மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 5

போராட்டங்களின் கதை - 5
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை - 5

அமெரிக்கப் பத்திரிகைகள் இந்தப் போராட்டத்தைக் கேவலப்படுத்தி செய்திகள் வெளியிடத் தொடங்கின. மெல்ல மெல்ல காவல்துறை ஆங்காங்கே இடைஞ்சல் ஏற்படுத்தத் தொடங்கியது

உலகம் முழுவதுமுள்ள அரசுகள் தொடர்ந்து பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகளின் பயனால், இன்று உலகின் ஒரு சதவிகித ஆட்களிடம் உலகின் 85 சதவிகித சொத்துகள் குவிந்துள்ளன. உலகம் முழுவதுமுள்ள 99 சதவிகித மக்களிடம் எஞ்சிய 15 சதவிகிதச் சொத்துகள்தான் உள்ளன என்றால், உலகம் முழுவதும் நடப்பது மக்களாட்சிதானா... என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது. கூடவே, உலகம் முழுவதுமான ஆட்சிகள், இந்த ஒரு சதவிகிதப் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றத்தான் நடைபெறுகின்றனவா என்கிற கேள்வியும் எழுகிறது. மறுபுறம் ஏழ்மை பெருகிக்கொண்டேயிருக்கிறது. ‘இன்று உலகம் முழுவதும் நடைமுறையிலுள்ள பொருளாதாரக் கொள்கைகள் யாருக்கானவை?’ இந்தக் கேள்வியை முன்வைப்பது தமது கடமை என ஒரு போராட்டக் குழு முடிவுசெய்கிறது!

‘நாங்கள்தான் அந்த 99%’ (We are the 99%) என்கிற முழக்கத்துடன் 2011, செப்டம்பர் 17 அன்று உலகின் முக்கியப் பொருளாதார முடிவுகளை எடுக்கும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டை, அதன் நடவடிக்கைகளை முடக்குவது எனப் போராட்டக்காரர்கள் திட்டமிடுகிறார்கள். உலகம் முழுவதுமிருக்கும் சமூக - பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பேராசை, ஊழல், அரசுகளின்மீது பெரு நிறுவனங்களின் தலையீடு / செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டிப்பது; அதை உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் விளக்குவது என்பதற்கான விரிவான திட்டமிடுதல் தொடங்குகிறது.

நியூயார்க் நகரத்தின் வால் ஸ்ட்ரீட்டில், ‘நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ்’ மற்றும் ‘நாஸ்டாக்’ ஆகிய உலகின் இரு பெரும் பங்குச்சந்தை நிறுவனங்கள் இயங்குகின்றன. இவை தவிர, உலகின் ஆகப்பெரிய நிதி நிறுவனங்கள், வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் இந்தத் தெருவில்தான் இருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் போக்குகளைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவுகள் இந்தத் தெருவிலிருந்து கிளம்பித்தான் உலகம் முழுவதும் அதிகாரக் கட்டளைகளாகப் பறக்கின்றன.

அமைதியான வழியில் அந்தத் தெருவில் கூடுவது, விவாதிப்பது, இன்று பெருகிவரும் ஏழ்மைக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம் அவர்கள்தான் என்பதை அவர்களுக்குத் தெளிவுபட உணர்த்துவது என்பதே அந்தப் போராட்டக்குழுவின் நோக்கம். வால் ஸ்ட்ரீட்டிலுள்ள மூன்று இடங்கள் போராட்டத்துக்கென தேர்வுசெய்யப்பட்டன. ஆனால் காவல்துறைக்கு அந்தத் தகவல் கசியவே, அவர்கள் அதிலுள்ள இரு இடங்களைத் தடைபோட்டு மூடிவிட்டார்கள். ஜூகாவ்ட்டி பார்க் என்பது அந்தப் பட்டியலில் மூன்றாவது இடம். அந்த இடம் ஒரு தனியார் சொத்து என்பதால் காவல்துறையால் அங்கே மக்கள் கூடுவதைத் தடைசெய்ய முடியவில்லை. மக்கள் கூடத் தொடங்கினார்கள். நியூயார்க் மேயர், மக்களுக்குக் கூடுவதற்கும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் உரிமை இருக்கிறது என்று அறிக்கை விடுத்தார்.

