோ விமானப்படைகள் தலையிட்டு நிலைமையை மட்டுப்படுத்தின. ஒரு மழைநீர் வடிகாலில் மறைந்திருந்த அதிபர் கடாபி கைதுசெய்யப்பட்டு யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. நேட்டோ படைகள் லிபியாவுக்குள் நுழைந்தது கடுமையான சர்வதேசக் கண்டனங்களுக்கு உள்ளானது.

சிரியா!

மார்ச் மாதம் சிரியாவில் “அடுத்து நீங்கள்தான் டாக்டர்” என்ற வாசகம் சுவர் விளம்பரமாகத் தலைநகரம் டமாஸ்கஸில் ஆங்காங்கே முளைத்தன. அவை தேர்ந்த கண் மருத்துவரான சிரிய அதிபர் பஷார்-அல்-அசாத்தைத்தான் குறித்தன. அந்தப் போராட்டம் ஒரு உள்நாட்டு யுத்தமாக முடிவு பெறாமல், பெரிய வன்முறைக்களமாக இன்றும் தொடர்கிறது. ரஷ்யா, இரான், ஐ.எஸ்.ஐ.எஸ் படைகள் என அங்கே யாரை எதிர்த்து யார் போரிடுகிறார்கள், யார் எந்தக் குழுவுக்கு ஆயுதம் தருகிறார்கள் என்கிற மர்மங்களின் ஊடே இதுவரை நான்கு லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பத்து லட்சம் பேர் கடுமையான காயங்களுடனும், உடலுறுப்புகளை இழந்தும் தவிக்கிறார்கள். அந்த நாட்டின் ஜனத்தொகையில் பாதிப் பேர் உள்நாட்டில் அகதிகளாகப் பட்டினியில் செத்து மடிந்துவருகிறார்கள்.

அரபுலகத்தின் சூறாவளி!

ஏமனிலும் போராட்டங்கள் தொடங்கி ஒரு வருட காலம் நடைபெற்றது. 2012 பிப்ரவரியில் அங்கே 33 ஆண்டுகளாக அதிபராக இருந்த அலி அப்துல் சாலே தனது பதவியை ராஜிமானா செய்துவிட்டு வெளியேறினார். 2011-ல் தொடங்கிய அரபு வசந்தம், பத்து ஆண்டுகள் வட ஆப்பிரிக்கா மற்றும் அரபுலகத்தை ஒரு சூறாவளிபோல் சுழற்றியது. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சூடான், அல்ஜீரியா, இராக், லெபனன் என ஜனநாயகத்துக்கான இரண்டாம் சுற்றுப் போராட்டங்கள் அங்கே சமீபத்தில் நடைபெற்றன. அரபுலகம் படுத்து உறங்கவில்லை, அராபியர்கள் சோம்பேறிகளும் அல்ல அவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்பதை வெளி உலகத்துக்கு உணர்த்தினார்கள். ஜனநாயகத்தின் மீதான அவர்களது வேட்கையை இந்தப் போராட்டங்கள் உறுதிசெய்தன.

`அரபு வசந்தம்’ ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக இத்தனை நாடுகளில் நடைபெற்றபோதும், அது நல்ல முடிவுகளைக் கொடுக்கவில்லை. பல நாடுகளில் சர்வாதிகாரிகள் அப்புறப்படுத்தப் பட்டாலும், போராட்டக்காரர்கள் விரும்பியபடி ஜனநாயகச் சீர்திருத்தங்களுடனான மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றபோதும், தேர்தலில் வெற்றிபெற்ற அதிபரைச் சிறையில் அடைத்துவிட்டு, மீண்டும் அங்கே ராணுவம்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

அரபுலகத்தில் ஜனநாயகம் பற்றிய உரையாடல்கள் உருப்பெறும்போதெல்லாம், ஜனநாயகமும் இஸ்லாமும் ஒத்துப்போவதில்லை. இரண்டும் வெவ்வேறு கருத்தாக்கங்கள் என மதத்தையே கேடயமாகப் பயன்படுத்தி மாற்றத்துக்கான குரல்களை மட்டுப்படுத்தி விடுன்றன அரசுகள். மதத்தின் துணையுடன் யதேச்சதிகாரம், சர்வாதிகாரம்தான் தீர்வு என்பதை ஒரு பிரசாரமாகவே செய்துவருகிறார்கள். ‘நல்ல சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள்’ என்பதை நம்பவைக்க பல கோடி தினார்களை வருடம்தோறும் செலவிடுகின்றன அரசுகள்.

