
கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. பெண்களுக்கான கல்விக் கதவு மூடப்பட்டால், அது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்துக்கான கதவுகள் மூடப்பட்டதற்குச் சமம்’’ என்று கூறி கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறது ஐ.நா.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. அமெரிக்கப் படைகள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15, 2021 அன்று தலைநகர் காபூலை முழுவதுமாகக் கைப்பற்றியது தாலிபன் படை. அந்தச் சமயத்தில், `நாங்கள் முன்புபோல் இல்லை; இனி நீங்கள் புதிய தாலிபன்களைப் பார்ப்பீர்கள்’ என்றனர். ஆனால், அவர்களின் ஆட்சி நாட்டையே 20 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது!
பறிக்கப்படும் பெண் சுதந்திரம்!
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாளொரு சட்டம், பொழுதொரு கட்டுப்பாடு என ஆப்கன் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான சட்ட திட்டங்களில் தீவிரம் காட்டுகின்றனர். ஆட்சிக்கு வந்த சில நாள்களிலேயே ஆண்கள், பெண்கள் இணைந்து படிக்கும் கல்வி நிலையங்களில், வகுப்பறையில் திரையிட்டு மறைத்தனர். பின்னர், 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக் கூடாது என்று தடைவிதித்தனர். நான்கு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடந்த பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவிகள் நுழைவுத்தேர்வு எழுதினர். நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியான சமயத்தில், பொருளாதாரம், பொறியியல், இதழியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் படிப்பதற்குத் தடை அறிவித்தது தாலிபன் அரசு. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சிலர் போராட்டத்தில் இறங்க, போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது ஆப்கன் பல்கலைக்கழகங்களில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சேர இடைக்காலத் தடை விதித்திருக்கின்றனர் ஆட்சியாளர்கள். படிப்பின் மூலம் தங்களது எதிர்காலத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த பெண்களின் கனவுகளில் தொடர்ந்து மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது தாலிபன் அரசு. ஐ.நா., மேற்கத்திய நாடுகள் என யாருமே தாலிபன் அரசை, ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கவில்லை. `பெண்களுக்குக் கல்வி வழங்கினால், அங்கீகரிக்கிறோம்’ எனச் சில நாடுகள் சொல்லியும், தாலிபன்கள் அதற்குத் தயாராக இல்லை. தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா, நவீன கல்விக்கு எதிராக நிற்பதால்தான் இத்தனை தடைகள் விதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
`பேராபத்தை நோக்கி..!’
``கல்வி என்பது அடிப்படை மனித உரிமை. பெண்களுக்கான கல்விக் கதவு மூடப்பட்டால், அது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்துக்கான கதவுகள் மூடப்பட்டதற்குச் சமம்’’ என்று கூறி கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறது ஐ.நா. இப்படியான சூழலில், புது வரவாக ஒரு கட்டுப்பாட்டை விதித்து ஆப்கன் மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது தாலிபன் அரசு. `ஆண் மருத்துவர்கள், பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது’ என்பதுதான் அந்தக் கட்டுப்பாடு. ஒருசில மாகாணங்களில் இதை அமல்படுத்திவிட்ட தாலிபன் அரசு, இன்னும் சில தினங்களில் அனைத்து மாகாணங்களிலும் இதை அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
``ஒருபக்கம் பெண்களுக்கான உயர்கல்வி மறுக்கப்படுவதால், இனி ஆப்கனில் பெண் மருத்துவர்களே இல்லாத சூழல் உருவாகும். இன்னொரு பக்கம், `பெண்களுக்குப் பெண் மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்ற தாலிபன் அரசின் கட்டுப்பாட்டால், பெண்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்பதுதான் தாலிபன்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. பெண்கள் முன்னேறாத எந்த நாடும் பேராபத்தை நோக்கித்தான் செல்லும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
உதவிகளை நிறுத்திய தொண்டு நிறுவனங்கள்!
தாலிபன்களின் ஆட்சிக்கு முன்பே ஆப்கன் பொருளாதாரம் மிக மோசமான நிலையிலிருந்தது. அவர்கள் வந்த பிறகு, அது அதல பாதாளத்துக்கே சென்றுவிட்டது. போதாக்குறைக்கு, கடந்த ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பொருட்சேதத்தை ஏற்படுத்திவிட்டது. அடிக்கடி நிகழும் குண்டு வெடிப்புச் சம்பவங்களும் ஆப்கனின் உள்கட்டமைப்புகளைப் பதம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
2023-ம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துவிட்டன. அதிலும், கடந்த ஜனவரி 11-ம் தேதி ஆப்கனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்-கே’ என்ற அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.
`தாலிபன்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்; சில மேற்கத்திய கலாசாரங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால், நாங்கள் அவர்களுக்கு எதிராக நிற்போம்’ என்று ‘ஐ.எஸ்.ஐ.எஸ்-கே’ அமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவை போக, ஆப்கனில் வாழும் 90% மக்கள் போதிய உணவில்லாமல் வாழ்வதாகவும், ரொட்டித்துண்டுகள் மட்டுமே அவர்களுக்குக் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.பசி, பட்டியினில் வாடியவர்களைக் காக்க சில தொண்டு நிறுவனங்கள் ஆப்கனுக்குள் நுழைந்தன. அந்தத் தொண்டு நிறுவனங்களின் உதவியால்தான் ஆப்கனின் நிலைமை ஓரளவு காப்பாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம், `தொண்டு நிறுவனங்களுக்காகப் பெண்கள் பணியாற்றக் கூடாது’ என்று உத்தரவிட்டனர் தாலிபன்கள். இந்த உத்தரவையடுத்து, `பெண் ஊழியர்கள் இல்லாமல் இந்தச் சேவையைச் செய்ய முடியாது’ என்று கூறி 11 தொண்டு நிறுவனங்கள் ஆப்கனிலிருந்து வெளியேறின. தற்போது மீண்டும் உணவு, மருத்துவ உதவிகளுக்காக ஆப்கானிஸ்தான் மக்கள் திண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான தாலிபன்களின் நடவடிக்கை குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா நிர்வாகிகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்திருக்கின்றனர்.
சமூகத்திலிருந்து பெண்களை முற்றிலுமாக ஒதுக்க நினைக்கும் தாலிபன்களின் எண்ணம், நிச்சயம் ஆப்கானிஸ்தானைப் படுகுழியில் தள்ளும். அதை அவர்கள் உணர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. உலக நாடுகள் தலையிட்டு, அங்கு ஜனநாயகத்தை மீட்டெடுத்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் தப்பிப் பிழைக்கும்!