மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 8

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

பெர்லின் சுவர்: கோடுகள் இல்லா உலகம் வேண்டும்!

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது. அச்சு நாடுகள், நேச நாடுகள் எனும் இரு அணிகளாக நாடுகள் பிரிந்து, இந்தப் போரில் பங்கேற்றன. அச்சு நாடுகளாக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மறுபுறம் நேச நாடுகளாக பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஓரணியில் இணைந்தன. ஜெர்மனி மூர்க்கமாகப் போரிட்டது. போலந்து தொடங்கி மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றி ரஷ்ய எல்லை வரை சென்றது. இருப்பினும், இரண்டாம் உலகப் போரில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. இத்தாலி சரணடைந்தது, ஜெர்மனி தோற்றது, ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள்மீது அமெரிக்காவின் அணுகுண்டுவீச்சு பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கியது. இரண்டாம் உலகப் போர், இந்த உலகம் அதுவரை பார்த்திராதபடி நாடுகளின் எல்லைகளைப் புரட்டிப்போட்டது. இனிப் போர்களே வேண்டாம் என்கிற அளவுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது.

ஜெர்மனியை நான்கு துண்டுகளாகப் பிரித்து பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை பங்கிட்டுக்கொண்ட. பின்னர் கிழக்குப் பகுதி மட்டும் ரஷ்யா வசம் இருக்க, மீதி மூன்று பகுதிகளும் ஒரே தேசமாக உருமாற்றம் பெற்றது. ஜெர்மனி இரண்டு தேசங்களாக இருந்தது. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு கருத்தாக்கத்தைப் பிரதிபலித்தது. கிழக்குப் பகுதி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியின் கீழும், மேற்குப் பகுதி முதலாளித்துவத்தின் அரவணைப்பிலும் இருந்தன.

கிழக்கு ஜெர்மனி தனித்த ஒரு தேசத்துக்குரிய தன்மைகளின்றி, உலகின் மிகப்பெரும் சாம்ராஜ்ஜி யமாகத் திகழ்ந்த ரஷ்யாவின் தொங்கு சதை யாகவே இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் வேலை யில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க, மக்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கினார்கள். 1945 முதல் 1961 வரை மட்டும் 35 லட்சம் பேர் மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். 1961-ல் ஓர் அதிகாலை, மக்கள் விழித்துப் பார்க்கும்போது அவர்களின் நகரங்கள், வயல்வெளிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. பெர்லின் நகரத்தின் குறுக்கே மொத்தமாக கிழக்கு - மேற்கு ஜெர்மனியைப் பிரிக்கும்படி ஏதோ ஓர் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

போராட்டங்களின் கதை - 8

ரயில்பாதைகள் துண்டிக்கப்பட்டன. தொலைபேசி கேபிள்கள் அறுத்தெறியப்பட்டன. இரவோடு இரவாக முள்வேலிகள் முளைத்து, பெரும் எல்லைபோல் தொடுவானம் வரை நீண்டு சென்றது. பெர்லின் நகரத்தின் குறுக்கே கிழக்கு ஜெர்மனியால் நீண்ட பெரும் சுவர் கட்டப்பட்டது. இருப்பினும் மக்கள் சகஜமாக எல்லையைத் தாண்டி வருவதும் திரும்புவதுமாக இருந்தார்கள். சினிமா பார்க்க வருவார்கள், ஜவுளிக் கடைக்கு வருவார்கள், ஒரு பீர் குடிக்க வருவார்கள்... என இந்த எல்லையைப் பெரிதாக மக்கள் மதிக்கவில்லை. ஓய்வூதியம் பெறுவோர், குடும்பவிழாக்கள், தொழில் நிமித்த பயணங்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என இந்தச் சுவரை அனுமதி பெற்றுக் கடக்கவும் ஏற்பாடுகள் இருந்தது.

முள்வேலிக்கு பதில் 15 மீட்டர் உயரமான கான்கிரீட் சுவர்கள், மேம்படுத்தப்பட்ட கம்பி வேலிகள் என 145 கிலோமீட்டர் நீளத்துக்கு விதவிதமாக அடுக்குகள்... இருப்பினும், தொடர்ந்து மக்கள் இந்தச் சுவரைக் கடந்துவர பல வழிகளில் முயன்றனர். இரவு நேரம் இந்தச் சுவரில் ஏணிவைத்து மக்கள் தாண்டினார்கள். அருகிலிருக்கும் கட்டடங்களின் மூன்றாவது நான்காவது மாடியிலிருந்து குதித்தார்கள். அருகிலிருக்கும் வீடுகளுக்குள்ளிருந்து சுரங்கம் தோண்டி, மேற்கிலுள்ள வீடுகளின் வழியே வெளியே வந்தார்கள்.

