
“ஹாரி, மேகன் இருவரின் முடிவையும் நான் மனதார ஏற்கிறேன்.
மீண்டும் உலகின் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது இங்கிலாந்து அரசவைக் குடும்பம். இதுவரையில் அரச குடும்பத்தில் இருந்துதான் சில வம்சாவளிகள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். முதல்முறையாக அரச குடும்பத்திலிருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இளவரசர் ஹாரியும், அவரின் மனைவி மேகனும்.

“இனி நாங்கள் முற்போக்குடன் சில விஷயங்களை அணுகவிருக்கிறோம். அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்பதிலிருந்து விலகி, இனி நாங்கள் சுயமாக உழைத்து எங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்கிறோம். எங்கள் மகன் ஆர்ச்சிக்கான புதிய வெளியை உருவாக்கவிருக்கிறோம்’’ என அறிவித்து, கனடாவில் செட்டிலாக முடிவு செய்திருக்கிறார்கள். லண்டனிலிருக்கும் அரச குடும்ப மெழுகு சிலைகளிலிருந்து ஹாரி, மேகன் சிலைகளை விலக்கியிருக்கிறார்கள்.
“ஹாரி, மேகன் இருவரின் முடிவையும் நான் மனதார ஏற்கிறேன். அரச குடும்பத்துச் சொத்துகளைப் பயன்படுத்த விருப்பமில்லை என இருவரும் தெரிவித்திருக்கிறார்கள். எனது குடும்பத்தில் இருக்கும் சில சிக்கலான பிரச்னைகளை அடுத்த சில தினங்களில் தீர்க்க வேண்டும்’’ எனத் தீர்க்கமாக அறிவித்திருக்கிறார் 93 வயதான இரண்டாம் ராணி எலிசபெத்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதை Brexit என எழுதி விமர்சித்த ஐரோப்பிய மீடியா, இதை Megxit (மேகன் வெளியேற்றம்) என விமர்சித்து, அதிர்ச்சித் தலையங்கங்களை வெளியிட்டுவருகிறார்கள். இதற்கு முன்பு, எட்டாம் எட்வர்டு, தன் காதல் மனைவியை மணக்க விருப்பம் தெரிவிக்க, அவரை அதிரடியாய் வெளியே போகச் சொன்னது அரசவை. அதேபோல், ராணியின் மகனான இளவரசர் ஆண்ட்ரூவும் சமீபத்தில் தன்பால் ஈர்ப்பின் காரணமாக வெளியேற்றப் பட்டார். இப்படி நெருப்புக் கனல் எப்போதும் மேலிருந்துதான் வரும். ஆனால், இந்த முறை மேகன் திரியைக் கீழிருந்து பற்ற வைத்திருக்கிறார். அது பிரிட்டன் அரசவை முழுக்கப் பற்றி எரிகிறது.
முன்னாள் நடிகையான மேகனின் மீது தொடர்ச்சியாக நிகழும் இனவெறித்தாக்குதல்தான் இந்த அரியணை வெளியேற்றத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது. மறைந்த இளவரசி டயானாவின் இரண்டாம் மகனான ஹேரி விருப்பப்பட்ட வாழ்க்கை வாழ்வதே சர்ச்சையாக்கப் பட்டது. விவாகரத்துப் பெற்று மகனுடன் வாழும் மேகனைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் ஹாரி. திருமணமான பெண் என்பதே முதலில் சர்ச்சைகளை உருவாக்க, அவர் கறுப்பினத்தவர் என்பது மேலும் அரச குடும்பத்தை, இங்கிலாந்து ஊடகங்களை முகம் சுளிக்க வைத்தது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 3% மட்டுமே இருக்கும் கறுப்பினத்தவர்களின் மீதான ஏளனப் பார்வை, இங்கிலாந்து வெள்ளையர்களிடம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதெல்லாம் மலையேறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இனவெறி சர்ச்சையுடன் இங்கிலாந்துப் பிரதமரே பேச ஆரம்பித்தார்.

