மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 6

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

‘மனசாட்சியுள்ள அனைவரும் வாருங்கள்!’ - ‘நெவாடா பாலைவன அனுபவம்’ எனும் போர் எதிர்ப்பு இயக்கம்

மனிதகுல வரலாற்றில், 6 ஆகஸ்ட், 1945 என்பது மறக்க முடியாத ஒரு நாள். இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில், ஜப்பானுக்கு எதிராக அமெரிக்கா பெரும் தாக்குதல் தொடுத்த நாள் அது!

போர் விமானத்திலிருந்து ஒரு வெடிகுண்டு விழுகிறது. அதிலிருந்து பெரும் ஒளி வீச்சும், அதைத் தொடர்ந்து காளான்போல ஒரு தூசுப்படலமும் அனைவரின் கண்களுக்கும் தெரிகின்றன. மனிதர்கள், அஃறிணைகள், இயற்கை என எதுவும் மிஞ்சவில்லை. யாருக்கும் தப்பிக்க அவகாசமுமில்லை. மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த போர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு எங்கு திரும்பினாலும் பேரழிவின் ஓலம். மனிதர்களின் ஆடைகள் எரிந்து, தோல் உரிந்து, சதையெல்லாம் வெளிறித் தெரிய ஒரு நகரமே தீக்கு இரையானால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். குண்டுவீச்சின் மையப் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கானவர்கள் நொடிப்பொழுதில் பஸ்பமாகி காற்றில் மறைந்தார்கள் எனில், ஒட்டுமொத்தப் பேரழிவை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் மன்ஹாட்டன் செயல் திட்டத்தின் கீழ், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். அவர்களின் முதல் குண்டை அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் பரிசோதித்தார்கள். அதன் பிறகு, அவர்கள் தயாரித்த இரண்டு அணு குண்டுகள்தான் ஜப்பானின்மீது வீசப்பட்டன. `குட்டிப் பையன்’, `குண்டு மனிதன்’ என்பது அந்த இரு குண்டுகளின் பெயர்கள். ஹிரோஷிமாவில் இரண்டு லட்சம் பேரும், நாகாசாகியில் ஒரு லட்சம் பேரும் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். இரு நகரங்கள் முழுவதிலும் தீக்காயங்கள், கதிர்வீச்சு நோய்களுடன் மக்கள் சிகிச்சை பெற அலையாய் அலைந்தார்கள். இறந்தவர்கள் அனைவரும் போர் வீரர்கள் அல்ல. சாமானியர்கள், நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்கள்.

இந்தப் பேரழிவைச் சந்தித்த ஜப்பான், 1967-ல் உலக அமைதிவேண்டி ஒரு கொள்கைப் பிரகடனத்தை ஏற்படுத்தியது. ‘ஜப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது. ஜப்பான் அணு ஆயுதங்களைக் கைவசம்கூட வைத்திருக்காது. ஜப்பான் ஒருபோதும் யாருடைய அணு ஆயுதங்களுக்கும் தங்கள் மண்ணில் புகலிடம் வழங்காது’ என்று அறிவித்தது. ஒரு குளிர்சாதனப் பெட்டியைத் தயாரிக்க முற்பட்ட ஐன்ஸ்டீனின் ஆய்வில் உதித்த, ஒரு சிறிய கீற்றுதான் பின்னாள்களில் அணுகுண்டாக மாறியது. இருப்பினும் ஐன்ஸ்டீனுக்கு எவ்விதத் தகவலும் கொடுக்காமல், அவரது அனுமதி பெறாமல், ரகசியமாகவே இந்த அணு ஆயுதத் தயாரிப்புகள் நிகழ்ந்தன. `ஜெர்மானியர்கள் அணுகுண்டு கண்டுபிடிப்பதில் தோற்றுப்போவார்கள் என்று எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், நான் அமெரிக்க அதிபருக்கு இந்த யோசனையைச் சொல்லியிருக்க மாட்டேன்’ என்று ஐன்ஸ்டீன் பின்னாள்களில் வருந்தினார்.

1960-களில் தொடங்கி, உலகம் முழுவதும் அணு ஆயுதங்களுக்கு எதிரான குரல்கள், அமைதிக்கு ஆதரவான குரல்கள், போருக்கு எதிரான குரல்கள் சங்கமித்தன. இரண்டாம் உலகப்போரின் அழிவுகளிலிருந்து மீண்ட நாடுகள், `இனி போரே வேண்டாம்’ என்பதில் முன்னணியில் நின்றன. ‘மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று வேண்டாம்’ என்பதில் வரலாற்று அறிஞர்கள் முதல் சூழலியலாளர்கள் வரை ஒருமித்துக் குரல் கொடுத்தனர்.