முதலாளித்துவத்துக்கும் கம்யூனிசத்துக் குமானப் பனிப்போரின் சின்னமாக இந்தச் சுவர் பார்க்கப்பட்டது. கருத்தியல்களின் மோதல் வலுத்தபோது இந்தச் சுவரும் பலம்கொண்டதாக மாறியது. 1980-களில் மின்சாரவேலிகள் முளைத்தன. சுவருக்கு அருகில் 55,000 கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டன. பெர்லின் நகரத்தின் ஊடே மட்டும் 45 கி.மீ தூரத்துக்குத் தொழில்நுட்பத்துடன் கூடியதாகச் சுவர்கள் மாற்றியமைக்கப்பட்டன. அவற்றையும் தாண்டி, வெப்பக் காற்று பலூன்களிலும் எல்லை தாண்டும் முயற்சிகள் நடந்தன. இந்த மீறலை மக்கள் ஒரு போராட்டம் போலவே செய்துவந்தனர்.

1988-ல் ரஷ்யாவின் வீழ்ச்சி தொடங்கியது. ஜெர்மனியிலும் எல்லைகள் தொடர்பான நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. ஜெர்மனி ஒன்றிணையும் தருணத்துக்காகப் பல லட்சம் மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். 1989, நவம்பர் 9-ம் தேதி பனிப்போரின் சின்னமாகத் திகழ்ந்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. சுவர் தகர்ப்புக்கு முன்னர் சுவரின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் சுவரை இடிக்க ஆயுதங்களுடன் நின்றிருந்த காட்சியைத் தொலைக்காட்சிகளில் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது.

மேற்கு ஜெர்மனி நோக்கி வந்தவர்களின் பேட்டிகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. கிழக்கிலுள்ள அனைவருக்கும் வீடும், உணவும், உடையும், இலவச மருத்துவமும் இருந்தன. அங்கிருந்து வந்தவர்கள் தங்கள் பேட்டிகளில் ‘எங்களால் மெக்டொனால்ட்ஸ் பர்கர் சாப்பிட முடியவில்லை, நல்ல சாக்லேட் சாப்பிட முடியவில்லை, மேற்கில் பல வகையான பழங்கள் கிடைக்கின்றன’ என்றார்கள். சிலர், `முடிவெட்டச் சொல்கிறார்கள், இசை கேட்க முடியவில்லை’ என்றார்கள். கிழக்கு ஜெர்மனியின் நிலைமையை ஆராயும்போது புதிய தொழிற்சாலைகள் இல்லை என்பதால், அங்கே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. அதைவிட முக்கியம் கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பது. இதுவே மக்கள் அங்கிருந்து வெளியேற போதுமான காரணமாக அமைந்தது. ஜெர்மானியர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ளும் காட்சியை உலகமே கண்களில் நீர் கசியப் பார்த்தது. உலகின் எந்தப் பகுதியாகவும் இருக்கட்டும், நள்ளிரவில் திடீரென்று ஒரு கோடு போட்டு, ‘அந்தக் கோட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு தேசம் - அந்தப் பக்கம் ஒரு தேசம்’ என்று அறிவிப்பதுபோல் முட்டாள்தனமானது வேறு எதுவும் கிடையாது. பெர்லின் எனும் உலகின் பெரும் நகரத்தை அப்படித்தான் பிரித்தார்கள்.

சென்னையில் ஓர் அதிகாலையில், அண்ணா சாலைக்கு அந்தப் பக்கம் ஒரு நாடு, இந்தப் பக்கம் ஒரு நாடு என்று அறிவித்தால் எப்படியிருக்குமோ அதையே ஜெர்மானியர்கள் அனுபவித்தார்கள். காலம் காலமாக ஒன்றாக வாழ்ந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் நீங்கள் இரவோடு இரவாக எப்படிப் பிரிக்க முடியும்... உறவுகளைப் பிரிந்து அந்த மக்கள் எப்படி வாழ முடியும்.... இது எத்தனை மோசமான இழப்பு, அவஸ்தை, மன அழுத்தம்... எளியவர்களின் துன்பங்களை அரசு எனும் பெரும் இயந்திரத்தால் எப்போதும் உணர முடிந்ததே இல்லை.

