மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 7

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

அங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே பள்ளிவாசலுக்குத்தான் தொழுகைக்குச் செல்ல வேண்டும். மாறிச் சென்றால் அது குற்றம்.

துனிசியாவில் தெருவோரமாகப் பழங்கள் விற்கும் ஓர் இளைஞன், தன் வாழ்நிலையை முற்றாக வெறுத்து, அங்குள்ள ஊராட்சி அலுவலகம் முன்பாக நின்று தன் அரசுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தீக்குளிக்கிறார்!

கடும் தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2010, டிசம்பர் 17 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகமது புவாசிசி என்ற அந்த இளைஞன் 2011, ஜனவரி 4 அன்று இறந்துபோகிறான். அன்றைய துனிசியாவின் ஜனாதிபதி அபிதின் பென் அலியின் சர்வாதிகார ஆட்சியில், மக்கள் வாழ முடியாத நிலையில் இருந்தனர். ஆனாலும், பெரும் எதிர்ப்புகள் இன்றி அமைதியாகவே இருந்தனர். அந்தச் சமயத்தில், அந்த இளைஞன் தீக்குளித்து இறந்த செய்தி துனிசியாவெங்கும் ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதுவரை மக்களின் மனங்களில் கனன்றுகொண்டிருந்த கோப நெருப்பு, ஒரு காட்டுத்தீபோல சடசடத்துப் பரவியது.

துனிசியாவின் பின்கதை!

பிரான்ஸின் காலனியாக இருந்த துனிசியா 1956-ல் விடுதலை பெற்றது. அதன் பிறகு, பல அதிபர்கள் அங்கே தங்களைத் தாங்களே ‘காலமுள்ள காலம் வரை அதிபராக’ நியமித்துக்கொண்டு தங்களின் மரணம் வரை எல்லா அட்டூழியங்களையும் செய்துவந்தனர். அந்த வரிசையில் 1987-ல், அபிதின் பென் அலி துனிசியாவின் அதிபரானார். ஏற்கெனவே மோசமாக இருந்த சூழல், இப்போது படுமோசமான நிலைக்குச் சென்றது. எதிர்க்கட்சிகளை இல்லாமல் ஆக்குவது, அவருக்கு எதிரான குரல்களே இல்லாத அளவுக்கு இரும்புக்கரம் கொண்டு அனைவரையும் ஒடுக்குவது எனப் படுவேகமாக அவர் களமிறங்கினார். பத்திரிகைகளை, ஊடகங்களை முற்றாக முடக்கினார். துனிசியாவில் எந்தச் செய்தியும் சர்வாதிகாரியின் தணிக்கைக்கு உட்பட்டே வெளிவர வேண்டும். துனிசியா முழுவதிலும் யாரும் கூட்டம் போட இயலாது. வீடுகளில்கூட பெரிய எண்ணிக்கையில் கூட இயலாது.

போராட்டங்களின் கதை - 7

அங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே பள்ளிவாசலுக்குத்தான் தொழுகைக்குச் செல்ல வேண்டும். மாறிச் சென்றால் அது குற்றம். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்போது இமாம்கள், அதிபரின் சாதனைகளைப் பற்றி மக்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும். அதிபரைப் புகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும். துனிசியா முழுவதிலும் லஞ்சம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் என ஒரே அவலம்தான். காவல்துறையும் ராணுவமும் கடும் அதிகாரங்களுடன் மக்களை வதைக்கும் கருவிகளாக மாறின. பசி, வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு என வாட்டி வதைக்கப்பட்டனர் மக்கள். பூமிக்குள் எரிமலை உறுமிக்கொண்டிருப்பதைப்போல, மக்களுக்குள் மனக்குமுறல்கள் உள்ளே நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்தன.

என்ன நடந்தது புவாசிசிக்கு?