ஆனால் ‘அரபு வசந்தம்’ அத்தகைய உரையாடல்களை அர்த்தமற்றதாக மாற்றியது. அரபுலகத்தின் இளைஞர்கள் ‘நாங்கள் அடிமைகள் அல்ல’ என்பதை இந்த உலகத்துக்குத் துள்ளியமாக உணர்த்தினார்கள். 2012-ல் துனிசியாவிலும் எகிப்திலும் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட நீண்ட வரிசைகள் நமக்கு மக்களின் விருப்பத்தைத் தெளிவாகவே உணர்த்தின.

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னால் இந்த உலகத்தில் யாரையும் ஒரு பொய் உலகத்துக்குள் நீண்டகாலம் அடைத்து வைத்திருக்க இயலாது. பொய்களின் கோட்டைகளை, தகவல்களின் உலகம் தகர்த்தெரியும். இன்றைய இளைஞர்கள் இணையத்தின் வழியே இந்த உலகைக் காண்கிறார்கள், உலகம் முமுவதுமுள்ள வாழ்க்கையை, அரசு அமைப்புகளை, உரிமைகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள். `ஏன் என் தேசம் இப்படி இருக்கிறது?’ என்ற கேள்வி அவர்களுக்கு இயல்பாகவே எழத்தான் செய்கிறது. இன்று நவீன யுவன்/யுவதிகள் மிக வேகமாக ஒப்பீடுகளையும் மதீப்பீடுகளையும் செய்கிறார்கள். `எதில் நாம் சிறந்து விளங்குகிறோம், எதில் நாம் பின்தங்கியிருக் கிறோம், எதெல்லாம் தங்கள் நாடுகளில் கிஞ்சித்தும் இல்லை’ என்பதையெல்லாம் விரல்நுனியில் வைத்திருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களின் வலிமையை உணர்ந்து கொண்ட உலகின் சர்வாதிகாரிகள் அனைவருமே, புதிய சட்டங்களின் வழியாகவும், மறைமுகமான வழிமுறைகளைக் கையாண்டும் சமூக ஊடகங்களையும், அதில் இயங்குபவர்களையும் முடக்கவே செயல்படுகிறார்கள். சூழலைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இரவும் பகலும் மெனக்கெடுகிறார்கள். ஆட்சியதிகாரத்தை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும்போதுதான், அரசு வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்பாக விஷயங்களைக் கையாளும் என்பதை உலக அனுபவம் நமக்கு மீண்டும் மீண்டும் கற்றுத் தருகிறது.

ஓர் ஆரோக்கியமான தேசமெனில், முதலில் அதன் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வேண்டும். சுதந்திரமான ஊடகங்கள், பேச்சு-எழுத்து-வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடி விவாதிக்கும் சுதந்திரம் வேண்டும். இவையெல்லாம் மனிதர்கள் கண்ணியத்துடன் வாழ அவசியமான தேவைகள். ஜனநாயகம் இல்லா நாடுகள் நோய்மை யின் குறியீடுகளே. மக்களின் அர்த்தபூர்வமான பங்கேற்பு இல்லாத ஆட்சி, எத்தனை சொகுசுகளை மக்களுக்குக் கொடுத்தாலும், அது தங்கக்கூண்டில் வாழும் கிளிகளின் வாழ்க்கைக்கு ஒப்பானதுதான்!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 42 - அரபு வசந்தம்... பாலைவன மனங்களின் உரிமைக் குமுறல்!

அரபுலகத்தின் 19 நாடுகளில், சர்வாதிகாரிகளின் அடக்குமுறைகளைத் தகர்த்து, தங்களின் உயிரைப் பணயம்வைத்து இந்தப் புரட்சியின் ஊடே பயணித்த 19 பெண்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அவர்களின் நாடுகளிலுள்ள கள நிலவரத்தை ஊடகங்களின் வழியாக வெளி உலகுக்கு அறிவித்தார்கள். அரபுலகத்தில் பெண்கள் எவ்வாறு அரசுகளின் அடக்குமுறைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது தொடங்கி, அங்கே அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் ஆணாதிக்கம் வரை இந்த நூல் ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது. லெபனான் நாட்டைச் சேர்ந்த சாஹ்ரா ஹங்கிர் இந்தக் கட்டுரைகளை நமக்குத் தொகுத்து வழங்கியிருக்கிறார். பல சர்வதேசப் பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவமுள்ள இவர், பிபிசி, அல் ஜசீரா, புளூம்பெர்க் உள்ளிட்ட தளங்களில் எழுதியும்வருகிறார்!