திருப்பூர் கோயில்வழியில் பாஜக சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், ``திமுக-வுக்கு மாற்று பாஜக-தான் என்று தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டனர். 2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 400 உறுப்பினர்களுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார். நான் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்துக்கான பில்லை வெளியிட முடியுமா என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்கிறார். இந்த கடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன்... எவ்வளவு பணம் கொடுத்தேன் என்ற அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடவிருக்கிறேன்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் மக்கள் கேள்வி கேட்பது வழக்கம். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி சாமானியனான என்னைப் பார்த்து கடிகாரத்துக்கு பில் கேட்கிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். கேட்க யாருமில்லை என்ற மமதை திமுக அமைச்சர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
கைக்கடிகாரத்துக்கு மட்டுமல்ல... காவல்துறையில் 2010-ல் சேர்ந்ததிலிருந்து 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட தயாராக இருக்கிறேன். எனது அனைத்து வங்கிக் கணக்குகள், சம்பளமாகப் பெற்ற சுமார் ரூ.1 கோடியை எவ்வாறு செலவு செய்தேன், ரூ.25 லட்சம் கட்டிய கிரெடிட் கார்டு பில் என மாதவாரியாக அனைத்து விவரங்களையும், அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவிருக்கிறேன். அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால், திமுக-வில் ஒரு வட்டத் தலைவர் தனது சொத்து விவரங்களை வெளியிட தயாராக இருக்கிறாரா... முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆகியோரின் சொத்துப் பட்டியலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடவிருக்கிறேன்.
இதுவரை முதல்வர் உட்பட 13 அமைச்சர்களின் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து விவரங்களைச் சேகரித்திருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் வரை சொத்து விவரங்கள், இந்தோனேசியாவில் திமுக அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான துறைமுகம் ஆகிய விவரங்களைத் தனித்தனியாக வெளியிடவிருக்கிறேன்.
அமைச்சர் உதயநிதி லெக்சஸ் கார் வாங்கியபோது, அதற்கு வரி செலுத்தாமல் இந்தியாவுக்குள் ஏமாற்றி கொண்டுவந்ததைக் கண்டறிந்து சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட சாட்சி விவரங்களையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடுவேன்.

70 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டிருந்தோம். தற்போது பூனைக்கு மணி கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்காமல் அடுத்த அடி எடுத்துவைத்து எந்தப் பயனும் இல்லை. அதை இங்குள்ள கட்சிகள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆனால், எங்கள்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததால் திமுக-வை எதிர்த்து துணிச்சலாகக் கேள்வி கேட்கிறோம். முதல்வரின் மருமகன் சபரீசன் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.14 கோடி. அது எங்கிருந்து வந்தது... மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்கள், முதல்வர் முன்பு என்னென்ன கடிகாரம் கட்டினார்... என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தினார் என்ற அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு எத்தனை சாராய ஆலைகள் உள்ளன... அவற்றின் சொத்து மதிப்பு, அவரின் ஆலையிலிருந்து மாதா மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை மது பாட்டில்கள் விற்பனைக்குச் செல்கின்றன என்ற அனைத்துத் தகவல்களும் ஏப்ரல் மாத அறிக்கையில் இடம்பெறும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கப் பிரிவு தொடர்ந்திருக்கும் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றன.
அவர் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞர்களுக்கு ஒரு முறைக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. யாருடையது... இதுவரை அந்த வழக்குரைஞர் எத்தனை முறை ஆஜராகியிருக்கிறார்... அதற்கான செலவு, கரூரைச் சுற்றி 650 ஏக்கர் பரப்பளவில் அவர் வாங்கிக் குவித்திருக்கும் நிலங்களின் விவரம் அனைத்தையும் வெளியிடவிருக்கிறேன்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் வைரங்கள் இருப்பதாகவும், ஒட்டுக்கேட்கும் கருவி இருப்பதாகவும் திமுக-வினர் புரளியைக் கிளப்பினர். அதேபோல், தற்போது, என் கடிகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

திமுக-வினருக்கு சொந்தமான சாராய ஆலைகளிலிருந்து 60 சதவிகித மது பாட்டில்களை டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது, எவ்வாறு திமுக மதுக்கடைகளை மூடும் என்று தெரியவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடியாக டாஸ்மாக் வருமானம் உயர்ந்துவிடும். ஏழைகளின் பணத்தை மதுக்கடைகள் மூலம் அரசே திருப்பி எடுத்துக்கொண்டால், அவர்களின் வாழ்வாதாரம் எப்படி உயரும்... இதுதான் திராவிட மாடலா?
திமுக-வினரின் ஊழல் குறித்து எதுவும் கேட்காமல்விட்டதன் விளைவு, இன்றைக்கு இந்தியாவில் ஊழலில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் மாறியிருக்கிறது. தமிழகத்தில் 30 சதவிகித கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை இருக்கிறது. அமைச்சர்கள், மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு அடிமையாக இருப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். அதற்காக தமிழக மக்களையும் அடிமையாக மாற்ற நினைப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலையை ஏற்றிவிட்டு, அதன் மூலம் வருமானம் அதிகரிப்பதாக முதல்வர் கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. சாதாரண மனிதனின் நிலை என்ன என்று முதல்வருக்குத் தெரியவில்லை. மக்களிடம் பொய் சொல்லி 18 மாதங்களை ஓட்டிவிட்டனர். வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலினை துணைப் பிரதமர் ஆக்கிவிட்டு, உதயநிதியை முதல்வராக ஆக்கிவிடலாம் எனக் குடும்ப உறுப்பினர்கள் நினைக்கிறார்கள்.
மகன் உதயநிதி சிறந்த அமைச்சர் என்று பெயர் எடுக்க பதவியேற்புக்கு முன்பாக இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைச் செயலர்களாக மு.க.ஸ்டாலின் நியமித்திருக்கிறார். உதயநிதிக்கு சரக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை இரண்டு வருடங்களில் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``திமுக எங்களைத் தொட்டுவிட்டது. அவர்கள் ஆரம்பித்தார்கள், நாங்கள் முடிவுரையை எழுதவிருக்கிறோம். திமுக-வின் ஊழல்களை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவர பாஜக சார்பில் ஒரு மாதத்தில் இலவச தொலைபேசி எண், இணையதளம், செல்போன் ஆப் உருவாக்கவிருக்கிறோம்.
அதில், திமுக-வினரின் சொத்து விவரத்தை பொதுமக்களே இணையதளம், செல்போன் ஆப் அல்லது இலவச தொலைபேசி எண் வழியாகத் தெரிவிக்கலாம். தொடர்புகொள்ளும் மக்களின் எந்த விவரத்தையும் நாங்கள் கேட்க மாட்டோம். எங்கள் குழு ஆராய்ந்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்யும். யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். தமிழகத்தின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 25 லட்சம் கோடி இருக்கும். அதில், 10 சதவிகிதம் திமுக-வினரிடம் இருக்கிறது” என்றார்.