டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது என்டிடிவி எனும் செய்தி நிறுவனம். கடந்த 1984-ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் பிரனாய் ராய், அவரின் மனைவியும், பத்திரிகையாளருமான ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், என்டிடிவி நிறுவனர்களான பிரனாய் ராய் , ராதிகா ராய் வசம் அந்த நிறுவனத்தின் 61.45 சதவிகிதப் பங்குகள் இருந்தன. குறிப்பாக, அவர்களின் ஆர்.ஆர்.பி.ஆர் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (RRPR) நிறுவனத்திடம் 29 சதவிகிதப் பங்குகள் இருந்தன.

அந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்மென்ட் நிறுவனத்திடம் மறைமுகத் தொடர்புடையதாகச் சொல்லப்படும் `விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட்(VCPL) நிறுவனத்திடமிருந்து சுமார் 403.85 கோடி ரூபாயை ராய் தம்பதிரின் RRPR நிறுவனம் கடனாகப் பெற்றது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி `விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை, அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் (AMG Media Networks Limited) நிறுவனம் முழுவதுமாகக் கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து, அதானி வசமான VCPL நிறுவனத்தின் ஒப்பந்தப்படி என்டிடிவி-யில் 29 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் RRPR நிறுவனத்தின் பங்குகளை தன்வசப்படுத்திக்கொண்டது. இதனால், என்டிடிவி ஊடகத்தின் மூன்றில் ஒரு பங்கு உரிமையை (29.18%) அதானி குழுமம் பெற்றிருக்கிறது. அதேசமயம் என்டிடிவி-யின் மேலும் 26 சதவிகிதப் பங்குகளை பங்குதாரர்களிடமிருந்து வாங்கவும் முன்வந்திருக்கிறது.

என்டிடிவி-யின் மொத்தப் பங்கில், 15.94 சதவிகிதம் பிரனாய் ராயிடமும், 16.32 சதவிகிதம் ராதிகா ராயிடமும், 29.18 சதவிகிதம் இவர்களின் RRPR நிறுவனத்திடமும் இருந்தது. தற்போது அதானியிடம் 29.18 சதவிகிதம் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இது தவிர என்டிடிவி-யின் 38.55 சதவிகிதப் பங்குகள் பொதுப் பங்குகளாக இருக்கின்றன. இதோடு அதானி குழுமம் ஓப்பன் ஆஃபர் (Open offer) மூலம் 26% பங்குகளை வாங்குவதற்கு முயன்றுவருகிறது. நவம்பர் 22-ம் தேதி தொடங்கிய ஓப்பன் ஆஃபர் பங்கு விற்பனை மூலம், 31.78 சதவிகிதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியிருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஓப்பன் ஆஃபர், டிசம்பர் 5 உடன் முடிவடைகிறது. ஆரம்பத்தில் அதானியிடம் என்டிடிவி பங்குகளை விற்பனை செய்வதற்கு, என்டிடிவி தலைவர் பிரனாய் ராய் தயக்கம் காட்டிவந்தார். ஆனால் கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்டிடிவி பங்குகள் அதானி கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில்தான் பிரனாய் ராய், ராதிகா ராய் இருவரும் ஆர்ஆர்பிஆர் குழுமத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.
இது குறித்து என்டிடிவி பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், ``பிரனாய் ராய், ராதிகா ராய் ராஜினாமா செய்திருக்கும் அதே நேரம், சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னையா செங்கல்வராயன் உள்ளிட்டோர் ஆர்ஆர்பிஆர் குழுவில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.