தேசங்களுக்கிடையிலான எல்லைகள் மனிதர்கள் தங்களின் வசதிக்காகப் போட்டதுதானே. பறவைகளுக்கு, புழுக்களுக்கு, பூச்சிகளுக்கு, காற்றுக்கு எல்லைகள் இருக்கிறதா என்ன... டைனோசரின் காலடியில் சிக்கிய சிறிய காட்டுமலரைப்போல அரசுகளின் பெரிய முடிவுகளில் எளியவர்களின் வாழ்க்கை, வரலாறு நெடுகிலும் சிக்கிச் சின்னா பின்னமாகிறது.

கோடுகள், எல்லைகள் நம்மிடையே போட்டியை ஊக்குவிக்கின்றன. அண்டை நாடுகளும், அரசுகளும், பெரிய நிறுவனங்களும் ஒருவரைக் காட்டிலும் ஒருவர் பெரியவர் என்று அதிகாரம் செய்யவே முயலுகிறார்கள். இவர்களின் போட்டியில் மக்களை இன்று வெறும் சந்தையாகவே பார்க்கிறார்கள். மனிதர்களுக்கு செளகரியங்கள் செய்து தருகிறோம் என்கிற பெயரில், அசுர லாபத்துக்கு பூமியின் ஆயுளையே குறைத்துவருகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தேசிய எல்லைகள் ஒரு தேநீர்க் கடையின் வழியே, ஒரு பூங்காவின் வழியே, ஒரு சாலையின் வழியே செல்வதைப் பார்க்கும்போது மனதில் ஒரு பெரும் ஏக்கம் உருவாகும். இந்த பூமி பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் இந்தக் கோடுகள், எல்லைகள் இல்லா நாள் வர வேண்டும். கோடுகள் இல்லா உலகம் என்றால் என்ன என்று வரலாற்றிடம் ஒரு முறை கேட்டுப் பார்க்கிறேன்... மானுடத்தின் சாட்சியங்களான நம்பிக்கை, பரஸ்பரப் புரிதல், சகோதரத்துவம், சமத்துவம் என்று பதில் வருகிறது!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 8

எல்லைகளற்ற அன்புவாதம்!

எனது பாலஸ்தீனப் பயணத்தின்போது அம்ரித்சர் மற்றும் வாகா பார்டர் பகுதிகளில் சுற்றித் திரிந்தேன். கோதுமை வயல்களினூடே இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு வகுத்துச் சென்றது. இரு பக்கங்களிலும் வயல்களில் விவசாயக் கூலிகள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். நிச்சயம் அவர்கள் உறவினர்களாகவே இருக்க முடியும். எல்லையின் இரு புறங்களிலும் நின்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

நான் இந்தியாவின் வாகா எல்லை வழியே பாகிஸ் தானுக்குள் நுழைய, என் ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு எல்லையைக் கடக்க நடந்தேன். அப்போது, இரு நாடுகளுக்கிடையே இருக்கும் No Mans Land-ல் சிறிது நேரம் நின்றேன். பல லட்சம் உயிர்களை பலிவாங்கிய, ரத்தம் படிந்த அந்தக் கோடுகளின் மீது நின்றபோது, லட்சக்கணக்கானவர்களை ஏற்றிக்கொண்டு வந்த ரயில்கள் என் கண்முன்னே தெரிந்தன. மண்ட்டோவின் கதை மாந்தர்கள் என் முன் வந்து சென்றார்கள். அவரது கதைகளில் தென்படும் பதற்றம் என்னை தொற்றிக்கொண்டது. குஷ்வந்த் சிங்கின் `Train to Pakistan’, கமலா பாஷினின் `Borders and Boundaries: Women in India’s Partition’ எனப் பல புத்தகங்கள் நினைவில் வந்து அலைமோதின.

என் ஒரு கால் இந்தியாவிலும், ஒரு கால் பாகிஸ் தானிலுமாக நின்று ஒரு புகைப்படம் எடுத்தேன். இரு பக்க ராணுவ வீரர்களும் முரட்டு தேசியக் கண்களால் என்னைப் பார்த்தார்கள். நான் சிறிதாகப் புன்னகைத்தபடி, மண்ட்டோ தங்கியிருந்த லாகூர் ‘லட்சுமி மேன்ஷன்’ நோக்கிச் சென்றேன். நான் அம்ரித்சரில் குடித்த தேநீருக்கும், லாகூரில் குடித்த தேநீருக்கும் ருசியில் வித்தியாசம் இல்லை, அந்த மக்கள் காட்டிய அன்பிலும்!