மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 9

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

அமேசான் போன்ற நிறுவனத்தின் தினசரி லாபம் மில்லியன் டாலரில் குவிந்தது. அமேசான் ஒரு ட்ரில்லியன் டாலர் (77 லட்சம் கோடி ரூபாய்) கம்பெனியாக அசுர வேகத்தில் வளர்ந்தது.

சட்னிக்குப் பொரிகடலை வாங்க, வீட்டுக்கு அருகிலிருக்கும் கடைக்குச் செல்ல பெரும் போட்டியே நடக்கும். கடைக்காரர் தரும் மீதிக் காசில் தேன் மிட்டாய் வாங்கித் தின்ற நினைவுகள் அலைமோதுகின்றன. பொதுவாகவே நாம் நமது அருகிலுள்ள கடைகளில்தான் பலசரக்கு, ஜவுளி முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் வரை வாங்குவோம். உலகமயத்துக்குப் பிறகுதான், பெரும் அங்காடிகள் முளைத்தன. ஷாப்பிங் என்பது ஒரு தேவையின் அடிப்படையிலான நடவடிக்கையாக அல்லாமல், மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றப்பட்டது.

சூப்பர் மார்க்கெட் கலாசாரம் மெல்ல மெல்ல நம் உணர்வுகளைக் கவ்வியது. குடும்பத்துடன் சென்று ஒரு குளிரூட்டப்பட்ட பெரும் மாலில் நேரத்தைச் செலவிடுவது, பெரும் அங்காடிகளுக்கு ஜவுளி வாங்கச் செல்வது என நம்முடைய பொருள்கள் வாங்கும் பழக்கத்தில் பல மாற்றங்கள் வந்தன. நீங்கள் வசிக்கும் சிற்றூர், நகரம், மாநகரத்துக்கு ஏற்ப இந்த மாற்றத்தின் அளவு மட்டுமே வேறுபட்டது.

அலைபேசிகள் வந்தன. அதைத் தொடர்ந்து, பத்தாண்டுகளில் இணையம், அலைபேசிகளுடன் இணைக்கப்பட்டது. நம் கைகளிலிருந்த மொபைல் போனுக்குள் ஒவ்வொரு கருவியாக நுழைந்தது. கடிகாரம், அலாரம், டார்ச் லைட், புத்தகம், கம்ப்யூட்டர், திசைமானி, ரேடியோ, இசை கேட்கும் கருவிகள், தொலைக்காட்சி ரிமோட், புகைப்படக் கருவி, டைரி என நீண்டு சென்ற பட்டியலில் ஒருநாள் திடீரென பெரும் அங்காடியே உள்ளே நுழைந்தால் எப்படியிருக்கும். ஆம், ஆன்லைன் வர்த்தகம் எனும் சொல் அறிமுகமானபோது விந்தையாக இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அதற்கும் பழகினோம்.

நம் வங்கிக் கணக்குகள் தொலைபேசிக்குள் சென்று மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங் என்கிற சொற்கள் நம்முடன் புழங்கத் தொடங்கின. டிஜிட்டல் பேமென்ட்ஸ் என்கிற இணைய வங்கிப் பரிவர்த்தனைகள் சாத்தியமான பிறகு, இந்த ஆன்லைன் வர்த்தகம் பெரும் பாய்ச்சலெடுத்தது. வங்கிக் கணக்கிலுள்ள கையிருப்பை நீங்கள் செலவிடும்போதே கடன் அட்டைகள் வந்து குவிந்தன. பணம் இல்லாவிட்டாலும் பொருள்கள் வாங்கும் மனநிலை கட்டமைக்கப்பட்டது. ‘உள்ளங்கைக்குள் உலகம்’ என்கிற கவர்ச்சியான வாசகம் நம்மை ஒரு கணக்கு வழக்கில்லாத மாய உலகுக்குள் அழைத்துச் சென்றது.

போராட்டங்களின் கதை - 9

இணையத்திலேயே காய்கறி, பலசரக்கு முதல் உலகிலுள்ள எந்தப் பொருளையும் இனி வாங்கலாம் என்கிற காலம் வந்தது. அமேசான் என்கிற அமெரிக்க நிறுவனம், இந்த பாணி வர்த்தகத்தை உலகம் முழுவதும் சாத்தியமாக்கியது. பல நாடுகளில் போட்டியாளர்களே இல்லாத அளவுக்கு இவர்களின் வியாபார மேலாண்மை, களத்தில் இவர்களை பலப்படுத்தியது.

