அலசல்
Published:Updated:

பீமா கோரேகான் வழக்கும், ‘ஹேக்கிங்’ அதிர்ச்சியும்! - நகர்ப்புற நக்ஸலைட்டுகளா... திட்டமிட்ட சதியா?

மோடி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, அமித் ஷா

மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது ஸ்டேன் சுவாமி மீதான முக்கியக் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை அவர் உறுதியாக மறுத்தார்.

தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்துவிட்டார் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. அவரின் மடிக்கணினியில் மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்பான ஆவணங்கள் ‘ஹேக்கிங்’ மூலம் வைக்கப்பட்டதாக இப்போது வெளியாகியிருக்கும் தகவல்களால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

பாதிரியார் ஸ்டேன் சுவாமி அரியலூர் மாவட்டம், விரகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவந்தார். 2018-ம் ஆண்டு, ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட 16 பேர் பீமா கோரேகான் வழக்கில், புனே போலீஸால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை, ‘நகர்ப்புற நக்ஸலைட்டுகள்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று 16 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ‘பிரதமர் மோடியைக் கொலைசெய்யவும், அரசைக் கவிழ்க்கவும் சதிசெய்தனர்’ என்ற குற்றச்சாட்டும் இவர்கள்மீது சுமத்தப்பட்டது.

ஸ்டேன் சுவாமி
ஸ்டேன் சுவாமி

84 வயதான ஸ்டேன் சுவாமி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கைநடுக்கம் காரணமாக, அவரால் சாப்பிட முடியவில்லை. தண்ணீர்கூடக் குடிக்க முடியவில்லை. எனவே, தண்ணீர் குடிக்க உறிஞ்சு குழாய் வேண்டுமென்று அவர் கேட்டார். சிறை நிர்வாகம் தர மறுத்துவிட்டது. ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த அத்தனை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. உடல்நிலை மோசமடைந்ததால் 2021-ம் ஆண்டு, ஜூலை 5-ம் தேதி சிறையிலேயே அவரது உயிர் பிரிந்தது. 84 வயதான முதியவரிடம் அரசு நடந்துகொண்டவிதத்துக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.

மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது ஸ்டேன் சுவாமி மீதான முக்கியக் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை அவர் உறுதியாக மறுத்தார். ஆனால், மாவோயிஸ்ட் இயக்கத்துடன் அவர் தொடர்புவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, அவரது கணினியில் இருந்த ஆவணங்களை என்.ஐ.ஏ-வும், புனே காவல்துறையும் குறிப்பிட்டன. அந்த ஆவணங்கள், அடையாளம் தெரியாத ஹேக்கர் மூலம் ஸ்டேன் சுவாமியின் மடிக்கணினியில் செருகப்பட்டவை என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆர்செனல் கன்சல்ட்டிங்’ என்ற டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம் அதைக் கண்டறிந்திருக்கிறது. 2014-லிலிருந்து ஸ்டேன் சுவாமியின் கணினி ஹேக்கரால் டார்கெட் செய்யப்பட்டிருக்கிறது என்று அந்த ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

பீமா கோரேகான் வழக்கும், ‘ஹேக்கிங்’ அதிர்ச்சியும்! - நகர்ப்புற நக்ஸலைட்டுகளா... திட்டமிட்ட சதியா?

இதற்கு முன்பாக 2021-ம் ஆண்டு, ஜூலை 5-ம் தேதி ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததற்கு மறுநாள் இதே போன்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியானது. அதாவது, பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரோனா வில்சன், சுரேந்திரா காட்லிங் ஆகிய இருவரின் செல்போன், கணினிகளுக்கு ‘நெட்வயர்’ என்ற தீங்கிழைக்கும் மென்பொருள் ஒன்றை ஹேக்கர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். இமெயில் மூலம் அந்த மென்பொருள் அனுப்பப்பட்டிருக்கிறது. ஸ்டேன் சுவாமி, சுதா பரத்வாஜ், வரவர ராவ் ஆகியோரின் இமெயில்களுடன் சேர்த்தே அது அனுப்பப்பட்டது என்று 2021-ம் ஆண்டு, ஜூலை 6-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ‘சென்டினல் ஒன்’ என்ற டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அதன் பிறகு அது மறக்கடிக்கப்பட்டுவிட்டது. தற்போது, ஸ்டேன் சுவாமியின் மடிக்கணினி ஹேக்கிங் செய்யப்பட்டு, போலி ஆவணம் செருகப்பட்டது உறுதியாகியிருப்பதால், பழைய குற்றச்சாட்டு மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

மத்திய அரசின் கொள்கைகளையும், அதன் செயல்பாடுகளையும் விமர்சிப்பவர்களை ‘நகர்ப்புற நக்ஸலைட்டுகள்’ என்று முத்திரை குத்தும் போக்கு 2018-க்குப் பிறகு தலைதூக்கியது. ஆனால், நகர்ப்புற நக்ஸலைட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களில் ஒருவரான ஸ்டேன் சுவாமி மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரம் ஹேக்கர் மூலம் புகுத்தப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத ஹேக்கருடன் சேர்ந்து, புனே காவல்துறையே இந்த வேலையைச் செய்திருக்கிறது என்பதுதான் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது!

பீமா கோரேகான் வழக்கு!

மகாராஷ்டிர மாநிலம், புனே அருகேயுள்ள பீமா கோரேகானில் 1818-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி நடந்த போரில், பேஷ்வா படையை மஹர் படையினர் தோற்கடித்தனர். அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் பீமா கோரேகானில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. போர் நடைபெற்று 200 ஆண்டுகள் ஆனதையொட்டி, 2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி ‘எல்கார் பரிஷத்’ என்ற நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. அதில், கல்வியாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலர் பேசினர். அதற்கு மறுநாள், அங்கு இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார்.

‘எல்கார் பரிஷத்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதுதான் வன்முறைக்குக் காரணம் என்று கூறி, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பாதிரியார் ஸ்டேன் சுவாமி, எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே உட்பட 16 பேரை புனே போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், அந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. 16 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது. கௌதம் நவ்லகா வீட்டுச்சிறையில் இருக்கிறார். ஸ்டேன் சுவாமி சிறையிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்!