அலசல்
Published:Updated:

தரமற்ற உணவு... மூன்று மடங்கு விலை... அடாவடி ஹோட்டல்களுக்கு துணைபோகும் அரசு போக்குவரத்துக்கழகம்!

ஹோட்டல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹோட்டல்

‘விக்கிரவாண்டியில் ஹோட்டல் ஹில்டாவில் பேருந்தை நிறுத்தவும்’ என்று ஒரு பேப்பரில் சீல் அடித்துக் கொடுக்கிறார்கள்.

‘‘வண்டி 20 நிமிஷம் நிக்கும். பாத்ரூம் போறவங்க போகலாம், சாப்புடுறவங்க சாப்பிடலாம்...’’ - நம்மில் பலரும் இந்த வசனத்தைப் பேருந்துப் பயணங்களில் கேட்டிருப்போம். பயணிகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் நிறுத்தும் பாடாவதி ஹோட்டலில்தான் சாப்பிட்டாக வேண்டும். தரமற்ற உணவு, மூன்று மடங்கு அதிக விலை, அடாவடிப் பேச்சு எனத் தொலைதூரப் பயணங்களில் பயணிகள் சந்திக்கும் சகிக்க முடியாத துயரம் இது. கடந்த காலங்களில் ஆஃப் தி ரெக்கார்டாகச் செய்துவந்த இந்தக் காரியத்தை, சமீபகாலமாக போக்குவரத்துக் கழகங்கள் டெண்டர்விட்டு அதிகாரபூர்வமாகச் செய்வதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது!

தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு விரைவுப் பேருந்து சேவை வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் பேருந்துகள் செல்லும் ஒவ்வொரு ரூட்டிலும் குறிப்பிட்ட ஹோட்டலில்தான் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலில் பேருந்தை நிறுத்தியதற்கு ஆதாரமாக, பேருந்து இங்கு நின்றது என்று ஹோட்டலில் பெயரோடு ஹோட்டல் தரப்பிலிருந்து பேப்பரில் சீல் வைத்துத் தருகிறார்கள். இந்த நடைமுறை பற்றி எஸ்.இ.டி.சி பேருந்துகளின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள் சிலரிடம் பேசினோம்...

தரமற்ற உணவு... மூன்று மடங்கு விலை... அடாவடி ஹோட்டல்களுக்கு துணைபோகும் அரசு போக்குவரத்துக்கழகம்!

‘‘சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து மாலை நான்கு மணிவாக்கில் புறப்படும். பேருந்து புறப்படும்போதே, ‘விக்கிரவாண்டியில் ஹோட்டல் ஹில்டாவில் பேருந்தை நிறுத்தவும்’ என்று ஒரு பேப்பரில் சீல் அடித்துக் கொடுக்கிறார்கள். விக்கிரவாண்டிக்கு மாலை ஆறரை மணிக்குச் செல்வோம். அந்த நேரத்தில் யாருக்குமே பசிக்காது. ஆனாலும், போக்குவரத்துக்கழக நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதால் அந்த ஹோட்டலில் நிறுத்த வேண்டும். அந்த ஹோட்டலில் நாங்கள் பேருந்தை நிறுத்தியதற்கு ஆதாரமாக, போக்குவரத்துக்கழக நிர்வாகம் சீல் அடித்துக் கொடுத்த அதே பேப்பரில் ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து ‘ஹோட்டல் ஹில்டாவில் பேருந்து நின்றது’ என்று சீல் வைத்துத் தருவார்கள்.

சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டியில் ஹோட்டல் சூர்யா, ஜெ.ஜெ.கிளாசிக், அண்ணா ஆகிய ஹோட்டல்களில் நிறுத்தப்படுகின்றன. பெங்களூரு செல்லும் பேருந்துகள் வேலூரிலுள்ள ஹோட்டல் பாலாஜியிலும், பெங்களூரு செல்லும் இன்னொரு ரூட்டில் கிருஷ்ணகிரியில் ஹோட்டல் சூர்யாவிலும், திருப்பதி செல்லும் பேருந்துகள் திருப்பதி அருகேயுள்ள ஹோட்டல் பாலாஜியின் மற்றொரு கிளையிலும் நிறுத்தப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கமிஷன் கொடுப்பதால்தான் அங்கு பேருந்தை நிறுத்துவதாக நினைக்கும் பயணிகள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள். பயணிகளின் வசைபாடலுக்கு பயந்து, வேறு ஹோட்டலில் நிறுத்தினால் எங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், மெமோவும் தருகிறார்கள்’’ என்றார்கள் ஆதங்கத்துடன்.

தரமற்ற உணவு... மூன்று மடங்கு விலை... அடாவடி ஹோட்டல்களுக்கு துணைபோகும் அரசு போக்குவரத்துக்கழகம்!

