அலசல்
Published:Updated:

வரிசையில் காத்திருக்கும் கஸ்டமர்கள்... குவியல் குவியலாக காண்டம்...

குவியல் குவியலாக காண்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
குவியல் குவியலாக காண்டம்

பாலியல் தொழில் முதல் வழிப்பறி வரை கனஜோர்!

இரவு 9 மணி.... திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அதைவிட சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கும் அந்தப் பாழடைந்த கட்டடம். இளசுகள் முதல் பெருசுகள் வரை அரிதாரம் பூசிய சில திருநங்கைகளைப் பின்தொடர்ந்து சென்று இருட்டுக்குள் மறைகிறார்கள். அதன் பிறகு இரவு முழுவதும் நாம் கண்ட காட்சிகளும், விசாரணையில் கிடைத்த தகவல்களும் அதிர்ச்சி ரகம்!

பகலில் தொழுநோய் சிகிச்சை மையமாக இயங்கிவரும் அந்த இடமும், அதையொட்டி இருக்கும் காலி இடமும் இரவில் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யும் மையமாக மாறிப்போயிருந்தன. பேருந்து நிலையத்தில் கஸ்டமர்களைப் பிடித்துவரும் திருநங்கைகள், வெகு இயல்பாக அந்தக் கட்டடத்துக்குள் செல்கிறார்கள். இளசுகள், பெருசுகள், குடிபோதை, கஞ்சா ஆசாமிகள் என்று பலரும் அந்தக் கட்டடத்தின் அருகே வரிசையாகக் காத்திருக்கிறார்கள். டீல் முடிந்து பணம் கைமாறியதும் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்படுகிறார்கள். லேசாக இருட்டத் தொடங்கியதுமே ஆரம்பமாகும் இந்தப் பாலியல் தொழில், விடியற்காலை 5 மணி வரை தொடர்கிறது. ஆனால், இப்படியொரு விஷயமே நடக்காததைப்போல வெகு கேஷுவலாக அந்த இடத்தை ஒட்டியே 10-க்கும் மேற்பட்ட கையேந்திபவன்கள் இயங்கிவருகின்றன. விடியற்காலை வரை நாமும் தூரத்திலிருந்து இவற்றையெல்லாம் கண்காணித்துவிட்டு, அன்றைய தினம் காலை 10 மணிக்கு மீண்டும் அந்தக் கட்டடத்துக்குச் சென்றோம்.

வரிசையில் காத்திருக்கும் கஸ்டமர்கள்... குவியல் குவியலாக காண்டம்...

அப்போது நாம் கண்டது அதிர்ச்சியின் உச்சம். அந்தப் பகுதி முழுவதும் காலடியே வைக்க முடியாத அளவுக்குக் குவிந்து கிடந்தன ஆணுறைகள். முதல்நாள் இரவு பயன்படுத்தப்பட்டது முதல் மண்ணில் மக்கிப்போயிருந்தது வரை ஆயிரக்கணக்கில் குவிந்திருந்த ஆணுறைகளே, அங்கு பாலியல் தொழில் பல ஆண்டுகளாக நடப்பதை அப்பட்டமாகக் காட்டின. அங்கிருந்த கிணற்றை எட்டிப்பார்க்க... அதிலும் ஆணுறைகள் குவிந்திருந்தன. ‘எப்படி இந்தப் பாலியல் தொழில் தடையில்லாமல் கனஜோராக நடக்கிறது, காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா அல்லது அவர்களின் ஆதரவோடுதான் இது நடக்கிறதா?’ என்று ஒருகணம் அதிர்ந்துபோனோம்.

