அரசியல்
அலசல்
Published:Updated:

சம்பளம் வாங்கப் போனேன்... சதி செய்துவிட்டார்கள்!

பெண் இன்ஜினீயர்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் இன்ஜினீயர்

- போலீஸார் மீது பெண் இன்ஜினீயர் பாய்ச்சல்... வெளிச்சத்துக்கு வருமா உண்மை?

சென்னை தி.நகரிலுள்ள ஸ்பாவுக்கு முதல் மாதச் சம்பளம் வாங்கச் சென்றார் ஒரு பெண் இன்ஜினீயர். அவரை விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் பாலியல் வழக்கில் சேர்த்ததோடு, அவரை 13 நாள்கள் அரசுக் காப்பகத்தில் தங்கவைத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்ஜினீயர், தனக்கு நடந்த கொடுமைகளை தைரியமாகப் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருப்பதோடு, போலீஸாருக்கு எதிராகச் சட்டரீதியான தனது போராட்டத்தையும் தொடங்கியிருக்கிறார்!

என்ன நடந்தது என, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்ஜினீயரிடம் பேசினோம். ``என்னுடைய அப்பா மதுரையில் நடைபாதைக் கடை வைத்திருக்கிறார். நான் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கும்போதே பார்ட் டைம் வேலை தேடினேன். கடந்த 2020-ம் ஆண்டு, வேலை தேடி சென்னைக்கு வந்து என்னுடைய தோழியுடன் தங்கியிருந்தேன். கொரோனா காரணமாக மீண்டும் நான் ஊர் திரும்பினேன். பிறகு, தோழி மூலம் தி.நகரிலுள்ள ஸ்பா ஒன்றில், 2021-ம் ஆண்டு செப்டம்பரில், 20,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் புரொமோஷன் தொடர்பான வேலை கிடைத்தது. உடனே, நான், அம்மா, தம்பி எனக் குடும்பத்தோடு சென்னைக்கு வந்தோம். அப்பா மட்டும் ஊரில் இருக்கிறார்.

எனக்கு ஆன்லைனில்தான் வேலை என்பதால், வீட்டிலிருந்து வேலை பார்த்துவந்தேன். அக்டோபர் 1-ம் தேதி, முதல் மாதச் சம்பளம் வாங்க ஸ்பாவுக்குச் சென்றேன். மதியம் 2 மணியளவில் ஸ்பாவின் வரவேற்பறையில் நான் அமர்ந்திருந்தபோது, ஒரு பெண் உட்பட நான்கு பேர் வந்தனர். அவர்கள் என்னிடம் தங்களை ‘ஆன்டி வைஸ் ஸ்குவாட்... (Anti Vice Squad) போலீஸ்’ என அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். பின்னர் ஸ்பாவுக்குள் சென்று சோதனை நடத்தினர். ஓர் அறையிலிருந்து ஸ்பாவில் வேலை பார்க்கும் பெண் தெரபிஸ்ட் ஒருவரையும், ஆண் கஸ்டமரையும் தனியாக அவர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதன் பிறகு, என்னையும் சேர்த்து நான்கு பெண்கள், மூன்று கஸ்டமர்கள் என ஏழு பேரை போலீஸ் வாகனத்தில் ஏறச் சொன்னார்கள். ‘சார்... நான் சம்பளம் வாங்கத்தான் இங்கு வந்தேன்’ என்று சொல்ல முற்பட்டபோது, என்னைப் பேசவிடாமல் தடுத்து, வாகனத்தில் ஏற்றி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபசாரத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு எங்களை மிகக் கேவலமாக நடத்தினார்கள். போலீஸார் என்னையும் மற்றவர்களையும் பேசிய வார்த்தைகளை வெளியில் சொல்ல முடியாது.

சம்பளம் வாங்கப் போனேன்... சதி செய்துவிட்டார்கள்!

இதையடுத்து, என்னையும் சேர்த்து நான்கு பெண்களை கோவிட் பரிசோதனையெல்லாம் முடித்து மயிலாப்பூரிலுள்ள அரசுக் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். காப்பக ஊழியர்கள், “ச்சீ நாயே...” என்று ஆரம்பித்துப் பேசியதெல்லாம் போலீஸே பரவாயில்லை என்கிற வகையில் இருந்தது. ஆடைகளைக் கழற்றி சோதனை செய்தபோது, கூனிக்குறுகிப்போனேன். அன்றைய தினம் இரவே வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பெண் நீதிபதி முன் எங்களை ஆஜர்படுத்தினர். எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அக்டோபர் 12-ம் தேதி, போலீஸார் எங்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது, மருத்துவமனை யிலிருந்த ஊழியர்களும் என்னை நடத்தியவிதம் மிகவும் மோசமாக இருந்தது. தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூடத் தோன்றியது.

என்னுடைய அம்மா, வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் என்னைக் காப்பகத்திலிருந்து விடுவிக்க மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளால், அக்டோபர் 14-ம் தேதி நான் மட்டும் விடுவிக்கப்பட்டேன். என் உழைப்புக்கான ஒரு மாதச் சம்பளத்தை வாங்கப் போனேன்... சதி செய்துவிட்டார்கள். என் எதிர்காலத்தையே போலீஸார் கேள்விக்குறியாக்கிவிட்டனர். எனக்கு நடந்த கொடுமை இனி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதற்காகத்தான் துணிச்சலுடன் இந்தச் சம்பவத்தை வெளியில் தெரிவித்தேன்” என்றார்.

பெண் இன்ஜினீயரின் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் பேசினோம். “இந்த வழக்கில் விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சம்பந்தப்பட்ட போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆன்லைன் மூலம் கமிஷனருக்குப் புகாரளித்திருக் கிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக, சம்பந்தப்பட்ட போலீஸார் 5 கோடி ரூபாய் வழங்கவேண்டி, நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவிருக்கிறேன்” என்றார்.

ஸ்பாவின் உரிமையாளர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “எனக்கு தி.நகரில் மட்டும்தான் ஸ்பா உள்ளது. முறையாக உரிமம் பெற்று சில கோடிகள் முதலீடு செய்துதான் நடத்துகிறேன். இத்தனை செலவு செய்த இடத்தில், பாலியல் தொழில் செய்வார்களா? போலீஸார் கேட்ட அளவுக்கு லஞ்சத்தொகை கொடுக்க முடியாததால் என்மீது வீணாகக் குற்றம் சுமத்துகிறார்கள்” என்றார்.

இன்ஸ்பெக்டர் வெங்கட்குமாரிடம் பேசினோம். ``பல்வேறு புகார்களையடுத்து சென்னையிலுள்ள சில ஸ்பாக்களில் சோதனை நடத்திவருகிறோம். அந்த வரிசையில், தி.நகரிலுள்ள அந்த மசாஜ் சென்டரில் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த பெண் இன்ஜினீயர் ஒருவர் உட்பட நான்கு பெண்களை மீட்டோம். ஸ்பா நடத்திவரும் பாலகிருஷ்ணன், இந்தப் பெண் இன்ஜினீயரை வைத்துக் காய்நகர்த்தி, நாங்கள் பொய் வழக்கு போட்டிருப்பதாக நாடகம் ஆடுகிறார். அவர்மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. எங்களிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளன. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நீதிமன்றம் மூலம் எல்லா உண்மைகளும் வெளிவரும்” என்றார்.

உண்மை சீக்கிரம் வெளிவரட்டும்!