Published:Updated:

புதுச்சேரியில் அமலாகிறது பிரீபெய்டு மின் கட்டணம்... ஸ்மார்ட் மின்மீட்டர் பணிகளில் மின்துறை தீவிரம்!

ஸ்மார்ட் மின்மீட்டர்
News
ஸ்மார்ட் மின்மீட்டர்

புதுவையில் மின் கணக்கீடு மற்றும் மின் கட்டண வசூலை மேம்படுத்த மின் நுகர்வோர்களுக்கு பிரீபெய்டு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த ரூ.251.10 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பித்தனர். மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது.

புதுச்சேரியில் அமலாகிறது பிரீபெய்டு மின் கட்டணம்... ஸ்மார்ட் மின்மீட்டர் பணிகளில் மின்துறை தீவிரம்!

புதுவையில் மின் கணக்கீடு மற்றும் மின் கட்டண வசூலை மேம்படுத்த மின் நுகர்வோர்களுக்கு பிரீபெய்டு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த ரூ.251.10 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பித்தனர். மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது.

Published:Updated:
ஸ்மார்ட் மின்மீட்டர்
News
ஸ்மார்ட் மின்மீட்டர்

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளைத் தனியார் மயமாக்குவதற்கு முடிவெடுத்த மத்திய அரசு, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது. அதன்படி புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அது தொடர்பாக சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், போராட்டக் குழுவினர் அந்தக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. அதையடுத்து அரசின் நடவடிக்கையைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனாலும், தனியார்மயமாக்குவதில் அரசு பிடிவாதம் காட்டியதால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர் மின்துறை ஊழியர்கள். ஒட்டுமொத்த மாநிலமும் இருளில் மூழ்கியதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, முதல்வர் ரங்கசாமி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில்தான் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்டி வருகிறது அரசு. மின்துறையை தனியார் மயமாக்கும் விவகாரமே இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இந்தப் புதிய திட்டத்துக்கு மேலும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

புதுவையில் மின் கணக்கீடு மற்றும் மின் கட்டண வசூலை மேம்படுத்த மின் நுகர்வோர்களுக்கு பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.251.10 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட, மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால், மத்திய அரசின் 15 சதவிகித மானியமும், கூடுதலாக 7.5 சதவிகித ஊக்கத்தொகையும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்ளும் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம்
ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்ளும் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம்

மீதித் தொகையை மாதம்தோறும் ஒரு மீட்டருக்கு சுமார் ரூ.80 வீதம் 90 மாதங்களுக்கு புதுச்சேரி அரசு திருப்பிச் செலுத்தும். ’பிரீபெய்டு’ மின் மீட்டர் பொருத்துவதால் மின் இழப்பை தவிர்த்து, மின் மீட்டர் வாடகைக்கான செலவினத்தை எதிர்கொள்ள முடியும் என்கிறது மின்துறை.

இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 4,07,000 லட்சம் ஸ்மார்ட் பிரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள 33,000 ஸ்மார்ட் மீட்டர்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்து மின் நுகர்வோர் களுக்கும் பிரீபெய்டு முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நிறுவனமான பி.பி.சி.சி.எல் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் புதுவை மின்துறை சார்பில் அரசு செயலாளர் அருணும், பி.பி.சி.சி.எல் நிறுவனம் சார்பில் சச்சின் சுக்லா ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மின் மீட்டர் சேவை நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் பிரீபெய்டு சேவைகளுக்கான மின் மீட்டர், மென்பொருள் மற்றும் கணினி ஆகியவற்றை வழங்குவதோடு மட்டுமல்லாது, 90 மாதங்களுக்கு இத்திட்டம் சரியாக செயல்படுவதற்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை கவனிக்கும் என்றும் கூறும் மின்துறை, பத்து மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்கிறது.

புதுச்சேரி மின்துறை
புதுச்சேரி மின்துறை

இதுகுறித்துப் பேசும் மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான சண்முகம், “இந்த திட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, நுகர்வோர் தங்களது மின்சார பயன்பாட்டை அறிந்து, அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். அதாவது செல்போன் பிரீபெய்டு சிம்கார்டு பயன்படுத்துவதைப் போன்றுதான் இதன் செயல்பாடும் இருக்கும். நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார கட்டண விவரம் அவர்களுக்கு வழங்கப்படும் செல்போன் செயலி மூலம் தெரிவிக்கப்படும். அந்த செயலியில் 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மின்சார கட்டண விவரங்களை தெரிந்துகொள்ளலாம். தங்களது இருப்புத்தொகை குறைவாக இருந்தால், அதற்கு தகுந்தாற்போல் மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மின் திருட்டு தடுக்கப்படும். மின்சார பயன்பாடு தொடர்பாக கட்டண ரசீது கிடைக்கவில்லை என்ற குறைபாடும் நீங்கும்” என்கிறார். அரசின் இந்த திட்ட த்திற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.