
பத்து ஆண்டுகளுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியில் இருந்ததுபோல மின்வெட்டு பிரச்னை இப்போது இல்லை. சிலர் வேண்டுமென்றே இதை ஊதி, பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி சிறிது நேரம் மின்தடை ஏற்படுகிறது. புகார் அளித்தால், வந்து சரிசெய்கிறார்கள். ஆனாலும், மின்வெட்டு தொடர்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு தி.மு.க ஆட்சியில் பூதாகரமாகத் தலைதூக்கிய மின்வெட்டு பிரச்னை, தற்போது மீண்டும் மெதுவாகத் தலைதூக்குவது தற்செயலா, திட்டமிடப்பட்டதா என்பதுதான் பலரும் எதிர்நோக்கும் கேள்வி.
2006-2011 தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகாரபூர்வமாகவே அமலில் இருந்தது. சென்னையில் இரண்டு மணி நேரமும், பிற மாவட்டங்களில் பல மணி நேரமும் மின்வெட்டு பாடாகப்படுத்தியது. மக்கள் கடும் அதிருப்தியடைந்து, 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியைச் சந்திப்பதற்கு மின்வெட்டும் ஒரு காரணமாக அமைந்தது. இப்போது தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டு மெதுவாகத் தலைதூக்குகிறது. நாளொன்றுக்கு நான்கைந்து முறை பகலிலும் இரவிலும் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள்வரை மின்வெட்டு ஏற்படுகிறது.

மின்வெட்டு பிரச்னை குறித்து மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் சிலரிடம் பேசினோம். “மத்திய அரசு தொகுப்பு மற்றும் மாநில அரசின் உற்பத்தி என தமிழகத்துக்கு ஒரு நாளைய மொத்த நிறுவுத்திறன் 31,905.87 மெகாவாட். பழுது ஏற்படாமல் இருக்க மின்நிலையங்களின் சில யூனிட்களை பேக்-அப் வைத்துக்கொள்வது உள்ளிட்ட சில தொழில்நுட்பக் காரணங்களால் நமக்கு கிடைப்பது 15,000 மெகாவாட் மட்டுமே. தமிழகத்துக்கு, சாதாரண நாள்களில் ஒரு நாளைக்கு 16,500 மெகாவாட்டும், கோடைக்காலங்களில் 17,500 முதல் 18,000 மெகாவாட்டும் தேவை. அதன்படி நமது பற்றாக்குறை 1,500 முதல் 2,500 மெகாவாட். இதை நிவர்த்தி செய்யவே 11 தனியார் நிறுவனங்களிடமிருந்து 3,230 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் பணம் கொடுத்து வாங்குகிறது. இப்படி தனியாரிடம் வாங்குவதால் மட்டுமே மின்வாரியத்துக்கு 30 சதவிகிதம் நஷ்டம் ஏற்படுகிறது.
தற்போதைய பிரச்னைக்கு வருவோம். பத்து ஆண்டுகளுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியில் இருந்ததுபோல மின்வெட்டு பிரச்னை இப்போது இல்லை. சிலர் வேண்டுமென்றே இதை ஊதி, பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள். கடந்த காலங்களில் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க ‘மெயின்டனென்ஸ்’ என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியா சப்-ஸ்டேஷனை ஷட்-டௌன் செய்வோம். அப்போது குறிப்பிட்ட ஏரியாக்களில் காலை 9 மணி முதல் மாலை 5 அல்லது 6 மணி வரை அதிகாரபூர்வ மின்வெட்டு இருக்கும். அது போன்ற முழுநாள் ஷட்-டவுனும் தற்போது அமலில் இல்லை.
ஆனாலும், கடந்த சில வாரங்களாக மின்வெட்டு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் டிரான்ஸ்ஃ பார்மர்கள்தான். இப்போது உபயோகத்திலிருக்கும் டிரான்ஸ்ஃபார்மர்கள் அனைத்தும் மிகவும் பழையவை. அவற்றைப் பராமரிக்க போதிய அளவில் ஆட்களுமில்லை; நவீன மின் சாதனங்களும் இல்லை. அதுவும் கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், டிரான்ஸ்ஃபார்களில் வெப்பம் அதிகரித்து வெடிப்பு ஏற்படுகிறது. கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் அந்த ஏரியாவில் முழுமையாக மின்சாரத்தை நிறுத்தி விட்டு, டிரான்ஸ்ஃபார்மரை சரிசெய்த பிறகு மின் இணைப்பு வழங்குவதால் மின்வெட்டு ஏற்படுகிறது. தவிர, கோடைக்காலத்தில் நமது மின்சாரத் தேவை கூடுதல் என்பதாலும், அதைத் தாங்கக்கூடிய திறன் டிரான்ஸ்ஃபார்மர் களுக்கு இல்லை. அதனாலும் மின்தடை ஏற்படுகிறது” என்றார்கள் விரிவாக.