அந்தச் சமயத்தில்தான், வேலையில்லாப் பட்டதாரியான முகமது புவாசிசி ஒரு சிறிய பழக்கடையைத் திறந்து தனது வாழ்க்கையை நடத்தத் திட்டமிடுகிறார். ஆனால், அவருக்கு அரசு அனுமதி வழங்க மறுத்தது. தினசரி ஒரு பெரிய தொகையை மாமூலாகக் கொடுத்தார். இருப்பினும் அவரது கடைக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை. ஒருநாள் அவரது கடையை அரசு அதிகாரிகள் காவல்துறையினரின் துணையுடன் அடித்து நொறுக்கினார்கள். தனது மொத்த மூலதனமும் துவம்சம் செய்யப்படுவதைத் தாங்கிக்கொள்ள இயலாத முகமது புவாசிசி, ஊராட்சி அலுவலகம் முன்பு தீக்குளித்து தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.

அந்தச் சம்பவம் குறித்த செய்தி, வாய்மொழியாக, சமூக ஊடகங்களில் காணொளியாகக் காட்டுத்தீயாகப் பரவியது. பொறுத்தது போதும் என ஓர் எரிமலை வெடித்ததுபோல துனிசியா முழுவதும் அரசுக்கு எதிரான கோபம் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் தலைநகரமான துனிசிலும், துனிசியாவின் பிற நகரங்களிலும் திரண்டனர். முதல் சுற்றில் காவல்துறையினர் அவர்களை மூர்க்கமாகத் தாக்கினார்கள். துப்பாக்கிச்சூடு நடத்திப் பலரைக் கொன்றார்கள். ஆனாலும், மக்கள் பின்வாங்கவில்லை. போராட்டத்தில் உறுதியாக இருந்தனர். அரசின் ஒடுக்குமுறைகளுக்கு, சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. அதிபர் உடனடியாக உள்துறை அமைச்சர்மீது பழியைப் போட்டு அவரைப் பதவியிலிருந்து நீக்கி, ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். துனிசிய அதிபரே தொலைக்காட்சியில் தோன்றி மக்களைச் சமாதானப்படுத்த முயன்றார். `விலைவாசி குறைக்கப்படும், இணையம் உள்ளிட்ட பல தளங்களில் தளர்வுகள் கொண்டுவரப்படும்’ என்று தொடங்கிய அவர், ‘2014-ம் ஆண்டுடன் நான் பதவியில் இருக்கப்போவதில்லை’ என்றுகூடச் சொல்லிப் பார்த்தார். ஆனால், இந்த முறை மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. மக்கள் தொடர்ந்து ஏமாறவும் மாட்டார்கள்தானே!?

போராட்டங்களின் கதை - 7

நாட்டைவிட்டு ஓடிய அதிபர்!

துனிசிய அரசின் தேசியத் தொலைக்காட்சி ‘அரசு கலைக்கப்பட்டுவிட்டது. ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும்’ என்று அறிவித்தது. அதற்கும் மக்கள் அசைந்து கொடுக்கவில்லை என்பதை அறிந்த அதிபர் அபிதின் பென் அலி, நாட்டைவிட்டு வெளியேறினார். 23 ஆண்டுகளாகச் சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர், சவுதி அரேபியாவில் அடைக்கலமானார். வெறுங்கையை வீசிக்கொண்டு அல்ல, அவர் தன்னுடன் 1,500 கிலோ தங்கத்தையும் எடுத்துச் சென்றார்.

அதிபர் அபிதின் பென் அலியுடன் கூட்டுவைத்து, சுகபோகமாக வாழ்ந்த அவரது கூட்டாளிகள் சும்மா இருப்பார்களா... அவர்கள் அடுத்தடுத்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். போர்க்கால அடிப்படையில் புதிய பிரதமரும், நாட்டின் பல்வேறு அரசியல் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் உள்ளடக்கிய ஒற்றுமை அரசு அமைக்கப்பட்டது. அதிரடியாக, `பொருளாதார ஸ்திரத்தன்மை உத்தரவாதப்படுத்தப்படும்’, `அரசியல் உரிமை நிலைநாட்டப்படும்’, `நெடுங்காலமாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்’, `ஊடகங்களின் மீதான தணிக்கை நீக்கப்படும்’ போன்ற அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. 2019 அக்டோபரில் இரண்டாவது முறையாகத் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவியேற்றது. புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.

ஒரு சர்வாதிகாரி நாட்டைவிட்டு ஓடியது, அரபுலகம் முழுவதும் வாழும் சாமானியர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. ஒரு பழக்கடைக்காரர் பற்றவைத்த நெருப்பில் எகிப்து, ஜோர்டன், அல்ஜீரியா, ஏமன், லிபியா என அரபுலகம் முழுவதிலும் நம்பிக்கை விதைக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகைகளில் அந்த நம்பிக்கை வினையாற்றியது.