மேற்கண்ட ஹோட்டல்கள் சிலவற்றில் உணவு உண்ட பயணிகள் சிலரிடம் பேசினோம்... ‘‘பொதுவா வெளியூர் பயணங்களில் அசைவப் பிரியர்கள்கூட, சுலபமா ஜீரணம் ஆகணுங்கிறதுக்காக சைவத்தைத்தான் விரும்புவாங்க. ஆனா, அரசு பஸ்களை நிறுத்துற பல ஹோட்டல்கள்ல சைவமே கிடையாது. வெறும் அசைவம் மட்டும்தான். ஒரு தோசை கேட்டா, ரெண்டு தோசை செட்டாத்தான் வாங்கணும்கிறாங்க. சாம்பார், சட்னி கிடையாது. முட்டைக்கறி, சிக்கன் கறின்னு அசைவக் குழம்பு மட்டும் தனியா காசு கொடுத்துத்தான் வாங்கணும். குடிதண்ணி தர மாட்டாங்க. பாட்டில்தான் வாங்கணும். விலையும் மூணு மடங்கு அதிகம். தரமும் படுமோசமா இருக்குது. பில் கொடுக்கும்போது, நம்மைக் கேக்காம அவங்களே 10 ரூபா, 20 ரூபானு டிப்ஸ் எடுத்துக்குவாங்க. இதையெல்லாம் எதிர்த்து கேட்டா, மரியாதை இல்லாமப் பேசி அடாவடியா நடந்துக்குவாங்க’’ என்று புலம்பினார்கள்.

ராஜ கண்ணப்பன்
ராஜ கண்ணப்பன்
ஆறுமுக நயினார்
ஆறுமுக நயினார்

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளன (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் நம்மிடம், ‘‘ஆரம்பத்தில் போக்குவரத்துக்கழகமே ஹோட்டல்களை நடத்தியது. அவற்றைச் சரியாகப் பராமரிக்காமல் கைவிட்டுவிட்டார்கள். பிறகு அதிகாரிகளைத் தனியார் ஹோட்டல்கள் தரப்பில் ‘கவனித்து’ பேருந்துகளை நிறுத்தவைத்தனர். அதேதான் தற்போது டெண்டர்விடப்பட்டு அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டெண்டர் விடப்படும்போது உணவு வகைகளின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு, தரமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதில்லை என்பதால், ஹோட்டல்கள் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றன. கடந்த ஆட்சியிலேயே தொடங்கப்பட்ட இந்த நடைமுறையை இந்த ஆட்சியிலும் தொடர்வதுதான் வேதனை” என்றார்.

சென்னை எஸ்.இ.டி.சி மேலாண்மை இயக்குநர் இளங்கோவனிடம் இது பற்றிக் கேட்டோம். ‘‘ஹோட்டல் ஹில்டா போக்குவரத்துக்கழக டெண்டரில் கலந்துகொண்டு ஒப்பந்தம் எடுத்திருக்கிறது. அங்கு நிறுத்தும் பேருந்துகளுக்காக எங்களுக்குப் பணம் கட்டுகிறார்கள். எந்த வண்டி, எந்த ஹோட்டலில் நிற்க வேண்டும் என்பதற்கான மார்க் செய்து கொடுக்கிறோம். ஹோட்டல் மாறி நிறுத்தினால் குழப்பம் வரும் என்பதால், மாறி நிறுத்துபவர்களுக்கு மெமோ கொடுக்கிறோம். ஹோட்டல் சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறதா என்று பார்த்துத்தான் டெண்டர் கொடுக்கப்படுகிறது. ஹோட்டல்மீது புகார் வந்தால் மீண்டும் ஆய்வு செய்வோம்’’ என்றார்.

தரமற்ற உணவு... மூன்று மடங்கு விலை... அடாவடி ஹோட்டல்களுக்கு துணைபோகும் அரசு போக்குவரத்துக்கழகம்!

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பனைத் தொடர்புகொண்டோம். “நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னுடைய ஸ்பெஷல் பி.ஏ-விடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். ஸ்பெஷல் பி.ஏ-விடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் தரமற்ற உணவு வகைகள் வழங்கப்படுவது உட்பட விதிமீறல்கள் நடக்கின்றனவா என்று ஆய்வு செய்து, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று முடித்துக்கொண்டார்!

இதற்கு மேல்தான் ஆய்வு செய்வோம் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. மக்களின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட அதிமுக்கியமான விஷயத்தில் ஏதோ டெண்டர் விட்டோம்... அதோடு கடமை முடிந்தது என்பதுபோல அலட்சியம் காட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுவரை அதிகாரிகள் எத்தனை ஹோட்டல்களில் ஆய்வு நடத்தினார்கள், எத்தனை ஹோட்டல்களில் நடவடிக்கை எடுத்தார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதையெல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் அமைச்சரிடம் சொல்லுங்கள் ஸ்பெஷல் பி.ஏ சார்!