சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்கள் அம்பலப்படுவார்கள்!"

பேராசிரியர் பாத்திமா பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
பேராசிரியர் பாத்திமா பாபு

ஸ்டெர்லைட்டின் பல விதிமீறல்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் அழுத்தமாகத் தீர்ப்பளித்துள்ளது.

நாடு மிகப்பெரும் பேரிடரில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் கொத்துக் கொத்தாக மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். இந்தச்சூழலில் ‘எங்களை அனுமதியுங்கள்... நாங்கள் ஆக்சிஜன் தயாரித்துத் தருகிறோம்’ என்று உச்ச நீதிமன்றத்தில் சொன்னது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம். தமிழகத்தில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் இசைவளிக்கப்பட, நீதிமன்றம் தமிழக அரசின் கண்காணிப்பில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதியளித்துள்ளது. இது ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடும் கொதிப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகிவரும் சூழலில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபுவுடன் உரையாடினேன்..
“ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்கள் அம்பலப்படுவார்கள்!"
“ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்கள் அம்பலப்படுவார்கள்!"

``கொரோனாவால் நாடே பெரும் பதற்றத்தில் இருக்கிறது. ஆக்சிஜன் தர முன்வரும் ஸ்டெர்லைட்டை இப்போதும் எதிர்ப்பது சரியா?’’

“நாடு ஒரு மருத்துவப் பேரிடரில் சிக்கியிருக்கிறது என்பதை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். இந்தச் சூழலைச் சமாளிக்க நம்மாலான எல்லாவற்றையும் செய்யவேண்டும்தான். மக்களைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு ஸ்டெர்லைட் நிர்வாகம் வந்தால் மனப்பூர்வமாக வரவேற்கத் தயார். ஆனால், ஸ்டெர்லைட் இந்தச்சூழலை முழுமையாக தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளப் பார்க்கிறது. மக்கள் கொரோனாவில் பரிதவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கவனத்தைத் திருப்பி ஆலையைத் திறக்கத் துடிக்கிறது.

ஸ்டெர்லைட்டின் பல விதிமீறல்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் அழுத்தமாகத் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு குற்றங்களை உறுதிசெய்து ஆலையை மூடியிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே ஸ்டெர்லைட் நிறைய பொய்களைப் பரப்பி வருகிறது. 1,050 டன் ஆக்சிஜனை எங்களால் உற்பத்தி செய்யமுடியும் என்று சொல்கிறது ஸ்டெர்லைட். அவர்கள் சொல்வது, தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன். உண்மையில் வெறும் 35 டன் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கமுடியும் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதுதான் ஸ்டெர்லைட்டின் உண்மை முகம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது தினமும் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இப்போதைய மருத்துவத் தேவை 250 டன். இந்தத் தேவை அதிகரிக்கலாம். தமிழகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் ‘நாங்கள் இன்னும் உற்பத்தியை அதிகரிக்கிறோம், அனுமதி தாருங்கள்’ என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறார்கள். அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரித்தாலும் அதை இங்கிருந்து பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தயாரிப்புச் செலவைவிட அதிகமாகும். மகாராஷ்டிராவுக்கு ஆக்சிஜன் தேவையென்றால் அந்த மாநிலத்தை ஒட்டியிருக்கும் ஒரு ஆலையில் ஆக்சிஜன் தயாரித்துப் பெறலாம். வேதாந்தா நிறுவனமே வட இந்தியாவில் பல பகுதிகளில் செயல்படுகிறது. அங்கெல்லாம் தயாரித்து வழங்கலாமே? அதையெல்லாம் செய்யாமல், குற்றம் நிரூபிக்கப்பட்டு மூடப்பட்ட தொழிற்சாலையைத் திறப்பது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி.”

“ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்கள் அம்பலப்படுவார்கள்!"
“ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்கள் அம்பலப்படுவார்கள்!"

``எதிர்ப்பாளர்களும் அடங்கிய கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையில்தானே ஆலை இயங்கும்?’’

“25 ஆண்டுக்காலமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். அவர்களின் ஜனநாயகத்தன்மை பற்றி எங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகுந்த பணபலமும் அதிகார பலமும் மிக்கவர்கள். நினைத்த எதையும் செய்யக்கூடியவர்கள். இங்கு மட்டுமல்ல... ஜாம்பியாவாக இருக்கட்டும், மகாராஷ்டிராவாக இருக்கட்டும்... எல்லா இடங்களிலும் அப்படித்தான். அந்த அனுபவங்களின் வழியாகத்தான் நாங்கள் இந்த எதிர்ப்பு நிலையில் வந்து நிற்கிறோம்.

ஒரு ஆலையை உருவாக்க வேண்டுமென்றால் மாநில அரசுத்துறைகளிடம் Consent to operate அனுமதி வாங்கவேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்துக்கு இன்றுவரை அந்த அனுமதியை வாங்கவேயில்லை. இவ்வளவு காலமும் அனுமதி இல்லாமல்தான் அது இயங்கி வருகிறது. அரசிடம் அனுமதியே பெறாமல் இயங்கும் ஒரு ஆலையிலிருந்துதான் அரசுக்கு ஆக்சிஜன் தயாரித்துத் தரப்போகிறார்கள்.

இதற்கு முன்பு பிரச்னைகள் ஏற்பட்டு ஆலை மூடப்பட்டபோது ஏதேனும் ஒருவழியில் புகுந்து திறந்துவிடுவார்கள். ஆனால் தற்போது எழுதப்பட்டுள்ள தீர்ப்பு உறுதியானது. அதனால் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி ஆலைக்குள் நுழைய வழி தேடுகிறார்கள். அதற்குத் தமிழக அரசு வாய்ப்பளித்திருக்கிறது.”

“ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்கள் அம்பலப்படுவார்கள்!"

``ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்பதை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனவே?’’

“நாங்கள் எல்லாக் கட்சிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். ஸ்டெர்லைட் போன்ற கார்பரேட் நிறுவனங்களிடம் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் நிதி பெறுகின்றன. அவர்கள் அந்த நன்றியை வெளிப்படுத்தவே செய்வார்கள். கோவிட் சூழலை ஸ்டெர்லைட் பயன்படுத்துவதைப் போல கட்சிகளும் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒக்கி புயல் முதல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை எத்தனை சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன..? இதற்கெல்லாம் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தாத அ.தி.மு.க அரசு, அவசர அவசரமாக இப்போது நடத்துகிறது என்றால் அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நாங்கள். இந்தத் தொழிற்சாலையைக் கொண்டு வந்தது அ.தி.மு.க என்றால், வளர்த்துவிட்டது தி.மு.க. அவர்கள் இதை ஆதரித்ததில் எங்களுக்கு ஆச்சர்யமில்லை.

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகப் போராடி மிகப்பெரிய விலை கொடுத்துள்ளோம். பல உயிர்களை விதைத்திருக்கிறோம். மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ஆங்காங்கே போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. இது பெரும் போராட்டமாக மாறும். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுவார்கள்!’’