கொரோனா தொற்று பரவத் தொடங்கியதுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை அனைவரின் வீடுகளுக்கும் கொண்டுசேர்க்கும் பொறுப்பு இத்தகைய நிறுவனங்கள் வசம் சென்றது. அவர்களின் வாழ்நாள் கனவு நொடிப்பொழுதில் நனவானதுபோல் மொத்த உலகின் வர்த்தக நிலையங்களும் மூடிக்கிடக்க, ஒட்டுமொத்த உலகமும் ஆன்லைன் வர்த்தகம் நோக்கித் தள்ளப்பட்டது.

அமேசான் போன்ற நிறுவனத்தின் தினசரி லாபம் மில்லியன் டாலரில் குவிந்தது. அமேசான் ஒரு ட்ரில்லியன் டாலர் (77 லட்சம் கோடி ரூபாய்) கம்பெனியாக அசுர வேகத்தில் வளர்ந்தது. அதன் அதிபர் பெசோஸ் அவர்களின் தனிச்சொத்து மட்டும் 200 பில்லியன் டாலரைக் கடந்தது. அத்தனை லட்சம் கோடிகள் வந்து முதலாளியின் காலடியில் குவிந்துகொண்டிருந்த அதேநேரத்தில், அமேசானின் ஊழியர்கள் குறைந்த கூலியில் மனிதர்களாகக்கூட மதிக்கப்படாத நிலையில் உழைத்துக்கொண்டிருந்தார்கள். கடும் நோய்த் தொற்று, பாதுகாப்பின்மை, மனஉளைச்சல், பணிச்சுமை உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எதிர்கொண்டார்கள். கோவிட் காலத்தில் ஒருவருக்கும் வேலையில்லை என்கிற நிலையில் இவர்களுக்கு வேலை இருந்தது. ஆனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தது. ‘நாங்கள் ரோபோக்கள் அல்ல’ என்று ஊழியர்கள் குமுறினார்கள். ஐரோப்பாவில் மட்டும் அமேசான் நிறுவனத்தில் 600 முறை ஆம்புலன்ஸ் வேலை நேரத்தில் அழைக்கப்பட்டது. ஊழியர்கள் பலர் பணியிடத்தில் உடல்நலமின்றி மயங்கி விழுவதும், உடல் உபாதைகளுடன் அவசரகதியில் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதும் தினசரி நடந்தது.

இத்தனை நெருக்கடிகளுடன் வேலை செய்யும் அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள், சங்கம் வைத்து, தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை. தங்களின் உடல் உபாதைகள், பணிச்சுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய ஊழியர்கள் அனைவருமே பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று உலகம் முழுவதிலுமுள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2019 மார்ச் மாதம் முதலே, மெல்ல மெல்ல தொழிலாளர்களின் மனங்களில் கோபமும், போராட்ட எண்ணமும் ஒரு கங்குபோல் கனன்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளிலுள்ள ஊழியர்களின் நிலை குறித்து, தொழிலாளர் அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட்டன.

அமேசான் ஊழியர்களின் சமூக ஊடகப் பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு, தங்களின் நிலையை முகநூலில் எழுதிய பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அமேசான் தனது ஊழியர்களின் சமூக ஊடகக் கணக்குகளைக் கண்காணிக்க பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த முறையற்ற கண்காணிப்பு தொடர்பான ஆவணங்கள் பல ஊடகங்களில் வெளிவந்தன. ‘GeoSPatial Operating Console’ என்கிற தொழில்நுட்பம் மூலம் இந்தக் கண்காணிப்பு நடைபெறுகிறது என அறிக்கைகள் வெளிப்படையாகத் தெரிவித்தன. இது தொழிலாளர்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் தலையிடுவது என்று கடும் கண்டனங்கள் எழுந்தன.

‘நாங்கள் ரோபோக்கள் அல்ல’ என்கிற அமேசான் ஊழியர்களின் முழக்கம், நாடுகளைக் கடந்து கேட்கத் தொடங்கியது. அமேசானில் ‘அமேசான் பே’ என்கிற பணப் பரிவர்த்தனைச் செயலியின் பெயரை ஒத்து, `MAKE AMAZON PAY’ என்கிற வாசகம் அவர்களின் போராட்ட முழக்கமாகவும், பின்னர் அவர்களின் அமைப்பின் பெயராகவும் மாறியது.