போராட்டங்களின் கதை - 5

வால் ஸ்ட்ரீட்டின் பொருளாதார நிறுவனங்களால்தான் அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதால், போராட்டக்குழு சமூக ஊடகங்களைத் தங்களின் தளமாக அறிவித்தன. ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக ஊடகங்கள்தான் போராட்டத்தின் செய்திகளை மக்களிடம் கொண்டுசெல்லும் என அறிவித்தன. ஏற்கெனவே அரபுப் புரட்சி, பிரிட்டிஷ் மாணவர்களின் போராட்டம், கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களிலிருந்து பெற்ற படிப்பினைகள் இந்தப் போராட்டத்துக்கு அடியுரமாக அமைந்தன.

‘நாங்கள்தான் அந்த 99%’ என்பதும், #Occupy என்கிற ஹேஷ்டேக்கும் உலகம் முழுவதுமுள்ள சமூக ஊடகங்களின் வழியே மக்களை ஒன்றிணைத்தன. `இது முக்கியமான ஜனநாயக எழுச்சி’ என்று முக்கிய அறிஞர்கள் பாராட்டத் தொடங்கினார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரசபை இந்தப் போராட்டத்தை ஆதரித்து, தீர்மானம் நிறைவேற்றியது. பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான்ஃபிரான்சிஸ்கோ, சிகாகோ, மெம்பிஸ், பால்டிமோர், மின்னபோலிஸ், ஹிலோ, மெக்கல்லன் என ஆக்கிரமிப்புப் போராட்டம் தீயைப்போல் பரவியது. செப்டம்பரில் தொடங்கிய இயக்கம் ஒரே மாதத்தில் உலகின் 82 நாடுகளிலுள்ள 951 நகரங்களுக்குப் பரவியது.

‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்’ அதன் இணையதளத்தில் தங்களின் கோரிக்கைகளைத் தொகுக்கத் தொடங்கியது. `தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர் என்ற விகிதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும். நாடு முழுவதற்கும் ஒரே ஓர் அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் ஸ்ட்ரீட்டிலுள்ள பங்குச்சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்குக் காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடைவிதிக்க வேண்டும். கல்லூரிக் கல்விக் கட்டணங்களை அறவே நீக்க வேண்டும். கல்வி என்பது அடிப்படை உரிமை, கல்வி ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். நிரந்தர ஊக்கத்தொகை... வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச ஊக்கத்தொகைக்கு உறுதியளிக்க வேண்டும். குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், இயற்கையைக் கொள்ளை லாபத்துக்காகக் கண்மூடித்தனமாகச் சீரழிக்கக் கூடாது. இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டம் இயற்றுவது. அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்கு இயந்திரங்களை நீக்கிவிட்டு வாக்குச்சீட்டைக் கொண்டுவர வேண்டும். வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்துக் கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலக அளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அமெரிக்காவின் இந்த இயக்கம் தனது கோரிக்கைகளை அறிவித்தது.

பிரிட்டனில் அவர்கள் தங்களின் முழக்கத்தை ‘நாங்கள்தான் அந்த 48%’ என்று மாற்றிக்கொண்டார்கள். ஒவ்வொரு நாடும் அவர்களின் ஏழ்மையின் நிலைக்கு ஏற்ப முழக்கத்தை மாற்றிக்கொண்டார்கள். ஜெர்மனியில் அது `நாங்கள்தான் அந்த 87%’ என்று முழங்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், பொருளாதார அறிஞர் ஜெஃப் மேட்ரிக், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் கிரக்மேன் என்று உலகம் முழவதிலுமுள்ள மேதைகள், அறிஞர்கள் இந்தப் போராட்டத்தின் நியாயங்களை விளக்கி பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியதோடு, போராட்டத்திலும் பங்கேற்று உரையாற்றினார்கள்.

