அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள்... கதறும் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்...

கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா சிகிச்சை

“சொத்தையே எழுதி வாங்கியிருப்பார்கள்!”

‘‘கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தமிழக அரசு தொடர்ந்து எச்சரித்துவருகிறது. ஆனாலும் பல தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலித்துவருகின்றன.

கொரோனா முதல் அலை ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் சரியாகும் முன்னரே, இரண்டாம் அலையின் தாக்கம் மொத்த இந்தியாவையும் நிலைகுலையவைத்தது. தொற்றில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல், வாசலிலேயே நோயாளிகள் உயிரிழக்கும் அவலங்களும் நடந்தேறின. இந்தக் கொடுமையான காலகட்டத்திலும் கொரோனா நோயாளிகளை வைத்து அநியாயத்துக்கு கல்லாகட்ட ஆரம்பித்தன பல தனியார் மருத்துவமனைகள்.

கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள்... கதறும் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்...

தமிழக அரசு தீவிரமில்லாத சாதாரண கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாள் கட்டணமாக ஏ1 மற்றும் ஏ2 மருத்துவமனைகளுக்கு 7,500 ரூபாயும், ஏ3 முதல் ஏ6 மருத்துவமனைகளுக்கு 5,000 ரூபாயும் நிர்ணயித்தது. ஆக்சிஜன் படுக்கைகளுக்கு 15,000 ரூபாயும், அதி தீவிர கொரோனா பாதிப்புடன் ஆக்சிஜன் படுக்கையில் இருப்பவர்களுக்கு 25,000 ரூபாயும், வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெறுவோருக்கு 30,000 ரூபாயும், வென்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு 35,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ‘அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் மருத்துவமனைகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்துவருகிறது. ஆனால், பல மருத்துவமனைகள் இந்த அறிவிப்பை சட்டைகூடச் செய்யவில்லை.

இந்தநிலையில்தான், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் குடும்ப உறுப்பினரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து, அங்கு அவர் உயிரிழந்த நிலையிலும் அந்த மருத்துவமனையின் கூடுதல் கட்டண வசூலுக்கு ஆளான ஒருவர் நம்மிடம் தனது கசப்பான அனுபவங்களைக் கதறியடி கொட்டித் தீர்த்தார்.

கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள்... கதறும் கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்...

“என் சித்தப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் நந்தம்பாக்கம் அருகிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அட்மிட் ஆனவுடன் அவர்கள் கேட்ட தொகையே தூக்கிவாரிப்போட்டது. ‘உடனே 2 லட்சம் ரூபாய் கட்டினால்தான் சிகிச்சையைத் தொடங்க முடியும்’ என்றார்கள். அங்குமிங்கும் புரட்டி உடனே அதைக் கட்டினோம்... தொடர்ந்து வாரம் இரு முறையாவது ஓரிரு லட்சங்களைக் கேட்டார்கள். அப்படிப் பணம் கட்டியும்கூட ‘நோயாளியின் உடல்நிலை எப்படியிருக்கிறது?’ என்று கேட்டால், தெளிவான பதிலைச் சொல்லவில்லை. இப்படியே 25 நாள்கள் கழிந்தன. கடைசியில் என் சித்தப்பா இறந்துவிட்டார். அவரின் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் மொத்தம் 20.62 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாள்கள் விட்டிருந்தால், எங்கள் சொத்தையே எழுதி வாங்கியிருப்பார்கள்” என்று நொந்தபடி அதற்கான ரசீதையும் நம்மிடம் காட்டினார்.

இந்த விவகாரத்தை கவனித்துவரும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மேலும் சில விவரங்களை நம்மிடம் சொன்னார்கள்... “சென்னை மட்டுமல்ல... சமீபத்தில் மதுரையில் விமான நிலையம் செல்லும் வழியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பெரிய மருத்துவமனையில், அரசு நிர்ணயித்ததைவிட பல மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். சேலத்தில் கோவை செல்லும் சாலையிலுள்ள ஒரு மருத்துவமனையிலும் இதே போலதான் கல்லா கட்டுகிறார்கள். சென்னையில் நோய்த்தொற்று அதிகரித்து படுக்கை கிடைக்காமல் மக்கள் அல்லாடியபோது, தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் புதிய நோயாளிகளைச் சேர்ப்பதற்காக அங்கிருந்த நோயாளிகளின் ஆக்சிஜன் மாஸ்குகளைக் கழற்றிவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன” என்றவர்கள், சில மருத்துவ மனைகளின் நூதன வசூல் வேட்டையைப் பற்றியும் விவரித்தார்கள்...

“பல மருத்துவமனைகள், படுக்கைக் கட்டணமாக அரசு நிர்ணயித்த தொகையைக் குறிப்பிட்டுவிட்டு, கூடுதலாக மருந்து செலவு, எக்ஸ் ரே செலவு, மருத்துவர் ஆலோசனைக் கட்டணம், சிறப்பு மருத்துவர் ஆலோசனைக் கட்டணம், செவிலியர் கட்டணம், லேப் கட்டணம், பிசியோதெரபி கட்டணம், மருத்துவ உபகரணங்களின் செலவு என்றெல்லாம் பட்டியல் போட்டு பல லட்சங்களைப் பிடுங்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் புகாராக வெளிவருவதில்லை. காரணம், சிகிச்சையிலிருக்கும்போது, அரசிடம் புகார் தெரிவித்தால், நோயாளிகளை எதுவும் செய்துவிடுவார்களோ என்று அஞ்சி பலரும் புகார் கொடுக்கவில்லை” என்றார்கள் ஆதங்கத்துடன்!

ராமகிருஷ்ணன் - ராதாகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன் - ராதாகிருஷ்ணன்

தனியார் மருத்துவமனைகளைக் கண்காணித்துவரும் இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகக் கிளையின் தலைவர் மருத்துவர் பி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘எங்கள் சங்கத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தரமான 4,725 மருத்துவமனைகள் உள்ளன. தற்போது அரசு நிர்ணயித்துள்ள கட்டணத் தொகையே எங்களுக்குப் போதுமானதாக உள்ளது. அரசு நிர்ணயித்த தொகையை மட்டுமே கட்டணமாகப் பெற வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளை எங்கள் சங்கத்திலிருந்து நீக்கிவிடுவோம்’’ என்றார்.

கட்டணக் கொள்ளை தொடர்பாகத் தொடர் எச்சரிக்கைகளை விடுத்துவருகிறார் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். அவரிடம் பேசியபோது, ‘‘இந்த விஷயத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த மே 20-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை அரசின் ‘104’ உதவி மையத்துக்கு 86 புகார்கள் வரப்பெற்றன. புகார்கள் தொடர்பாக, பல்வேறு மாவட்டங் களிலிருந்து 25 விசாரணை அறிக்கைகளைப் பெற்றிருக்கிறோம். அவற்றில் 15 மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். எட்டு புகார்கள் மீது விசாரித்து, தனியார் மருத்துவமனையிலிருந்து பணத்தைத் திருப்பி வாங்கிக் கொடுத்திருக்கிறோம். நிலுவையிலுள்ள 61 புகார்களைத் தீவிரமாக விசாரித்துவருகிறோம். இந்தப் பேரிடர் காலத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.