போராட்டங்களின் கதை - 6

இந்தச் சூழலில், 1980-களில் அமெரிக்கா நெவாடா பரிசோதனைத் தளத்தில், தனது அணு ஆயுதப் பரிசோதனைகளை நிகழ்த்தியது. இன்று உலகின் அதிகபட்சமான ஆயுதச் சோதனைகள் இந்தப் பாலையில்தான் நடைபெறுகின்றன. இதைக் கடுமையாக எதிர்த்து, ‘நெவாடா பாலைவன அனுபவம்’ (Nevada Desert Experience) என்கிற ஓர் இயக்கம் உருவானது. அவர்கள் அணு ஆயுதங்கள், அணு ஆயுதப் பரிசோதனைகள், அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைகள், சூழல் பாதுகாப்பு என்கிற பல தளங்களில் வேலை செய்யத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து இந்தப் பாலைவனம் நோக்கி மக்கள் வரத் தொடங்கினார்கள். அவர்கள் இங்கு வந்துதான் முதன்முதலில் ஒரு பாலைவன அனுபவத்தைப் பெற்றார்கள். ‘ஒரு பாலைவனம் என்பது எவ்வளவு அழகானது... இயற்கையை உணர்வதும் அதனுடன் இயைந்து வாழ்வதும் எவ்வளவு அற்புதமான அனுபவம்...’ என உணர்ந்தார்கள். ‘இயற்கை நமக்கு அளித்த முக்கியத் திணைகளில் ஒன்றான இந்தப் பாலைவனத்தை நாம் ஏன் கதிர்வீச்சால் அழிக்க வேண்டும்... இங்குள்ள உயிரினங்கள் முதல் பியுட் / ஷோஷோன் பூர்வகுடி மக்கள் வரை எவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள்... இந்த பூர்வகுடிகளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நீரையும் ஏன் மாசுபடுத்த வேண்டும்?’ என்ற கேள்வியை முன்வைத்தார்கள்.

இங்கு வந்து சேர்ந்தவர்களுக்கெல்லாம் பாலைவனம் ஒரு புதுமையான அனுபவமாக இருந்ததால்தான் இந்த அமைப்பு, தன்னை ‘நெவாடா பாலைவன அனுபவம்’ என்று அழைத்தது. நெவாடா ஆற்று வடிநிலப் பகுதி, மொஜாவே பாலைவனம் என்று அந்த இடங்கள் தொடர்ச்சியான மக்களின் வருகையால் ஏறக்குறைய ஒரு சுற்றுலாத்தலம்போல உருமாறியது.

அவர்கள் அமெரிக்கா முழுவதிலும் 536 பெரும் போராட்டங்களை நடத்தி, மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதேநேரம் நெவாடா பரிசோதனைத் தளத்துக்கு அருகில் தொடர்ந்து முகாமிட்டுத் தங்கினார்கள். அந்த வளாகத்துக்குள் பேரழிவு ஆயுதங்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகின்றனவா, பூமிக்கு அடியில் ரகசியமாக ஏதேனும் பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகின்றனவா என்பதை அறிவியல் கருவிகளின் துணையுடன் கண்காணிக்கத் தொடங்கினார்கள். அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் எல்லாவிதமான மிரட்டல்களுக்கும் ஈடுகொடுத்து அடிபணியாமல் களத்தில் நின்றார்கள். அவர்களின் நெவாடா முகாம், நாளுக்கு நாள் இன்னும் கூடுதலான போராட்டக்காரர்களை வரவேற்ற வண்ணம் இருந்தது. இந்த வாயில் போராட்டங்களில் மட்டும் 37,488 பேர் கலந்துகொண்டனர். அதில் 15,740 பேர் வெவ்வேறு காலகட்டங்களில் கைதுசெய்யப்பட்டார்கள்.

நெவாடா போராட்டங்களில் அமெரிக்கப் பொதுச் சுகாதார அமைப்பும் இணைந்துகொண்டது. அணுப் பரிசோதனையால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து இவர்கள் விரிவான பிரசாரங்களை மேற்கொண்டார்கள். அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வாளர் எழுத்தாளர் கார்ல் சாகன் உள்ளிட்ட அமெரிக்காவின் பல பிரபல விஞ்ஞானிகள் இதில் பங்குகொண்டு கைதானார்கள். இந்தப் போராட்டங்கள் மிகத் தீவிரமான நிலையில், 1992-ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ஒரு தற்காலிகத் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அதைத் தொடர்ந்து, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்கள் பல நாடுகள் மத்தியில் கையெழுத்தாகின.

