
இடுப்பில் கட்டிய துடைப்பத்துடனும், கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும்தான் மகாராஷ்டிரத்தின் ஆதிக்கச் சாதியினர் வாழும் கிராமங்களுக்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும்
கிழக்கிந்திய கம்பெனியின் பாம்பே காலாட்படை, அதன் 834 வீரர்களுடன் பீமா ஆற்றைக் கடந்து மராத்தியப் பெரும்படையை கோரேகான் கிராமத்தில் 1818, ஜனவரியில் எதிர்கொண்டது. பேஷ்வா பாஜி ராவ் தலைமையிலான மராத்தியப் படையில் 28,000 பேர் இருந்தனர். ஆனால், கிழக்கிந்தியக் கம்பெனியின் காலாட்படையில் வெறும் 834 வீரர்கள் இருந்தனர். இந்த 834 பேரும் தலித்துகள், மகர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தலித் மக்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கம் வகித்த ஆங்கிலேயப் படை, மராத்தா பிராமணர்களின் பேஷ்வா படையை வீழ்த்தியது. பேஷ்வா படைகள் வீழ்த்தப்பட்ட சனிவார் வாடாவில், போரில் இறந்த தலித் வீரர்களின் நினைவாகவும், போர் வெற்றியின் சின்னமாகவும் ஒரு நினைவுத்தூண் எழுப்பப்பட்டது!
இடுப்பில் கட்டிய துடைப்பத்துடனும், கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும்தான் மகாராஷ்டிரத்தின் ஆதிக்கச் சாதியினர் வாழும் கிராமங்களுக்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும். பீமா-கோரேகான் கிராமத்தில் தலித் சமூகத்தினர் இப்படித்தான் நடமாடினார்கள் எனில், அவர்கள் பெற்ற இந்த வெற்றி எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்த வெற்றியை பிரிட்டிஷாருக்குப் பெற்றுக்கொடுத்தபோதும், தலித்துகளை பிரிட்டிஷார் தங்களின் படைகளில் சேர்ப்பதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொண்டனர். ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த சிப்பாய்கள், தங்களின் தலித் மேலதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்க மறுக்கிறார்கள் என்றவுடன், ஆங்கிலேய அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டார்கள்.

1818-க்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த, தலித் மக்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடுவார்கள். பீமா கோரேகான் போரின் 100-வது ஆண்டுவிழாவில் பாபாசாகேப் அம்பேத்கர் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தினார். ‘பிரிட்டிஷார் தங்களின் ராணுவத்தில் மீண்டும் தலித்துகளைச் சேர்க்க வேண்டும். தனித்த மகர்களின் படையை உருவாக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த வரலாற்றுப் பின்புலத்தில் 2018, ஜனவரி 1 அன்று, பீமா கோரேகானில் அதன் 200-வது ஆண்டுவிழா நடைபெற்றது. `எல்கர் பரிஷத்’ என்கிற பதாகையின் கீழ் இந்தியா முழுவதிலுமிருந்து 250-க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் பீமா கோரேகானில் பெரும் கூடுகைக்கு அழைப்பு விடுத்தனர். புனேயின் சனிவார் வாடாவில் நடைபெற்ற கருத்தரங்கில், நீதிபதிகள் கோல்சே பாட்டில், பி.பி.சாவந்த், குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.
