ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணியை ரயில் நிலையத்தில் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த மாநிலத்தில், 15 நாள்களில் ரயில் நிலையத்தில் இரண்டாவது முறையாக இந்தக் கொடுமை நடந்துள்ளதால், மக்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலினத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் குண்டூர், ரேபள்ளே ரயில் நிலையம் வந்துள்ளார். தினக்கூலித் தொழிலாளர்களான இவர்கள், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நாகயலங்காவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். அந்த நேரம் ரயில் இல்லாததால் அங்கேயே தங்கியுள்ளனர். 1 மணியளவில் அந்தப் பெண்ணின் கணவரை, மைனர் ஆண் உட்பட, மூன்று பேர் எழுப்பி நேரம் கேட்டுள்ளனர்.

தன்னிடம் கடிகாரம் இல்லை என்று அவர் சொல்ல, அவரின் கழுத்தை நெரித்து அவரிடமிருந்த 750 ரூபாயைப் பறித்துள்ளனர். அவரின் மனைவி அவர்களைத் தடுத்தபோது, அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, மைனர் ஆணும், இன்னொருவரும் பாலியல் பலாத்காரம் செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் காவல்துறை அதிகாரி வகுல் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் கணவர் உதவிக்கு ஆட்களை அழைத்து வருவதற்குள் குற்றவாளிகள் அந்த இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டனர். ரேபள்ளே காவல் நிலைய அதிகாரிகள் அங்கு விரைந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். மோப்ப நாய்களை வைத்து குற்றவாளிகள் தப்பிச் சென்ற இடத்தைக் கண்டுபிடித்து, மூவரையும் ஞாயிறு அன்று கைது செய்ததோடு, அவர்களின் மீது திருட்டு, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சியின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.