Published:Updated:

மலையை முழுங்கும் குத்தகை கதை..! - மாஞ்சோலை VS பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன்

மலையை முழுங்கும் குத்தகை கதை..! - மாஞ்சோலை VS பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன்

மலையை முழுங்கும் குத்தகை கதை..! - மாஞ்சோலை VS பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன்

Published:Updated:

மலையை முழுங்கும் குத்தகை கதை..! - மாஞ்சோலை VS பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன்

மலையை முழுங்கும் குத்தகை கதை..! - மாஞ்சோலை VS பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன்

மலையை முழுங்கும் குத்தகை கதை..! - மாஞ்சோலை VS பாம்பே பர்மா ட்ரேடிங் கார்ப்பரேஷன்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவின் கீழ் இருக்கிற மலைவாசஸ்தலம் மாஞ்சோலை. இந்தப் பகுதி முழுவதும் மரக்காடுகளாலும் தேயிலைக் காடுகளாலும் பரந்து விரிந்து கிடக்கிறது. மாஞ்சோலையை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) என்கிற  தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மாஞ்சோலை மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளை BBTC நிறுவனம் அமைத்துள்ளது. இதன் வரலாறு இரண்டு நூற்றாண்டுக்கு முன் இருந்து தொடங்குகிறது. 

இரண்டு நூற்றாண்டிற்கு முன்பாக திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும் அவரது உறவினரான எட்டுவீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்தார். அப்படி இறந்தவருக்காக, திருவிதாங்கூர் மன்னர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். இனாமாகப் பெறப்பட்ட இந்த நிலத்திற்கு பட்டா கிடையாது. 1918 ஆம் வருடம் சிங்கம்பட்டி ஜமீனின் 32 வது மன்னர், சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.

வழக்கிற்கு அதிகச் செலவானதால், அதைச் சமாளிக்க பரிசாகப் பெற்ற நிலத்தில் சுமார் 8,400 ஏக்கர் காட்டு நிலத்தை 1929ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார். BBTC நிறுவனம் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட நிறுவனமாகும். குத்தகைக்கு நிலத்தை எடுத்த BBTC நிறுவனம் குறிப்பிட்ட வனப்பகுதிகளை செம்மைப்படுத்தி தேயிலை  பயிரிட்டது. இதன் குத்தகை காலம் 2028 வரை அமலில் உள்ளது. அனுமதிக்கப்பட்ட 99 ஆண்டு குத்தகை காலத்தில் BBTC நிறுவனம் மாஞ்சோலை நிலத்தில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறது. நிலத்திற்கான பட்டாவிற்காக நீதிமன்றமும் சென்றிருக்கிறது.

1952 ஆம் வருடம்  குத்தகைக்கு விடப்பட்ட டீ எஸ்டேட் உட்பட அனைத்து சிங்கம்பட்டி ஜமீன் காடுகளை (22000 எக்ட்ர்) ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்தின் மூலம் அரசு தன்வசம் எடுத்தது. ஆனால், பிபிடிசி நிறுவனம் தனது 99 வருடக் குத்தகையைத் தொடரலாம் என அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசு அனுமதித்தது. 1977 ஆம் வருடம் அரசு மேற்கண்ட 22000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி காட்டை காப்புக் காடாக மாற்றத் தமிழ் நாடு வனச்சட்டம் மூலம் அறிவிக்கை செய்தது. ஆனால் பிபிடிசி நிறுவனம் தன்னுடைய குத்தகை நிலத்தைக் காப்புக்காடாக மாற்றக் கூடாது எனவும் தனக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என்றும் பல்வேறு வகையில் கடிதங்கள் மூலமும், நீதிமன்றம் மூலமும் முட்டுக்கட்டை போட்டது. இதனால் இந்த வனப்பகுதியைக் காப்புக்காடாக மாற்ற முடியாமல் வன நிர்ணய அலுவலர், வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டார்கள். (ரயத்வாரி பட்டா : ஜமீன்தார் யாருக்கு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்திருக்கிறாரோ அந்தக் குறிப்பிட்ட நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது  அந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டிருந்தால் அந்த நிலங்களுக்குக் கொடுக்கப்படும் பட்டாவின் பெயர் ரயத்வாரி). இந்தப் பட்டாவை கேட்டுத்தான் வனத்துறைக்கு எதிராக BBTC நிறுவனம் வழக்குத் தொடுத்தது.  

