Published:Updated:

அனிதா, கௌரி லங்கேஷ்...! - முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறைகூவல்

அனிதா, கௌரி லங்கேஷ்...! - முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறைகூவல்
அனிதா, கௌரி லங்கேஷ்...! - முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறைகூவல்

அனிதா, கௌரி லங்கேஷ்...! - முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறைகூவல்

மாணவி அனிதாவின் தற்கொலை, கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை ஆகியவற்றைக் கண்டித்து, இம்மாதம் 1-ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன இயக்கம் நடத்துவது எனத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் (தமுஎகச) தீர்மானித்துள்ளது. 

இதுகுறித்து த.மு.எ.க.ச. தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலர் சு.வெங்கடேசன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்தியில் இந்துத்வா ஆட்சியும் மாநிலத்தில் அதன் அடிவருடி ஆட்சியும் நடக்கும் இந்த நாள்கள் பேயாட்சி நாள்கள் என்பதன் சாட்சியாக நாளும் ஒரு கொடூரத்தை நாம் சந்தித்து வருகிறோம். நீட் என்னும் ஒற்றைத்தேர்வுக் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட நம் அன்புச் செல்வமான குழந்தை அனிதாவின் மரணத்தால் தமிழகமே குலுங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மதச்சார்பற்ற மாண்புகளுக்காகப் போராடி வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆர் எஸ் எஸ் பரிவாரக் கொலையாளிகளால் அவரது வீட்டு வாசலிலேயே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கல்வி மறுக்கப்பட்ட சூத்திரன் ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டிய கொலைபாதகம் இன்றும் தொடர்கிறது.கட்டைவிரலை வெட்டிய துரோணன் பெயரிலும் விருது கட்டை விரலைக் கொடுத்தவன் பெயரிலும் விருது கட்டை விரலைக் காவு வாங்கியதால்வெற்றியைத் தக்க வைத்துக்கொண்ட அர்ஜூனன் பெயரிலும் கூட விருது என்று பம்மாத்தில் நகரும் மத்திய அரசு எடுத்த கொலைவாள்தான் நீட் ஒற்றைத்தேர்வு. இதோ ஏகலைவனின் பேத்தி இறந்து கிடக்கிறாள். என்ன செய்யப்போகிறோம் நாம் என்கிற கேள்வி நம் மனங்களைக் குடைகிறது.

நரேந்திர தபோல்கரும் கோவிந்த் பன்சாரேயும் எம். எம். கல்புர்கியும் கொலை செய்யப்பட்ட அதே பாணியில் இன்று கன்னட இடதுசாரி எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆர் எஸ் எஸ்ஸின் சித்தாந்த்துக்கு எதிராக எவரும் குரல் எழுப்பக் கூடாது என்கிற அச்சத்தை உருவாக்க சங்கிகள் திட்டமிட்டுச் செய்துவரும் கொலைவரிசை இது. நம் கண்ணீரும் கோபாவேசமும் ஒருமுகப்படுத்தப்பட்டு இந்த நாகரிகமற்ற பிறவிகளுக்கும் அவர்களின் சித்தாந்தத்துக்கும் எதிராகச் செயல்வடிவம் பெற வேண்டும்.

மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ள இந்த நேரத்தில் எழுத்தாளர் கலைஞர்களின் அமைப்பாகிய நாம் அதே உணர்வோடு இணைந்து நிற்பதோடு இவ்விரு படுகொலைகளுக்கும் பின்னால் நிற்பது ஒரே அரசியல்தான் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்லும் கருத்துப்போரை நடத்த வேண்டும்.

பகுத்தறிவாளர் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று தமிழகம் முழுக்க மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் கண்டன இயக்கம்-சாத்தியமான எல்லா வடிவங்களிலும்-கருத்தரங்கு, பொதுக்கூட்டம், வீடு வீடாகப் பிரசுரம் வழங்குதல், ஊர் கூடி ஓவியம்-என நடத்திட தமுஎகச அறைகூவல் விடுக்கிறது. ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துப் பகுதி எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் இவ்வியக்கங்களில் பங்கேற்க வேண்டும்” என்று த.மு.எ.க.ச. வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு