அடுத்தடுத்து தூக்கு... சரமாரி துப்பாக்கிச்சூடு... உச்சத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்...

- கொலைவெறியாடும் இரான் அரசு!
`கொல்லப்பட்டாலும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என இரான் நாட்டு மக்கள் மூன்று மாதங்களைக் கடந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆளும் அதிபர் இப்ராஹிம் ரெய்சியோ, ‘இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமே நாட்டைச் சீர்குலைப்பதும், வளர்ச்சியைத் தடுப்பதும்தான்’ எனக் கூறி போராட்டத்தை ஒடுக்குவதில் தீவிரம் காட்டிவருகிறார்.
என்ன நடக்கிறது இரானில்?
கொடுமையான சட்டம்... கொலையான மாஷா!
ஒன்பது வயது சிறுமி முதல் அனைத்துப் பெண்களும் தங்கள் தலைமுடியை மறைக்கும்படி ஹிஜாப் அணிய வேண்டும் என்பது இரானின் கட்டாயச் சட்டம். தவறுதலாக இதை மீறுவோருக்குக்கூட அபராதம், பணிநீக்கம், சிறைத் தண்டனை உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பெண்கள் உடைசார்ந்த இந்தச் சட்ட திட்டங்களைப் பேணிக்காப்பதற்காகவே பிரத்யேகமாக `காஸ்த் எர்ஷாத்’ (Gasht-e-Ershad) எனும் ‘கலாசார காவல் படை’யையும் உருவாக்கி, கண்காணித்துவருகிறது இரான் அரசாங்கம்.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தன் உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயதான இளம்பெண் மாஷா அமினியை `ஹிஜாப்’ ஒழுங்காக அணியவில்லை எனக் கூறி கைதுசெய்திருக்கிறது கலாசார காவல் படை. அதன் பின்னர், போலீஸ் கஸ்டடியில் இருந்த அவரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்க, கோமா நிலைக்குச் சென்ற மாஷா அமினி, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதான் இரான் மக்களின் கொந்தளிப்புக்குக் காரணம்!

ஹிஜாப்பை எரித்து போராட்டம்!
மாஷா அமினியின் மரணத்துக்கு நீதிகேட்டு இரானியப் பெண்கள், தலைநகர் தெஹ்ரான் தொடங்கி நாடெங்கிலும் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பைக் கிழித்தெறிந்தும், எரித்தும், முடிகளை வெட்டி வீசியும் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். `கலாசார காவல் படையைத் திரும்பப் பெற வேண்டும்; ஹிஜாப் கட்டாயச் சட்டத்தை நீக்க வேண்டும்’ என்பதே போராடும் பெண்களின் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்தது.
இதனால் எரிச்சலடைந்த இரான் அரசாங்கம், `கடவுளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்; தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்’ எனக் கூறி போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையைக்கொண்டு அடித்து விரட்டியது. பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் தீவிரமாகினர். பாதுகாப்புப் படையினரின் அடிதடி, துப்பாக்கிச்சூடாக மாறியது.
சரமாரி துப்பாக்கிச்சூடு, குவிந்த கண்டனம்!
இரான் பாதுகாப்புப் படையினரின் கோரமான துப்பாக்கிச்சூட்டில் சிறுமிகள், இளம்பெண்கள், இளைஞர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சுமார் 18,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இது தவிர கூட்டத்தைக் கலைப்பதற்காக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பல பெண்களின் முகம், பிறப்புறுப்பு, தொடைகளில் பெல்லட் குண்டுகள் பாய்ந்தன.

இரானின் இந்தச் செயலுக்கு ஐ.நா உட்பட உலக நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன. உலகெங்கிலும் பல்வெறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள், போராடும் இரானியப் பெண்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பினர். தீவிரமடையும் உள்நாட்டுப் போராட்டம், உலக நாடுகளின் தொடர் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த டிசம்பர் 4-ம் தேதி, `ஹிஜாப் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாகவும், கலாசார காவல்படையை கலைக்கவிருப்பதாகவும்’ இரான் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாஃபர் மான்டசெரி அறிவித்தார்.
பெயரளவுக்கு அறிவிப்பு! - ஆண்களுக்கு தூக்கு...
இரான் அரசாங்கத்தின் அறிவிப்பை போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக ஒருசாரார் கொண்டாடினாலும், பெரும்பாலானோர் அதை நம்பாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதற்கேற்ப இரான் அரசாங்கமும் `போராட்டத்தைப் பரப்பியது, பாதுகாப்புப் படையினரை தாக்கியது, கொலைசெய்தது’ போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து அதிரச்செய்திருக்கிறது. அதில், இரண்டு பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனையை நிறைவேற்றி கடுமை காட்டியிருக்கிறது.

அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனை இரானிய மக்களை மீண்டும் கொதித்தெழச் செய்திருக்கிறது. அதேசமயம், இரான் ரஷாவி கோர்ஷன் மாகாண நீதிபதி கோலம் சதேகி என்பவர், ``சட்டத்தை மீறிய கலகக்காரர்களுக்கு தண்டனை வழங்கி, சட்டப் பணிகளைச் செய்த சட்ட அமலாக்கத்துக்கு நன்றி” எனத் தெரிவித்து எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்.
இரானின் இந்தப் போக்கைக் கண்டித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான நெட் பிரைஸ், ``இந்த கொடூரமான செயலைக் கடுமையாக எதிர்க்கிறோம். இரான் அரசாங்கம் கொடூரமான தண்டனைகள் மூலம் தனது மக்களின் கருத்துகளை அடக்க நினைக்கிறது. உண்மையில் அது தன் சொந்த மக்களுக்கு எவ்வளவு பயப்படுகிறது என்பதை இதுகாட்டுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார். உலக நாடுகள், மனித உரிமைகள் ஆணையங்கள், ஐ.நா சபை என பலதரப்பு அழுத்தங்களையும் தாண்டி இரான் அரசாங்கம், மஹான் சத்ரத், முகமது மெஹ்தி கராமி என அடுத்தடுத்த நபர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. நாளுக்கு நாள் கொல்லப் பட்டவர்கள், கைதானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது!
மக்களுக்காகத்தான் நாடும் அரசும். மக்கள் விரும்பாத எதையும் அவர்கள் மீது திணிப்பது கொடூரமானது.