
- கரிகாலன்
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) சென்னையில் இருந்தேன். மகள் சுடர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன் (79) காலமான விஷயத்தை அலைபேசியில் தெரிவித்தார். மகள் முதுநிலை அறுவை சிகிச்சை பயிலும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில்தான் பேராசிரியர் சிகிச்சை பெற்றுவந்தார்.
தமிழ் அறிஞர்கள் வரிசையில் முதன்மையான இடத்தில் வைத்துப் போற்றத் தகுந்தவர் பேராசிரியர் நெடுஞ்செழியன். தமிழ் அறிஞர் எனும் பதத்திற்கு விரிவான அர்த்தத்தை, தன் வாழ்வின் உள்ளடக்கமாகக் கொண்டவர். மேடைப்பேச்சு, எழுத்து கடந்த, உண்மையான தமிழ்ப் போராளி அவர்.
திருச்சி மாவட்டம், அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகப் பணியாற்றியவர். 20-க்கும் மேலான ஆய்வு நூல்களை எழுதியவர்.
எழுத்து வேறு, வாழ்வு வேறு என ஒழுகாத நெறி அவருடையது. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். காவிரிப் பிரச்னைக்காக மூன்று ஆண்டுகள் கர்நாடகச் சிறையில் கழித்தவர்.
‘பொய் வழக்குப் போட்டு
என் புகழையெல்லாம் தீய்த்து
கைவிலங்கு மாட்டியெனை
கடுஞ்சிறையில் பூட்டி
வெங்கொடுமை செய்தாலும்
நான் வீழ்ந்துவிட மாட்டேன்'
என்ற தமிழ் வீரம் அவருடையது.
ஆசீவகம் குறித்த அவருடைய ஆய்வுகள் முக்கியமானவை. ஆசீவகமே தமிழரின் ஆதிசமயம் என நிறுவியவர். ஐயனார் வழிபாடு குறித்த வியக்க வைக்கும் ஆய்வுகள் அவருடையவை. முன்பே சிலர் ஐயனார் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தாலும்கூட, தமிழ் நாட்டார் மரபோடு இணைந்து தன் ஆய்வில் உண்மைகளை அவர் நெருங்கினார்.
இந்த வகையில் அவரது ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' முக்கியமான நூல். சபரிமலை ஐயப்பனை ஐயனார் என்று உறுதியாகச் சொன்ன அவர், ‘சாத்தன் எனும் பெயரே சாஸ்தாவானது’ என்றும் இந்நூல்வழி நிறுவினார்.
18 படிகள் என்பது, ஆசீவகம் குறிப்பிடும், பசி, நீர்வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்வாய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு போன்ற 18 குற்றங்களைக் கடந்து செல்வதென்று விளக்கம் தந்தார்.
பௌத்தத்தில் சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர் மற்றும் ஸ்ராவகபுத்தர் என மூன்றுவகையான புத்தர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கௌதம புத்தருக்கு முன்னால் 28 புத்தர்கள் அவதரித்ததாகவும் பௌத்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தன்னுடைய ஆசீவக ஆய்வில் ஐயனார்களின் வண்ணக் கோட்பாடு பற்றிக் குறிப்பிடுகிறார் பேராசிரியர். கறுப்பு, நீலம், பச்சை, செம்மை, எல்லாவற்றையும் கடந்து கழிவெண் பிறப்பு (பரம சுக்ல) நிலையை அடைந்தவர்களாக மூன்று ஐயனார்களைச் சொல்கிறார். வேளிர் மரபில் பிறந்த சிற்றரசர் சாத்தன் (தர்ம சாஸ்தா), கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார் போன்றோர் இவர் அடையாளப்படுத்துகிற மூன்று ஐயனார்கள்.

சரணாகதி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது ஆசீவகம். இதற்கு அடுத்ததாகத் தோன்றிய பௌத்தம் ‘புத்தம் சரணம்' என்றது. ‘சாமியே சரணம் ஐயப்பா' என்பதும் ஆசீவகமே!
ஆசீவகம் கடவுளை மறுக்கிற ஒரு வாழ்வியல் நெறியாக விரித்துப் பார்க்கிறது பேராசிரியரின் ‘ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம்’ நூல். எல்லா மதங்களும் உலகைக் கடவுள் படைத்ததாகக் கூறியபோது அதிலிருந்து விலகிச் சிந்தித்தது ஆசீவகம். உலகம் இயல்பான பெருவெடிப்பால் தோன்றியதை ஆசீவக தாக்கமுடைய பழந்தமிழ் நூலான பரிபாடலை முன்வைத்து விவாதிக்கிறார் பேராசிரியர்.
தமிழின் மிக முக்கியமான அறிவுஜீவியாக இருந்தபோதும் எளிய வாழ்வை மேற்கொண்டவர். கர்நாடகச் சிறையில் பேராசிரியர் அடைக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்ற தோழர்கள் ‘சிறை உணவு ஒத்துக் கொள்கிறதா?' அக்கறையில் கேட்டார்கள். அப்போது அவர் அம்பேத்கர் கூறியதைத்தான் மேற்கோள் காட்டினார். அம்பேத்கர் இங்கிலாந்தில் இருந்தபோது, ‘இந்தியரான உங்களுக்கு இங்குள்ள உணவு பிடிக்கிறதா?’ என்றார்கள். ‘ஏழைகளுக்கு எல்லா நாட்டு உணவும் சொந்த நாட்டு உணவுதான்’ என்றார் அம்பேத்கர். தன்னை அடித்தட்டு தமிழரோடு அடையாளம் கண்டதுதான், அவரை வழக்கமான தமிழ் தேசியரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இக்காரணத்தினால்தான் அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘அயோத்திதாசர் ஆதவன் விருது' அளித்துப் பெருமைப்பட்டது.
தனது அந்திமக்காலத்திலும் தமிழ் ஆய்வில் தீராப் பெருவிருப்பம் கொண்டிருந்தார். ‘பசுமாட்டைக் கையில் பிடித்து மேய்த்துக் கொண்டிருப்போம். வீட்டிற்குத் திரும்ப நினைக்கிற பொழுதுதான் மாடு அவசரம் அவசரமாக மேயும். அத்தகைய அவசரத்தில்தான் நான் இருக்கிறேன்!' என்றார்.
மேய்ச்சல் நிலம் இருக்கிறது. காலம், பேராசிரியரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டது.