
#Lifestyle
கொரோனா அனைவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. பாதிப்புகளும் இழப்புகளும் ஒருபக்கம் இருந்தாலும், மனிதநேயம் தொடங்கி, குடும்பத்தில் பெண்களைப் புரிந்துகொண்டது வரை எத்தனையோ பாசிட்டிவ் மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அப்படியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் சிலர்...

ஆணுக்கு அழகு, வேலைகளைப் பகிர்ந்துகிறது! - வெங்கட் - சின்னத்திரை பிரபலம்
“நான் சீரியலில் எப்பவும் பிஸி. என் மனைவி அஜந்தா ஒரு போட்டோகிராபர். போட்டோ ஷூட் இருக்கும் நாளில்கூட டென்ஷன் ஆகாமல், கோபப்படாமல் நான் போட்டுக்கிற டிரஸ் தொடங்கி எனக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செஞ்சுட்டு அவங்க வேலையைப் பார்க்கப் போவாங்க. அதனால் அவங்க படும் சிரமங்கள் எதுவும் பெரிய அளவில் எனக்குத் தெரிஞ்சது இல்ல. குடும்பத்தையும் குழந்தையையும் ரொம்ப அழகா பார்த்துக்கிறாங்கனு எப்போதும் அவங்க மேல ஒரு மதிப்பு இருந்துச்சு. எனக்கு ஷூட் இல்லாத நாள்களில் நான் பாப்பாகூட ரொம்ப ஜாலியா இருப்பேன். ஆனா, லாக்டெளனில் அதையே தினமும் எதிர்கொள்ளும்போதுதான், குழந்தையைப் பார்த்துக்கிறதுல உள்ள கஷ்டம் புரிஞ்சுது. வீட்டு வேலை, கரியர், குழந்தைனு எல்லாத்தையும் முகம் சுளிக்காம பொறுமையா செய்யும் அஜந்தாவை ஆச்சர்யமா பார்த்தேன். அதிலிருந்து, என்னால் முடிஞ்ச சின்னச் சின்ன வேலைகளைப் பண்றேன். ஷூட் இல்லாத நாளில் அவங்களோட எல்லா வேலைகளையும் ஷேர் பண்ணிக்கிறேன். சம்பாதிக்கிறது மட்டுமல்ல, பொறுப்புகளை ஷேர் பண்றதும் ஆணுக்கு அழகு. அதை லாக்டெளன்தான் புரிய வெச்சுருக்கு. அந்தத் தெளிவு எங்க காதலை இன்னும் அதிகரிச்சிருக்கு.”

சேமிப்பு முக்கியம் பாஸ்! - பிரியங்கா சங்கர் - ரோபோ சங்கரின் மனைவி
“எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை வேலைகளைப் பகிர்ந்து செய்யுறது, குழந்தைகளைப் பார்த்துக்கிறதுனு எல்லாத்திலும் ரெண்டு பேரின் பங்களிப்பும் எப்போதும் இருக்கும். ஈகோ பிரச்னைகள் வந்ததே இல்ல. ஆனால், கரியரில் இப்போ அவர் பிஸியாக இருப்பதால் எங்ககூட செலவிடும் நேரம் குறைஞ்ச உணர்வு இருந்துச்சு. லாக்டெளன் அதையும் சரி பண்ணிருச்சு. உண்மையைச் சொல்லணும்னா எதிர்காலத்துக்கான பொருளாதார திட்டமிடலும், தெளிவும் இல்லாம இன்னிக்கு சம்பாதிக்குறது இன்றைய தேவைக்கானதுனுதான் வாழ்க்கை நடத்திட்டு இருந்தோம். ஆனா, கொரோனா லாக்டெளன் சேமிப்பு, குழந்தைகளின் தேவைகள் பத்தின யோசனைகளை மனசுக்குள் விதைச்சுருக்கு. சம்பாதிக்கிறதை சேமிப்புக்கும் ஒதுக்குனாதான், எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்க முடியும்னு உணர்ந்து அதற்கேற்ற பிளானிங்கை தொடங்கியிருக்கோம்.”

மருமகள் மேல மரியாதை கூடியிருக்கு! - ரத்தினம் - இல்லத்தரசி, சென்னை
“என் மருமகள் வேலைக்குச் செல்லும் பெண். தினமும் லேட்டா எந்திரிக்கிறா, சமையல் பண்ண லேட் ஆகுது, குழந்தைங்க கூட நேரம் செலவிடுறது கம்மியா இருக்கு. டெய்லி கலர் கலரா டிரஸ் போட்டு, மேக்கப் பண்ணி, ஆபீஸ் போறாள்னுதான் இத்தனை நாள் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, லாக்டெளன் நேரத்தில் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தப்போதான், அவளுக்கு ஆபீஸிலிருந்து எத்தனை வேலைகள் தரப்படுது, எவ்வளவு
மன அழுத்தம் ஏற்படுதுன்னு கண்கூடா பார்த்தேன். நாலு பேர் கூட சேர்ந்து அலுவலக வேலை செய்யுறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சது. வொர்க் ஃப்ரம் ஹோமில் அவளுக்குக் கிடைச்ச சில மணி நேர ஓய்விலும், எங்களுக்காக ஏதாவது புதுசா சமைச்சுக் கொடுத்து சந்தோஷப்படுத்தினாள். குடும்பத்தை அழகா மேனேஜ் பண்ணா... மருமகளை இத்தனை நாள் சரியா புரிஞ்சுக்காம விட்டோமேனு தோணுச்சு. அதுக்கு அப்புறம் அவ மேல பெரிய மரியாதையே வந்துருச்சு. இப்பல்லாம் ஆபீஸ்ல இருந்து வந்து அவ சமைக்கட்டும்னு நான் காத்திருக்கிறது இல்லை. அவ வந்து செய்யட்டும்னு இத்தனை நாளா விட்டு வெச்சிருந்த வேலைகளையும் நானே பண்ணி முடிச்சுடுறேன்.”