1979 ஆம் வருடத்தில் அப்போதைய வன நிர்ணய அலுவலர், பிபிடிசி இன் மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு விட்டு இதர சிங்கம்பட்டி காடுகளைக் காப்புக்காடாக அறிவிக்க ஆணை வழங்கினார். இதை எதிர்த்து வனத்துறை சி.எம்.ஏ 3/1980 என்ற மேல்முறையீடு வழக்கை  மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்கை  விசாரித்த  நீதிமன்றம் வன நிர்ணய அலுவலர் வழங்கிய ஆணைக்குத் தடை வழங்கியது. வன நிர்ணய அலுவலர் மீண்டும் முறையாக விசாரித்து ஆணை வழங்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பதறிப் போன பிபிடிசி நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றது.1999 ஆம் வருடம் வரை அந்தத் தடை ஆணை நீக்கப்படவில்லை. பின் 1999 ல் உயர் நீதி மன்றம் தடை ஆணையை நீக்கி ஆறு மாதத்திற்குள் வன நிர்ணய அலுவலர் புதிதாக விசாரணை செய்து ஆணை வழங்க உத்தரவிட்டது. ஆனால் 2009 ஆம் வருடம் வரை வன நிர்ணய அலுவலரால் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை. ஏதோ ஒரு வகையில் BBTC நிறுவனம் தன்னுடைய பலத்தால் எல்லா வழிகளையும் அடைத்து வைத்திருந்தது.

இவ்வழக்கு குறித்து வழக்கில் தொடர்புடையவரும் இப்போது ஓய்வு பெற்றிருக்கும் முன்னாள் வன அலுவலர் திரு பத்திரசாமி அவர்களிடம் பேசியதில் “2007 ஆம் வருடம் என்னோடு சேர்த்து அப்போது பணியில் இருந்த வனத்துறை கள இயக்குநர் திரு ராம்குமார், மற்றும் துணை இயக்குநரான திரு து.வெங்கடேஷ், ஆகியோர்களின் சீரிய முயற்சியினால் 2010 ஆம் வருடம் (6.1.2010) வன நிர்ணய அலுவலர் மேற்கண்ட 22000 எக்டர் (பிபிடிசி குத்தகை நிலம் உட்பட) காட்டைக் காப்புக்காடாக மாற்றலாம் என உத்தரவு பிறப்பித்தார். பிபிடிசி நிறுவனம் இந்த உத்தரவுக்குத் தடை ஆணை பெறாமல் இருக்க அப்போதைய துணை இயக்குநர் திரு து.வெங்கடேஷ் அவர்கள் உடனடியாக கேவியட் மனுவை மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். ஆகவே அப்போது பிபிடிசி நிறுவனத்தால் தடை ஆணை ஏதும் பெறமுடியவில்லை. ஆனால், வன நிர்ணய அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிபிடிசி நிறுவனம் 2010 இல் மாவட்ட நீதிமன்றம் , திருநெல்வேலியில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2015 ல் மாவட்ட நீதிமன்றம் பிபிடிசி நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து  உத்தரவு பிறபித்தது. எல்லாம் கைவிட்டுப் போக பிபிடிசி நிறுவனம் மதுரை உயர் நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு செய்தது. 1.9.17 அன்று அந்த வழக்கையும் தற்போது தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி சிங்கம்பட்டி வனப்பகுதியைக் காப்புக்காடாக அறிவிக்க எந்தச் சிக்கலும் இருக்காது. மேற்கண்ட இந்த நிகழ்வு நடைபெற 40 வருடங்கள் ஆகியுள்ளது என்கிறார்.