வழக்கம்போலவே இந்த விழா நடைபெற்றாலும், இருநூறாவது ஆண்டுக் கொண்டாட்டம் என்பது மகாராஷ்டிர பிராமணர்கள் மற்றும் ஆதிக்கச் சாதியினருக்கு எரிச்சலைக் கொடுத்தது. இந்த முறை இயன்ற வழிகளிலெல்லாம் விழாவை முடக்க அவர்கள் திட்டமிட்டார்கள். முதலில் பீமா கோரேகான் பஞ்சாயத்து, இந்த விழாவைப் புறக்கணிக்கும்படி கிராமத்தினரைக் கேட்டுக்கொண்டது. அன்று கடையடைப்பு செய்து, அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமென உத்தரவிட்டது. ஜனவரி 1-ம் தேதி காலை, அஞ்சலி செலுத்த ஸ்தூபி நோக்கிச் சென்ற தலித்துகளை ஒரு கும்பல் பத்ரூக் பகுதியில் தாக்கியது. சற்று நேரத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மிலிந்த் எக்போட், சம்பாஜி பிடே ஆகிய இருவர் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டது தெரியவந்தது. அவர்கள் இருவர்மீதும் காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதல்களின் தகவல் மகாராஷ்டிரா முழுவதும் பரவ, மாநிலம் முழுவதும் தலித் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்தன. உடனடியாக, சாலைமறியலில் ஈடுபட்டனர். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் 16 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இதையடுத்து பிரகாஷ் அம்பேத்கர் ஜனவரி 3, 2020 அன்று மகாராஷ்டிரா பந்துக்கு அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிரா முழுவதும் முழு அடைப்பு நடத்தப்பட்டது. அன்று 300-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
பீமா கோரேகானில் நிகழ்த்தப்பட்ட முதல் வன்முறைக்குக் காரணமான மிலிந்து எக்போட்டே, சம்பாஜி பிடே மீது மகாராஷ்டிராவில் ஆட்சிசெய்த பாஜக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதும், காவல்துறை ஏதேதோ சொல்லிச் சமாளித்தது. பின்னர், ஒருவழியாக அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இந்த வன்முறையின் முக்கியச் சாட்சியமாக இருந்த 19 வயது தலித் இளைஞனின் வீடு எரிக்கப்பட்டது. சில தினங்களில் அந்தச் சிறுவன் ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தான். இப்படியாக, அந்த இருவர் மீதான சாட்சியங்களை அழித்து, அனைவரும் மிரட்டப்பட்டனர், தாக்கப்பட்டனர்.
இந்த வன்முறை வழக்குகளில் விசாரணை நடத்துவதற்கு பதில், மகாராஷ்டிர காவல்துறை வேறு திசையில் தனது நடவடிக்கைகளை அமைத்தது. அவர்கள் சுதிர் தாவ்லே, சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவத், சோமா சென், ரோனா வில்சன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்தனர். அடுத்தபடியாக வரவர ராவ், அருண் ஃபெரேரியா, சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வெர்னோன் கொன்சால்வேஸ் என இடதுசாரித் தலைவர்களை இந்தியா முழுவதும் காவல்துறை கைதுசெய்தது. பிரதமர் மோடியை இவர்கள் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் எனச் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967-ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடையவர்கள், இவர்களுக்கும் பீமா கோரேகான் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறது எனப் புதுப்புது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. பீமா கோரேகான் நிகழ்வில் பங்குகொண்ட பொதுமக்களும், தலித் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கைதுசெய்யப்பட்டார்கள்.
மகாராஷ்டிர காவல்துறை, சிறப்பு புலன்விசாரணைக்குழுவை (SIT) அமைத்தது. ஆனால், சில தினங்களிலேயே இந்த வழக்கை தேசியப் புலனாய்வு நிறுவனத்துக்கு (NIA) மாற்றியது. 2020, அக்டோபர் மாதம் தேசியப் புலனாய்வு நிறுவனம் 10,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், ஜார்க்கண்டில் பழங்குடிகள் மத்தியில் வேலை செய்யும் பாதிரியார் ஸ்டான் சாமி, ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட இன்னும் பலரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் அறிவுசார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முடக்குவதுதான் அரசின் திட்டம் என்பது அப்போது தெளிவானது.
84 வயதுடைய ஸ்டான் சாமி கடும் நோய்வாய்ப்பட்டவர். முதுமையில் பல நோய்களால் பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாதவர். தனக்கான உணவைக் கைகளால் எடுத்துச் சாப்பிடக்கூட அவரால் முடியாது. தண்ணீரைக்கூட ஓர் உறிஞ்சும் டம்ளரை வைத்தே குடிக்க முடியும். ஒரு ஸ்ட்ரா கேட்டு அவர் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டார். உலகின் ஆகப்பெரும் நம் ஜனநாயகத்தால், ஒரு முதியவருக்கு ஒரு பேப்பர் ஸ்ட்ராகூட வழங்க முடியவில்லை. அவர் கொடுஞ்சிறையில் இறந்தேபோனார். கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த காலத்தில், அவர் ஒரு நாள்கூட விசாரிக்கப்படவில்லை என்பதிலிருந்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதன் நோக்கம் தெளிவாகிறது.