அம்மாவா என் அம்மாவைப் புரிஞ்சுகிட்டேன்! - அனிதா - வொர்க்கிங் வுமன், சென்னை
“என் குழந்தையை என் அம்மாகிட்ட விட்டுட்டுதான் வேலைக்குப் போவேன். நான் வேலைவிட்டு வரும்போது சில நாளில் என் குழந்தை அழுக்கான டிரஸ் போட்டு, வியர்வை ஒழுக முகம்கூட கழுவாமல் இருப்பா. குழந்தை சாப்பிட மாட்டேங்குறா, சேட்டை பண்றானு அம்மாகிட்ட இருந்து நிறைய புகார்கள் வரும். அதைக் கேட்கும்போது, வீட்டுல ஜாலியா டிவி பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, குழந்தைக்காக இதுகூட பண்ணமாட்டேங்குறாங்களேனு நினைப்பேன். அந்த எண்ணம் என் அம்மா மேல கோபமாக வும் வெளிப்பட்டிருக்கு. என் கணவர்கிட்டயும் சொல்லிப் புலம்பியிருக்கேன்.
லாக்டெளன் அறிவிச்ச ஆரம்பத்துல என் குழந்தையை நான் பார்த்துக்கப் போறேன்னு ரொம்பவே சந்தோஷப்பட்டேன். லாக்டெளனில் அவளுக்காக விதவிதமா சமைக்கிறது, ஈவ்னிங் விளையாடுறதுனு ஆரம்பத்துல சில நாள்கள் நல்லாதான் இருந்துச்சு. ஆனா அதுவே தொடரும்போது, குழந்தையைச் சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுது. நான் குழந்தை கூடவே இருந்தாலும், விளையாடும்போது அவ கீழே விழுவதையோ, அடிபடுவதையோ தடுக்க முடியல. காலை சாப்பாட்டை நல்லா சாப்பிடும் குழந்தை, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு, மதிய சாப்பாடு சாப்பிட அடம் பிடிக்குறதையும் உணர்ந்தேன். அப்புறம்தான் அம்மா மேல எனக்கு இருந்த மனக்குறை நீங்குச்சு. இப்பவும் கோபப்படுறேன். ஆனா, அம்மாகிட்ட இல்ல, பாட்டியைத் தொல்லை பண்ணாதேன்னு குழந்தைகிட்ட...’’

வீட்டுவேலை பார்க்குறது சாதாரணமல்ல! - மோகனலட்சுமி - பிசினஸ் வுமன், சென்னை
“கடந்த ஆறு வருஷமா வீட்டு வேலைகளைச் செய்ய, ஒரு அக்காவை வேலைக்கு வெச்சிருந்தோம். சம்பளம் அதிகமா கேட்குறாங்க, சரியான நேரத்துக்கு வர்றது இல்ல. அடிக்கடி லீவ் போடுறாங்க, முன்பணம் கேட்குறாங்க, வேலைகளைச் சரியான நேரத்துக்கு முடிக்க மாட்டேங்குறாங்கனு நிறைய அதிருப்தி அவங்க மேல இருந்துச்சு. கொரோனா நேரத்துல நான் கர்ப்பமா இருந்தேன். அதனால் பாதுகாப்பு கருதி, வேலை செய்யும் அக்காவை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டோம். வீட்டு வேலைகள் எல்லாத்தையும் நானே தான் பார்த்துகிட்டேன். வீட்டிலேயே இருந்ததால கிச்சன் வேலைகளும் அதிகமா இருந்துச்சு. பாத்திரம் கழுவுறதையும், வீடு துடைக்கிறதையும் ஈஸினு சொல்றோம். ஆனா, அதுக்கான உடல் உழைப்பு அதிகம். ஒரு வீட்டுக்கான வேலையே இவ்வளவு சிரமம்னா, ரெண்டு, மூணு வீடுகள்ல தன்னுடைய குடும்பத்தின் வறுமைக்காக வேலை செய்யுற, அந்த அக்காவின் நிலையை யோசிச்சுப் பார்த்தேன். அப்புறம் அந்த அக்காவுக்கு லாக்டெளன் நேரத்துல எங்களால முடிஞ்ச உதவிகளைப் பண்ணோம். இப்படியான மனிதாபிமான உணர்வைத்தான் லாக்டெளன் எனக்குள் விதைச்சது.''