அமெரிக்காவில், ‘கறுப்பு வெள்ளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு’தான் பெரிய பண்டிகைகள். நவம்பர் கடைசி வாரம் கறுப்பு வெள்ளியில் தொடங்கும் கொண்டாட்ட மனநிலை, ஜனவரி முதல் வாரம் வரை பெரும் விழாக்கோலமாக இருக்கும். நம்மூர் தீபாவளி போல இந்தப் பண்டிகைக் காலம்தான் அமெரிக்காவில் பெரும் வர்த்தகத்தின் காலம். 2021 நவம்பர் மாதம், கறுப்பு வெள்ளி என்கிற வருடத்தின் பெரும் வர்த்தகத் திருவிழா தொடங்கும் நாளில், 25 நாடுகளிலுள்ள அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு அமேசான் நிறுவனத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள அவர்களின் வாடிக்கையாளர் களையும் உலுக்கியது. அமேசானின் கிட்டங்கி ஊழியர்கள், லாரி ஓட்டுநர்கள், விநியோகிப்பவர்கள் என அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வர்த்தகக் காலத்தில், வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருள்களை, பரிசுகளை இந்த நிறுவனத்தை நம்பி வாங்கலாமா... வாங்கினால் வீடு வந்து சேருமா என்று வாடிக்கையாளர்கள் யோசித்தனர்.

உலகின் ஆகப்பெரிய வர்த்தக நிறுவனத்துக்கு, அதன் 16 லட்சம் ஊழியர்கள் சவால்விட்டார்கள். இந்தப் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்க செனட்டில் முக்கியக் குரல்கள் எழுந்தன. தொழிலாளர் சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசின் ஒப்பந்தங்களை வழங்கக் கூடாது என்ற பேச்சுகள் அதில் முக்கியமானவை. அமேசான் தொழிலாளர் சங்கத் தலைவர் கிறிஸ்டியன் ஸ்மால்ஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்துப் பேசினார். வேக வேகமாக ‘நாங்கள் ஊழியர்கள் கேட்கும் அனைத்தையும் செய்கிறோம்’ என்று அமேசான் நிறுவனம் வாக்குறுதிகள் அளித்தது.

நம் ஊரிலும் தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, போனஸ் கேட்டு மில் தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தங்கள் நினைவுக்கு வருகின்றன. நம் சமூகத்தில் சட்டபூர்வமான, நியாயமான விஷயங்களைக்கூட போராடியே பெறவேண்டிய இந்த நிலை பெரும் சாபக்கேடு. ‘நாம் ஒரு நாகரிகச் சமூகமாக மாறத் துடிக்கும் நேரத்தில், ஏன் முதலாளிகள் காலச்சக்கரத்தைப் பின்னுக்குத் தள்ளி, ஓர் அடிமைச் சமூகத்தை நிறுவ முயலுகிறார்கள்?’ என்கிற கேள்வி எழவே செய்கிறது!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 9

அமேசான் முதலாளியின் விண்வெளிச் சுற்றுலா!

அமேசான் நிறுவனத்தின் முதலாளி ஜெஃப் பெசோஸ், சமீபத்தில் விண்வெளிக்குச் சுற்றுலா சென்றுவந்தார். தன் பயணத்துக்கு, நிமிடத்துக்கு ரூ.20 கோடி செலவுசெய்து, 11 நிமிடங்கள் பூமிக்கு வெளியே சென்று விண்வெளியை ரசித்தார். அவர் செலவிட்ட ரூ.220 கோடி ரூபாயை வைத்து உலகில் பல லட்சம் பேரை வறுமையிலிருந்து மீட்டிருக்கலாம். நைஜீரியா, காங்கோ, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை அளித்திருக்கலாம். விண்வெளிக்குச் செல்வது அவரது விருப்பம். ஆனால், அமேசான் நிறுவன ஊழியர்களின் துயரைத் துடைக்க அதைச் செலவிட்டிருக்கலாம். கோவிட் காலத்தில் உயிர்நீத்த அமேசான் ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியளித்திருக்கலாம். இதைச் செய்வதன் மூலம் ஊழியர்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கலாம்!