மின்சார வாரிய உயரதிகாரி ஒருவர் நம்மிடம், “மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்குக் காரணமே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2013-ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுடன் போடப்பட்ட மின்சார கொள்முதல் ஒப்பந்தம்தான். இந்த ஒப்பந்தம் 2028-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். மின் கொள்முதலில் மூன்று வகைகள் உள்ளன. குறுகியகால கொள்முதல், மத்தியகால கொள்முதல், நீண்டகால கொள்முதல். குறுகியகால கொள்முதல் என்பது திடீர் தேவைக்கேற்ப மார்க்கெட் விலை கொடுத்து வாங்குவது. உடனடித் தேவை என்பதால் இது விலை அதிகம். ஒரு யூனிட் விலை 4 ரூபாய் 40 பைசா. மத்தியகால கொள்முதல் இங்கு நடைமுறையில் இல்லை. நீண்டகால கொள்முதல் என்பது குறைந்தது 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள். விலை, குறுகியகால கொள்முதலைவிட குறைவுதான். ஒரு யூனிட் 3 ரூபாய் 50 பைசாவில் பேசி முடிக்கலாம்.

ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீண்டகால கொள்முதல் விலையே ஒரு யூனிட் 4 ரூபாய் 91 பைசாவுக்கு நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் 41 பைசா நஷ்டம் ஏற்பட்டுவருகிறது. சத்தீஸ்கரைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒரு நிறுவனம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஆகியவைதான் தமிழக அரசுக்கு மின்சாரத்தை இப்படி அதிக விலைக்கு விற்றுவருகிறார்கள். இப்படி அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதால்தான் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. நஷ்டத்தில் இயங்குவதால்தான், டிரான்ஸ்ஃபார்மர் உட்பட மின் சாதனங்களைப் புதியதாக வாங்க முடியவில்லை. நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பராமரிப்பு பணிகளைச் செய்ய முடியவில்லை. கோடைக்காலத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டுக்கு இதுவும் ஒரு காரணம்.
ஆந்திராவில் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு தனியார் நிறுவனங்களிடம் போட்ட ஒப்பந்தத்தில் அதிக விலை நிர்ணயித்திருப்பதை அறிந்த தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்தத் தனியார் நிறுவனங்களை நேரில் அழைத்துப் பேசி மின்சார கொள்முதல் விலையைக் குறைத்து மறு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். அதன்படி அங்கு ஒரு யூனிட் சராசரியாக 2 ரூபாய் 43 பைசா முதல் 3 ரூபாய் 93 பைசா வரை கொள்முதல் செய்யப்படு கிறது. தற்போதைய தி.மு.க அரசும், ஆந்திரா மாடலில் ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி விலையைக் குறைக்கப்போவதாக சிலர் கிளப்பிவிடவே, அச்சம்கொண்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு மின் சப்ளையைக் குறைத்து, போலியான டிமாண்டை உருவாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன” என்றார்.
மின்வெட்டு பிரச்னைக்கு காரணம் என்ன என்று மின்சாரத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானியிடம் பேசினோம். “சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய ஆறு மாதங்களில் பராமரிப்பு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. மின்வெட்டுப் பிரச்னைக்கு இதுவே முக்கியமான காரணம். தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ததால், மின்வெட்டு ஏற்பட்டது. பிரச்னைகளைச் சரிசெய்ய சென்னையில் கன்ட்ரோல் சென்டர் தொடங்கி யிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களையும் இங்கிருந்தே கவனித்துவருகிறோம். அதிகபட்சம் ஒரு வாரத்தில் பிரச்னையைச் சரிசெய்துவிடுவோம். மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
மக்களுக்கு ஷாக் கொடுக்காமல் இருந்தால் சரிதான்!