
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஆறு, ஓடைகளில் வரும் தண்ணீரைச் சிலர் திசைமாற்றி, தங்கள் நிலத்துக்குள் கொண்டு சென்று செயற்கை அருவி அமைத்துள்ளனர்
“பணமிருந்தால் போதும்... குற்றாலக் கூட்டத்தில் முண்டியடிக்காமல், ‘பிரைவேட்’ அருவிகளில் ‘பிரைவசி’யாகக் குளிக்கலாம்” என்ற அவலநிலையை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது, தென்காசி மாவட்ட நிர்வாகம். விதிமுறை மீறி அமைக்கப்பட்ட தனியார் அருவிகளை இடிக்கும் பணி தொடங்கியிருப்பதால் அதிர்ந்துபோயிருக்கிறார்கள், அதன் உரிமையாளர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஆறு, ஓடைகளில் வரும் தண்ணீரைச் சிலர் திசைமாற்றி, தங்கள் நிலத்துக்குள் கொண்டு சென்று செயற்கை அருவி அமைத்துள்ளனர். அதில் குளிப்பதற்கு ஒரு ஆளுக்கு மணிக்கு 1,000 முதல் 5000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தனியார் அருவி அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களில் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இது தொடர்பாக 07-08-2022 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘குற்றாலம்... தனியார் அருவிகளால் தடம் மாறும் தண்ணீர்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.


உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தனியார் அருவிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன் தொடர்ச்சியாக சட்ட விரோத தனியார் அருவிகளை இடித்து உடைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இது குறித்து நம்மிடம் பேசிய ‘அகில இந்திய விவசாய மகாசபை’யின் தென்காசி மாவட்டப் பொறுப்பாளரான ஷேக் மைதீன், “இந்தப் பகுதியில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், அந்த நிலங்களில் விவசாயம் மட்டுமே செய்கிறோம். ஆனால், இங்கு நிலம் வாங்கியிருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வனத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என யாரிடமும் அனுமதி பெறாமல், கட்டடங்களைக் கட்டி வாடகைக்கு விடுவதோடு ஆறு, ஓடைகளை மறித்து செயற்கையாக அருவிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் தண்ணீர் கிடைக்காமல், எங்கள் விவசாயம் பாதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. இந்த நிலையில், தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கையால், எங்கள் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் மகிழ்ச்சியுடன்.


இந்த நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கூறுகையில், “நிலத்துக்குச் சொந்தக்காரர்களாகவே இருந்தாலும் தண்ணீரை திசைதிருப்புவது, செயற்கையாக நீர்வீழ்ச்சியை உருவாக்குவது ஆகியவை விதியை மீறிய செயல் என்பதால் அவற்றை அப்புறப்படுத்துகிறோம். மேக்கரை, குண்டாறு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் பணி தொடரும்” என்றார் உறுதியான குரலில்.
சபாஷ் கலெக்டர்!