அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பேராசிரியர்கள் கூண்டோடு பணி நீக்கம்... என்ன நடக்கிறது பச்சையப்பன் கல்லூரியில்?

பச்சையப்பன் கல்லூரி
பிரீமியம் ஸ்டோரி
News
பச்சையப்பன் கல்லூரி

முன்னாள் நீதிபதி சண்முகம், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில்தான் 254 பேரின் நியமனமும் நிறுத்திவைக்கப்பட்டது

பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நகரங்களில் ஆறு கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த 2013-2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியுடையவர்கள் இல்லை எனக் கூறி, அறக்கட்டளையை நிர்வகித்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், உதவிப் பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ``முறையாகத் தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது’’ என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக உதவிப் பேராசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். “எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. `இது இயற்கை நீதிக்கு எதிரானது. நாங்கள் போதுமான தகுதியைப் பெறவில்லை எனக் கூறுவது தவறு. பல்கலைக்கழகமும் அரசும் எங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன” என அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பேராசிரியர்கள் கூண்டோடு பணி நீக்கம்... என்ன நடக்கிறது பச்சையப்பன் கல்லூரியில்?

இந்த நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க முன்னாள் நிர்வாகியும், வழக்கறிஞருமான இளங்கோவனிடம் பேசினோம். ``முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் அறிக்கையின் நகலைக் கொடுங்கள் எனக் கேட்டோம், கொடுக்கவில்லை. எங்கள் தரப்பு கருத்து எதையும் கேட்கவில்லை. எங்கள்மீது குற்றம் சுமத்திவிட்டு, பதில் சொல்ல வாய்ப்பு தராமலேயே அது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும். அதனால்தான் மேல்முறையீட்டுக்குச் சென்றோம். எங்கள் தரப்பு வாதத்தை இரு நீதிபதிகள் அமர்வு ஏற்றுக்கொண்டிருக்கிறது. கல்வித்தகுதியின் அடிப்படையில்தான் அனைவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எங்கள் ஆசிரியர்கள் காவல்துறை விசாரணைக்குக்கூடத் தயார். இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதை எங்களால் நிரூபிக்க முடியும்’’ என்கிறார் உறுதியாக.

இளங்கோவன், துரைக்கண்ணு
இளங்கோவன், துரைக்கண்ணு

இந்த விவகாரம் குறித்து, பச்சையப்பன் அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். ``முன்னாள் நீதிபதி சண்முகம், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில்தான் 254 பேரின் நியமனமும் நிறுத்திவைக்கப்பட்டது. அவர்கள் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதை நடைமுறைப்படுத்த அறக்கட்டளை நிர்வாகம் தயாராக இருக்கிறது. தவிர, இந்த 254 பேரில் சங்கீதா என்பவர் பிஹெச்.டி போலிச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அவர்மீது நாங்களே நேரடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்’’ என்றார்.