ஆப்கானிஸ்தான், சிரியா என உலகமெங்கும் அமெரிக்கா தனது போர்த் தளவாடங்களைப் பெரிய அளவில் மக்கள் மீதே பரிசோதனை செய்ததை ஒட்டி, இந்தப் போராட்டம் இன்னும் உக்கிரமானது. அமெரிக்காவின் வெவ்வேறு ராணுவத் தளவாட மையங்கள் நோக்கி இந்தப் போராட்டங்கள் பரவின. இந்தப் பாலைவனப் பகுதிகள், புனித நிலங்களாக அறிவிக்கப்பட்டு கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் இதை ஆன்மிக நிலம் என்று கருதி பெரும் எண்ணிக்கையில் அங்கு வந்து தங்களின் கூடுகைகளை, பிரார்த்தனைக் கூட்டங்களை நிகழ்த்தத் தொடங்கினார்கள். இன்றும் 40 ஆண்டுகளாக அவர்களின் கூட்டங்கள், கூடுகைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

உலகம் முழுவதும் அமெரிக்கா செய்துவரும் அட்டூழியங்களுக்கு, அவர்கள் மண்ணிலிருந்தே கொடுக்கப்படும் முக்கியமான பதிலடியாகவே இதை நான் பார்க்கிறேன். போர்களுக்கு எதிரான குரல்கள் அமெரிக்க மண்ணில் எப்போதுமே தன்னெழுச்சியாக இருந்துவந்துள்ளன. இராக், ஆப்கானிஸ்தான், யுகோஸ்லேவியா, தென்னாப்பிரிக்கா, செர்பியா, ஏமன், பாலஸ்தீனம் என்று தொடர்ந்து அமெரிக்காவின் போர்களுக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்கள். மிக வெளிப்படையாகவே ‘நாங்கள் எங்களின் அரசுடன் இல்லை. இந்தக் கொலை பாதகச் செயல்களில் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்கள் பெயரால் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களைக் கண்டு தலைகுனிகிறோம்’ என மக்கள், அமெரிக்க விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள் தொடர்ந்து தங்களின் கருத்தை உரக்கப் பதிவுசெய்துவருகின்றனர்.

‘மனசாட்சி உள்ள அனைவரும் வாருங்கள்... அணு ஆயுதங்களுக்கு எதிராகவும், இந்தப் பூமியைப் பேரழிவிலிருந்து காக்கவும் ஒன்றிணைவோம்!’ என்ற அவர்களது முழக்கம் மிகவும் அர்த்தபூர்வமானது; சத்தியமானது. ‘போர்க் கருவிகளையெல்லாம் வேளாண்மைக்

கான கலப்பைகளாக மாற்றுவோம்!’ என்கிற அவர்களின் முதல் முழக்கம், இன்றும் அதன் அர்த்தத்தைத் துளியும் இழக்கவில்லை!

(தொடரும்)

*****

போராட்டங்களின் கதை - 6

வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம்!

1964-ல் மெல்ல மெல்ல கல்லூரி வளாகங்களில் தொடங்கிய வியட்நாம் போர் எதிர்ப்பு, பெரும் இயக்கமாக அமெரிக்காவில் உருவெடுத்தது. மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். கல்லுரிகள், பல்கலைக் கழகங்களை முடக்கினார்கள். 1967-ல், அது National Mobilization Committee to End the War in Vietnam என்கிற வியட்நாம் போருக்கு எதிரான தேசிய இயக்க மாகவே வலுப்பெற்றது. எதிர்க் கலாசாரப் பாடல்கள், நாடகங்கள், இலக்கியச் செயல்பாடுகள் எனப் பல்வேறு வடிவங்களைப் போராட்டக்குழு கையாண்டது. ஒத்துழையாமை, அதிகார எதிர்ப்பு, அமைதி எனப் பல்வேறு மதிப்பீடுகளை அடிப்படையாகக்கொண்டு அந்த இயக்கம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றது. 1967-ல் மார்டின் லூதர் கிங் மினியசோட்டா பல்கலைக்கழகத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பு உரையை நிகழ்த்தினார். அமெரிக்காவின் உள்துறைச் செயலர் ஜான் கெரி, வியட்நாம் போரில் பங்கேற்ற ரான் கோவிக் உள்ளிட்ட பலர் இந்தப் போர் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்தனர். வியட்நாமில் தோல்வியைத் தழுவி நாடு திரும்பியபோது, அது ஒரு பெரும் கொண்டாட்டமாகவே அமெரிக்கா எங்கும் பார்க்கப்பட்டது!