தனியார் நிறுவனங்கள் எவ்வாறு சட்ட விரோதமான முறையில் கடன் கொடுத்து ஏழை, எளிய மக்களின் வீடுகளைக் கைப்பற்றுகிறார்கள்... அதேநேரம் உலகின் பெரிய நிறுவனங்கள் எவ்வாறு மக்களின் வரிப்பணத்தில் அரசுகளிடமிருந்து வரிவிலக்கு, வரித் தள்ளுபடி பெறுகிறார்கள்... பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் எப்படிக் கணக்கிட முடியாத தொகைகளைச் சம்பளமாகப் பெறுகிறார்கள்... அதே நிறுவனங்களில் வேலை செய்பவர்களை எப்படி வஞ்சிக்கிறார்கள்... முக்கிய வேலைகளையெல்லாம் எப்படி மூன்றாம் உலக நாடுகளுக்கு அடிமாட்டுச் சம்பளத்தில் அவுட் சோர்ஸிங் செய்கிறார்கள் என்று பலரும் விரிவாக விளக்கத் தொடங்கினார்கள்.

அமெரிக்கப் பத்திரிகைகள் இந்தப் போராட்டத்தைக் கேவலப்படுத்தி செய்திகள் வெளியிடத் தொடங்கின. மெல்ல மெல்ல காவல்துறை ஆங்காங்கே இடைஞ்சல் ஏற்படுத்தத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். காவல்துறையினர் கூடாரங்களை இரவு நேரங்களில் அகற்றத் தொடங்கினார்கள். அங்கு கூடிய அனைவர் மீதும் வழக்குகள் போடத் தொடங்கினார்கள். இருப்பினும், பெரு நிறுவனங்கள் ‘பொருளாதார நடவடிக்கை’ எனும் பெயரில் நடத்தும் சூதாட்டங்களை அம்பலப்படுத்துவதில், இந்தப் போராட்டம் பெரும் வெற்றியைக் கண்டது.

இந்தியாவில் புது டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், இந்தோர், கொல்கத்தா, சண்டிகர், பெங்களூரு என ஆக்கிரமிப்புப் போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் பணக்காரர்கள் - ஏழைகள் பாகுபாடு என்பது நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் 10% பணக்காரர்களின் கையில்தான் நாட்டின் 57% சொத்துகள் உள்ளன. அதிலும் 1% பேர் வசம் நாட்டின் 22% சொத்துகள் உள்ளன என்பது எவ்வளவு மோசமான நிலை?

இப்படியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்த சமூகங்களிலெல்லாம் வன்முறையும், உள்நாட்டுக் கலவரங்களும், ஆயுதம் ஏந்திய போராட்டங்களுமே நடைபெற்றுள்ளன. ஒரு நாட்டில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டுமெனில், அங்கே மக்களிடையே சமத்துவம் அவசியம்.

இந்தியாவில் ஏழை, எளியவர்களின் நகைக்கடன், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்போது, “ஐயோ... போச்சே... நாடு திவாலாகிவிடாதா?” என்பவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பெரு நிறுவனங்களுக்கு லட்சம் கோடிகளில் கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, முனகுவதுகூட இல்லை. இந்தியப் பொதுத்துறை வங்கிகள், கடந்த எட்டு ஆண்டுகளில் அம்பானி, அதானி இருவருக்கும் கடன் தள்ளுபடி செய்துள்ள தொகையைத் தெரிந்துகொள்ளுங்கள்... இந்தப் போராட்டத்தின் நியாயம் உங்களுக்குப் புரியும்!

(தொடரும்)

******

போராளி

போராட்டங்களின் கதை - 5

உலகப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky)

1928-ல் பிறந்த நோம் சாம்ஸ்கி, இன்று உலகில் வாழும் அறிஞர்களில் முக்கியமானவர் என்று கருதப் படுகிறார். மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். உலக அரசியல் போக்குகளை உற்றுநோக்குபவர். அமெரிக்காவின் போர்கள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள், முதலாளித்துவம், சோஷலிசம் என உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் நிலை பற்றிய தனது கருத்துகளைக் கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருபவர். உலகில் மனிதத்தன்மை அருகி வருவதாகக் கவலைப்படும் சாம்ஸ்கி, தனது 93-வது வயதிலும் தொடர்ச்சியாகத் தனது விமர்சனங் களைப் பதிவுசெய்கிறார், எழுதுகிறார்.கோவிட் காலத்தில் தொடர்ச்சியாக இணையத்திலும் உரையாற்றினார். ‘ஆக்கிரமிப்பு இயக்கம் ஒரு ஜனநாயக எழுச்சி’ என்று பாராட்டிய நோம் சாம்ஸ்கி, `முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதில் தோல்வியடைந்துவிட்டது’ என்றார்!