அலசல்
Published:Updated:

கஞ்சித்தொட்டி திறக்குற நிலைமை வந்துரும்போல... புழுங்கும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள்!

விசைத்தறி
பிரீமியம் ஸ்டோரி
News
விசைத்தறி

கரூர் நிலவரம்...

வீட்டு உபயோக துணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்த கரூரில், தற்போது தறிக்கூடங்கள் பலவும் ஆள் அரவமின்றி மூடிக்கிடக்கின்றன!

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருப்பூர், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த கந்தசாமி, இந்த நிலை குறித்துப் பேசியபோது, “முன்பெல்லாம் வருடத்துக்கு ஒரு முறை நூல் விலையேற்றம் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக மாதம்தோறும் இரண்டு மூன்று முறை நூல் விலையை உயர்த்துகிறது மத்திய அரசு. கடந்த வருடம் ஜூன் மாதம் வரை ஒரு கண்டி (350 கிலோ) நூல் விலை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை இருந்தது. ஆனால் இப்போது ஒரு கண்டி ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது. நூல் விலையேற்றம் காரணமாக நாங்கள் உற்பத்தி செய்யும் துணிகளின் விலையைக் கூட்ட வேண்டியிருக்கிறது. அதனால் வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்துவிட்டன. கரூரில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலை நம்பியிருந்த எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் தவிக்கிறோம். ஏற்கெனவே வாங்கிய கடன்கள் கழுத்தை நெரிப்பதால் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது” என்கிறார் சோகத்துடன்.

ஆர்.காந்தி
ஆர்.காந்தி

ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன்பாபு, ‘‘கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக துணிகளுக்கு உலகம் முழுவதும் 50 நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. நூல் விலையேற்றம் காரணமாக வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்துவிட்டதால், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறிய அளவில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது” என்றார் படபடப்பாக.

கஞ்சித்தொட்டி திறக்குற நிலைமை வந்துரும்போல... புழுங்கும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள்!

இது குறித்து, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது, “ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர்ச்சூழல், உலகளாவிய பொருளாதாரப் பிரச்னை போன்றவையும் கரூர் டெக்ஸ்டைல்ஸ் தொழில் பாதிப்புக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி, மத்திய அரசிடம்தான் இருக்கிறது. அதேநேரத்தில் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், நூல் விலையேற்றத்தைக் குறைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது” என்றார்.

கந்தசாமி, ஸ்டீபன்பாபு
கந்தசாமி, ஸ்டீபன்பாபு

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டியது மத்திய அரசின் கடமை; அதற்காக, தமிழ்நாடு அரசும் அழுத்தமாகக் குரல் எழுப்பவேண்டியது அவசியம்!