தொழுநோய் சிகிச்சை மையத்திலிருந்த அதிகாரிகளிடம் இது பற்றிக் கேட்டால், தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக புலம்பித் தீர்த்தார்கள்... ‘‘எத்தனையோ தடவை போலீஸ்ல புகார் கொடுத்துட்டோம். ஒண்ணும் நடவடிக்கை இல்லை. சாயங்காலம் நாங்க ஆபீஸை மூடுறதுக்குள்ளேயே உள்ளே நுழைய ஆரம்பிச்சிடுறாங்க. கட்டடத்தைச் சுத்தி கம்பி வேலி, தடுப்புகள்னு போட்டுப் பார்த்துட்டோம். இரண்டு நாள்ல எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு உள்ளே நுழைஞ்சுடுறாங்க. ஆறு மாசத்துக்கு முன்னாடி எங்க நைட் டூட்டி வாட்ச்மேன் இதைக் கேள்வி கேட்டதுக்காக, எட்டு தையல் போடுற அளவுக்கு அவர் மண்டையைப் பொளந்துட்டாங்க. அதுக்கு பயந்துக்கிட்டே நைட் டூட்டிக்கு வாட்ச்மேன் வர்றதில்லை’’ என்றார்கள்.

வரிசையில் காத்திருக்கும் கஸ்டமர்கள்... குவியல் குவியலாக காண்டம்...

அருகில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த டிரைவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘போலீஸ் சப்போர்ட்டுலதான் ரெண்டு வருஷமா இந்தத் தொழிலே நடக்குது. இந்த இடத்தைத் தாண்டிப் போற குடும்பப் பெண்கள் ‘ச்சீ’ன்னு தலையில அடிச்சுக்கிட்டுதான் போறாங்க. இதே பகுதியைச் சேர்ந்த பல திருநங்கைகள் ‘இந்த மாதிரி சில பேர் பண்றதால, எங்க மொத்தச் சமூகத்துக்கும் கெட்ட பேர்’ என்று புலம்புறாங்க. பாலியல் தொழில் மட்டுமா இங்கே நடக்குது? அடிதடி, மிரட்டல், வழிப்பறினு எல்லாமே நடக்குது. திருநங்கைகளே ஆள்வெச்சு ‘நான் உள்ள கூட்டிட்டுப் போற மாதிரி போறேன். நீ வந்து அடிச்சு புடுங்கிடு’னு வழிப்பறி பண்றாங்க. எத்தனையோ பேர் பணம், செல்போனெல்லாம் பறிகொடுத்துட்டு அழுதுக்கிட்டே போறதைப் பார்த்துருக்கோம். பாதிக்கப்பட்டவங்க கெளரவம் கருதி போலீஸ்கிட்ட போறதில்லை’’ என்று குமுறினார்கள்.

இது சம்பந்தமாக நாம் அங்கு புகைப்படங்களை எடுத்து, விசாரணையில் இறங்கிய மறுநாளே, சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி கண்டோன்மென்ட் போலீஸார், அந்த இடத்தை அவசர அவசரமாகச் சுத்தம் செய்தார்கள். ஜே.சி.பி இயந்திரத்தைவைத்து, குவியல் குவியலாகக் கிடந்த ஆணுறைகளை அப்புறப்படுத்தினார்கள். நாம் விசாரிப்பது தெரிந்ததும், பிரச்னையை போலீஸார் சரிசெய்தது நல்ல விஷயம்தான். ஆனால், இரண்டு ஆண்டுகளாக இந்த அக்கறை எங்கே போனது என்பதுதான் கேள்வி?

வரிசையில் காத்திருக்கும் கஸ்டமர்கள்... குவியல் குவியலாக காண்டம்...
வரிசையில் காத்திருக்கும் கஸ்டமர்கள்... குவியல் குவியலாக காண்டம்...

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் பேசினோம்... ‘‘அந்த காலி இடத்தோட ஓனர்தான் முதல்ல அந்த இடத்தைப் பாதுகாக்கணும். இருந்தாலும் தொடர்ந்து அங்கே தவறு நடக்காம இருக்க போலீஸை ஃபாலோ பண்ணச் சொல்லியிருக்கேன். இதுல சில சிக்கல்களும் இருக்குது... திருநங்கைகளைக் கரிசனத்தோடதான் கையாளணும்னு உயர் நீதிமன்றம் சில விஷயங்களைச் சொல்லியிருக்கு. அதனால சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளோட இணைந்து நடவடிக்கை எடுக்குறோம்” என்றார்.

இனியாவது போலீஸாரின் நடவடிக்கைகளில் தீவிரம் இருக்கிறதா என்று பார்ப்போம்!