‘ஆதாரம் கிடைத்துவிட்டது. இந்தச் செயற்பாட்டாளர்களின் கணினியில் அந்த ஆதாரங்கள் இருந்தன’ என்று தேசியப் புலனாய்வு நிறுவனம் தெரிவித்தது. ஆனால், ‘இவர்களின் மின்னணு சாதனங்களை புனே காவல்துறை ஹேக் செய்து போலியான ஆதாரங்களை உள்நுழைத்திருப்பதாக’ அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிவித்ததை, அமெரிக்காவின் ‘வயர்டு’ பத்திரிகை வெளியிட்டது.
கைதுசெய்யப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் ஸ்டான் சாமி, “எனக்கு இங்கு நடந்துகொண்டிருப்பவை, எனக்கு மட்டுமே பிரத்யேகமாக நடந்துகொண்டிருப்பவை அல்ல. இந்தியா முழுக்க இது நடந்துகொண்டிருக்கிறது. அறிவுசார் தளத்தில் செயல்படுபவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், போராளிகள் எனப் பலர் சிறைக்குள் தள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்த காரியம், ஆளும் அதிகார வர்க்கத்தின் துஷ்பிரயோகங்களைக் கேள்வி கேட்டதுதான். என்றாலும் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. இந்த விளையாட்டுக்கான விலை எதுவாயினும், அதை நான் கொடுக்கத் தயார்” என்று பேசினார்.
நிச்சயமாக ஜனநாயகம், நமக்கு அறவழியில் போராடும் உரிமைகளை வழங்குகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களை எதிரிகளாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இது ஜனநாயகம் அருகி வருகிறது என்பதற்கான அறிகுறியே. ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்தில், மக்கள் கேள்விகளைக் கேட்பார்கள். உலகம் முழுவதும் மக்கள் கேள்விகளைக் கேட்கவே செய்கிறார்கள், பதிலளிக்கவேண்டியது அரசின் கடமை. ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம்தானே?
போராட்டங்கள் என்பதும் மக்களாட்சியின் ஒரு பகுதிதான் என்பது அரசியலமைப்புச் சட்டத்தை அறிந்தவர்களுக்கு, அதன்மீது மதிப்புடையவர்களுக்குத் தெரியும்!
(தொடரும்)


The Battle of Bhima Koregaon: An Unending Journey!
மும்பையிலுள்ள டாடா சமூக அறிவியல் கல்லூரியில், முனைவர் பட்ட ஆய்வு செய்துவருகிறார் சோம்நாத் வாக்மரே. 2017-ல் இவர் இயக்கி வெளிவந்த இந்த ஆவணப்படம், பீமா கோரேகானின் வரலாற்றை விரிவாகப் பேசுகிறது. பொதுவாகவே நம் வரலாறுகள் பேரரசர்கள், மன்னர்கள், துணிச்சலான போர்வீரர்கள் பற்றிப் பேசும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள், அவர்கள் பங்குகொண்ட போர்களைக் குறித்து மௌனமாகக் கடந்துவிடும். வருடம்தோறும் பீமா கோரேகானில் எப்படி இருபது லட்சம் பேர் அஞ்சலி செலுத்தக் கூடினார்கள், அதை உள்ளூர் ஊடகங்கள் முதல் இந்தியாவின் பெரு ஊடகங்கள் வரை எப்படித் திட்டமிட்டு மறைத்தார்கள் என்பதில் தொடங்கி, பீமா கோரேகானில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக ஆவணப்படுத்துகிறது படம். இந்தப் படத்தை நீங்கள் யூடியூபில் காணலாம்!