வெள்ளை நிறத்தவரை மட்டுமே அலங்கரித்து வந்த பிரிட்டன் அரண்மனையில் புதியதொரு வரலாற்றை எழுதினார் மேகன் மார்கல். ஆப்பிரிக்க - அமெரிக்க பாதிரியார் ஒருவரின் முன்னிலையில் 2018-ம் ஆண்டு மேகன் - ஹாரி திருமணம் நடந்தபோது, வெள்ளை நிறத்தவர் அல்லாத பலர் அதை ஆர்வமுடன் கவனித்தனர்.
கிட்டத்தட்ட அமெரிக்காவில், பராக் ஒபாமா அதிபராகவும், மிச்சேல் ஒபாமா முதல் குடிமகளாகவும் தேர்வு செய்யப்பட்டதற்கும் இணையான சம்பவம் அது. கறுப்பு நிற இளம் பெண்கள் தொலைக்காட்சிகளின் முன், மேகனின் திருமணத்தைக் கண்களில் ஆச்சர்யம் மின்னப் பார்த்தனர். ஆனால், அதன்பின் மேகனுக்கு நடந்தது எல்லாமே தலைகீழ்.
நடிப்புத் தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு, அரசவையில் முழுக் கவனம் செலுத்தினாலும், ஒரு கோபக்கார, அகங்கார கறுப்பு நிறப் பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டார் மேகன். ஹாரியைத் திருமணம் செய்தால், தனது வாழ்க்கை கேலிக்கும், ஏளனத்துக்கும் தள்ளப்பட்டும் என அவரின் தோழிகள் எச்சரித்ததை வருத்தத்துடன் ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தார் மேகன்.

ஹாரி - மேகனுக்கு சஸ்ஸக்ஸ் அரசவையின் அரியணையைப் பிரகடனம் செய்தார் ராணி. ஆர்ச்சிக்கு அப்படியான எந்தப் பட்டமும் வேண்டாம் என இருவரும் மறுத்ததே, வெளியேற்றத்துக்கான ஒத்திகை சமிக்ஞைதான் என்கிறார்கள்.
பாலியல் வன்முறைக்குச் சிறுவர்களை உட்படுத்திய சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவுக்குக்கூட அவ்வப்போது பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஆதரவுக்கரம் காற்றில் வந்தது. ஆனால், மேகனுக்கு எதிரான நிறவெறித் தாக்குதல்களுக்கு அமைதிகாத்து அனுமதி அளித்தது ராணியின் அரசவை.
ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேகன் ஹாரியின் குழந்தை ஆர்ச்சியை சிம்பன்ஸிபோல் இருக்கிறார் எனச் சொன்னது அதன் உச்சம். தாய் டயானாவை விபத்தில் பறிகொடுத்த ஹாரி, தன் மனைவி மேகனையும் , குழந்தை ஆர்ச்சியையும் காக்க வேண்டிய நிர்பந்ததுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். பிரிட்டன் அரசவை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கிறார்கள் மேகனும், ஹாரியும். அது கனடாவிலிருந்து எழுதப்படுகிறது. அரியணை மட்டுமே ராஜாவுக்கான இடமில்லை, தான் வாழும் இடத்திலேயே தன் குடும்பத்துடன் நிம்மதியாய் வாழும் வாழ்வும் ராஜவாழ்க்கை தான். தன் மனைவியின் கரம்பற்றி நிற்கும் ஹாரிக்கு வாழ்த்துகள்.
ஓர் ஆப்பிரிக்கப் பூர்வீகம் கொண்ட பெண் இங்கிலாந்து அரசவையின் அரியணைக்குச் சென்றாலும், நிறவெறியும் இனவெறியும் தொடரும் என்பது மனிதகுலத்தின் சாபக்கேடு!