முகமது புவாசிசி
முகமது புவாசிசி

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பேச்சுரிமையும், எழுத்துரிமையும், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் உரிமையும் இன்றியமையாதவை. இந்த உரிமைகளை எந்த மதமும் நமக்கு வழங்கவில்லை. ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மட்டுமே இந்த உரிமைகளை வழங்கி, இந்த பூமியில் வாழும் மனிதர்களை உரிமையுடையவர்களாகப் பார்க்கிறது. மற்ற எல்லா கருத்தாக்கங்களும் மனிதர்களை ஏதோவொருவிதத்தில் கட்டுப்படுத்தி, அவனது செயல்பாட்டுச் சுதந்திரத்தை ஒருவித கண்காணிப்புக்குள் வைக்கவே முற்படுகின்றன.

ஒரு மனிதன் இன்று எல்லாவிதச் சுரண்டல்களையும் எதிர்த்துப் பேசியாக வேண்டும். அவன் மனதில் நினைப்பதைப் பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம் எனப் பல்வேறு கலை வடிவங்களிலும், கட்டுப்பாடுகளின்றி அனைத்துத் தளங்களிலும் வெளிப்படுத்தும் சூழல் வேண்டும்.

உலகம் முழுவதுமே உரிமைகளுக்கான போராட்டம் என்பது, ஒரு சாதாரண குடிமகனிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது. எப்போதும் ஓர் அரசியல் தலைவனுக்காகவோ, ஒரு தேவதூதனுக்காகவோ நாம் காத்திருக்கக் கூடாது என்பதை துனிசிய இளைஞர் முகமது புவாசிசி நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறார். தீக்குளித்த புவாசிசி எவ்வளவு முக்கியமானவரோ, அதே அளவுக்கு அந்தத் தீயை மனதில் ஏந்தி அணையாமல் பார்த்துக்கொண்டு, வீதியில் இறங்கிப் போராடிய அனைத்து துனிசிய மக்களும் முக்கியமானவர்களே.

அபிதின் பென் அலி
அபிதின் பென் அலி

இந்தி எதிர்ப்பின்போது தீக்குளித்த சின்னச்சாமி, வியட்நாம் போரின்போது தீக்குளித்த புத்த பிக்குகள், இலங்கைத் தமிழர் இனப்படுகொலையின்போது தீக்குளித்த முத்துக்குமார், நீட் தேர்வை எதிர்த்துத் தற்கொலை செய்துகொண்ட அனிதா எனப் பல முகங்கள் என் கண்முன்னே வந்து செல்கின்றன. வரலாறு நெடுகிலும் பலர் தங்களை மாய்த்துக்கொண்டு இந்தச் சமூகத்துக்கும் வரலாற்றுக்கும் பல படிப்பினைகளை விட்டுச்சென்றிருக்கிறார்கள். ஆறறிவுள்ளவர்களுக்கு அது நிச்சயம் புரியும்.

துனிசியாவின் தேசியப் பூ, மல்லிகை. இந்தப் பூ வெளுப்பாகவும் அடுக்கடுக்காகவும் இருக்கிறது. எளிமை, அமைதி, தூய்மை, மகிழ்ச்சியின் குறியீடாக இந்தப் பூவைக் கருதுகிறார்கள் துனிசியர்கள். காதலின் குறியீடாகவும், தாய்மையின் சின்னமாகவும் இந்த மலர் பார்க்கப்படுகிறது. துனிசியாவுக்கு வரும் விருந்தினர்களுக்கு மல்லிகைப் பூச்செண்டும், மல்லிகைப் பூவினால் கட்டப்பட்ட மாலைகளும் அணிவிக்கப்படுகின்றன. துனிசியாவில் நடைபெற்ற இந்தப் புரட்சியை ‘மல்லிகைப் புரட்சி’ என்றே அழைக்கிறார்கள். மல்லிகைப் புரட்சி, ஜனநாயகம் இல்லாத பல நாடுகளில் வாழும் மக்களின் மனதை நம்பிக்கையின் வாசத்தால் நிறைத்தது!

(தொடரும்)