மாஞ்சோலை நிலம் குத்தகைக்கு விடப்பட்ட ஆண்டான 1929 ஆம் ஆண்டு குறிப்பிட்ட நிலம் காட்டுப்பகுதியாக இருந்திருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் விவசாய நிலமாக இல்லை. BBTC நிறுவனம் குத்தகைக்கு எடுத்த பிறகே காட்டுப் பகுதியை அழித்து தேயிலை பயிரிட்டிருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரயத்துவாரி பட்டா வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. 01/09/2017 அன்று  நீதிமன்ற உத்தரவில்  'குத்தகை  ஒப்பந்த காலம் முடியும்வரை, நிலத்தை நிறுவனம் அனுபவித்துக் கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடையும் வரை மனுதாரருக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. மனுதாரர் தற்போது அனுபவித்துவரும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சாகுபடி செய்யலாம். அதைத் தவிர்த்து, பரப்பளவை விரிவாக்கம் செய்யக் கூடாது. குத்தகை ஒப்பந்த விதிகளை மீறினால், அதை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.


வனத்துறையில் பணிபுரிந்த பெயர் வெளியிட விரும்பாத அலுவலர் ஒருவர் பேசுகையில் “இனாமாகப் பெறப்பட்ட நிலத்திற்குப் பட்டா கிடையாது, குத்தகையாகப் பெறப்பட்ட நிலத்திற்கும் பட்டா கிடையாது, பட்டா இல்லை என்பதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நிறுவனம் இருபது வருடங்களுக்கு முன்பே நில அளவீட்டாளர்களைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு நிலங்களை ஆக்கிரமித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே பணத்தை செலவழித்துப் பல அதிகாரிகளைத் தவறு செய்ய வைத்திருக்கிறார்கள். குடியானவர்களுக்கே இடம் சொந்தம் என்கிற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு நிலத்தைச் சொந்தம் கொண்டாடப் பார்க்கிறது. நிறுவனத்தின் குறிக்கோளை அறிந்த வன அதிகாரிகள் எடுத்த விடா முயற்சியால்தான் ஒட்டு மொத்த நிலமும் தப்பித்திருக்கிறது. இல்லையென்றால் நிறுவனம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி நிலத்தை எப்போதோ சொந்தமாக்கி இருக்கும்" என்கிறார்.

மாஞ்சோலை என்கிற பெயருக்குப் பின்னால் எவ்வளவு பெரிய துயரம் இருக்கிறது என்பதை அதன் அரசியல் அறிந்தவர்கள் நன்கறிவர். மாஞ்சோலை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பட்டியலின மக்களும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும் தொழிலாளர்களாக, முதலாளிகளின் தரகர்களால் இங்கு அழைத்துவரப்பட்டனர். குறைந்த ஊதியம், அதிக வேலை என இருந்த எஸ்டேட்டில் அதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1999 ஆம் ஆண்டு ஊதிய உயர்வு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில்  17 உயிர்கள் வரை பலிகொடுக்கப்பட்டிருக்கின்றன. 2028 ஆம் ஆண்டோடு குத்தகை காலம் முடிய இருக்கிற நேரத்தில் மேலும் குத்தகை காலத்தை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள். மாஞ்சோலை பகுதி முழுக்க முழுக்க களக்காடு மற்றும்  முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியின் மையப்பகுதியில் இருக்கிறது.  இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வன விலங்குகள் சாலையைக் கடக்கிற நேரம் என்பதால் மாஞ்சோலைக்குச் செல்கிற பாதை மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை அடைக்கப்பட்டிருக்கும். குத்தகையாகப் பெறப்பட்ட நிலத்தில் மாற்றங்கள் செய்யக் கூடாது என்கிற விதியிருந்தும் நிறுவனம் வனப்பகுதிகளை அழித்துப் பணப்பயிர்களை விளைவித்துக் கொண்டிருக்கிறது. 

சிங்கம்பட்டி ஜமீன்தார் காடுகளை கூகுள் மேப் உதவியுடன் பார்க்கும் போது பரப்பளவில் மிகப் பெரிய மலை சாம்ராஜ்யமாக காட்சியளிக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தை எதிர்த்து தமிழக வனத்துறை இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி இருப்பதே இப்போதுதான் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.