
கட்டாய ஹிஜாபுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை, அரசுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்காமல், கடவுளுக்கு எதிரான போராட்டமாக இரான் அரசு கருதுகிறது
இரானில், பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராகச் சில மாதங்களுக்கு முன்பு வெடித்த போராட்டம் இன்றுவரை ஓயவில்லை. போராட்டக்காரர்கள்மீது இரான் அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவிவரும் நிலையில், ‘போராட்டக்காரர்களில் 15,000 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று வெளியான செய்தி, சர்வதேச அளவில் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. ‘அதன் உண்மை நிலை என்ன?’ என்பதுதான் சர்வதேச சமூகம் அச்சத்துடன் எழுப்பியிருக்கும் கேள்வி.
ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம், இரானில் மென்மையாகத் தொடங்கவில்லை. ரத்தமும் கண்ணீருமாகத்தான் வெடித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம், ‘ஒன்பது வயது சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை, ஹிஜாப் அணிவது கட்டாயம்’ என்று உத்தரவிட்டது இரான் அரசு. பெண்கள் ஆடை அணியும்விதத்தைக் கண்காணிப்பதற்காக ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புக் காவல் பிரிவினரும் களமிறக்கப்பட்டனர். அந்தச் சூழலில், இரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற இளம்பெண், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானிலுள்ள உறவினரைச் சந்திக்க, குடும்பத்துடன் சென்றார். அவரை வழிமறித்த சிறப்புக் காவல் பிரிவினர், மாஷா முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, அவரைக் கைதுசெய்தனர். போலீஸ் காவலில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாஷா, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் இரானில் வெடித்தது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவைகளை அரசு முடக்கியும், ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டதால் போராட்டத்தின் தீவிரத்தை இரான் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஹனானேன் கியான் என்ற இளம்பெண் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் கறுப்பு உடையணிந்து தெஹ்ரான் வீதிகளில் இறங்கினர். ஏராளமான பெண்கள், தங்கள் கூந்தலைக் கத்தரித்தும், ஹிஜாபை எரித்து வீடியோ வெளியிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்றுவரை ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், போராட்டக்காரர்கள்மீது கடுமையான அடக்குமுறைகளை இரான் அரசு ஏவிவிட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், ‘போராட்டக்காரர்களில் 15,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது’ என்ற செய்தி, சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல நாடுகளிடமிருந்து இரான் அரசுக்குக் கண்டனங்கள் குவிந்தன. “15,000 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்திருப்பது காட்டுமிராண்டித்தனமான செயல்” என்று நவம்பர் 15-ம் தேதி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட் செய்தார். இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த சர்வதேச ஊடகங்கள், ‘செய்தியில் முழுமையான உண்மை இல்லை’ என்று தற்போது தெரிவித்திருக்கின்றன.

நவம்பர் 6-ம் தேதி வெளியான ஒரு கடிதத்தை வைத்து, யூகத்தின் அடிப்படையில் அப்படியொரு செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது. அதாவது, ‘அரசுக்கு எதிராகப் போராடுபவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளக் கூடாது. கடவுளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைக் கடுமையாகக் கையாள வேண்டும்’ என நீதித்துறையைக் கேட்டுக்கொள்ளும் ஒரு கடிதத்தில், இரான் எம்.பி-க்கள் 227 பேர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். கடவுளுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்களுக்கு இரான் நீதிமன்றத்தால், அங்குள்ள சட்டப்படி மரண தண்டனை வழங்க முடியும் என்று சொல்லப்படுகிறது. தற்போது, அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 15,000 பேர் இரான் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்தத் தகவல்களை, எம்.பி-க்களின் கடிதப் போக்குவரத்தோடு தொடர்புபடுத்தித்தான், ‘15,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது’ என்பது போன்ற தகவல் காட்டுத்தீயாகச் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறது.
கைதுசெய்யப்பட்டிருக்கும் 15,000 பேரில் 2,000 பேர்மீது அதிகாரபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தியை இதுவரை இரான் அரசுத் தரப்பு மறுக்கவில்லை.

“கட்டாய ஹிஜாபுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை, அரசுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்காமல், கடவுளுக்கு எதிரான போராட்டமாக இரான் அரசு கருதுகிறது. ஆட்சியாளர்களாக இருக்கும் மத அடிப்படைவாதிகளின் பார்வை அது. சுதந்திரத்தை விரும்பும் இன்றைய தலைமுறையினரோ, மத அடிப்படைவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். ஒருமுறை பற்றவைக்கப்பட்ட புரட்சித்தீ, அணையாது” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
1979 புரட்சியை வழிநடத்தியதைப்போல, இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையும் இளைஞர்களே வழிநடத்துகிறார்கள். மீண்டும் ஒரு புரட்சியை நோக்கிச் செல்கிறது இரான்!