
அச்சுறுத்தும் தொழிற்சாலை கழிவுகள்! - கொதித்தெழுந்த பள்ளி மாணவர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, மதுராபுரி கிராமம். இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் தனியார் பால் நிறுவனத்துக்கு எதிராக, பள்ளி வளாகத்தில் மாணவ - மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதை அறிந்த அப்பகுதி மக்கள், மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வகுப்பைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்த என்ன காரணம் என அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, 'சம்பந்தப்பட்ட தனியார் பால் நிறுவனம், தனது தொழிற்சாலை பால் கழிவுகளைச் சுத்திகரிக்காமல், நேரடியாக அருகில் உள்ள வரட்டாற்றில் கலந்துவிடுகிறார்கள்.

இதுதொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் அருகில் அந்தக் கழிவுகள் செல்வதால், மாணவர்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேட்டால் பாதிக்கப்படுகிறார்கள். சிலருக்கு வாந்தி மயக்கம்கூட ஏற்படுகிறது. கொசுக்கள் அதிகமாகப் பரவுகிறது. பெயர்தெரியாத விஷப் பூச்சிகள் வகுப்பறைக்குள் வந்து, குழந்தைகளைக் கடித்துவிடுகின்றன. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட தனியார் பால் நிறுவனத்தின்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருந்தபோதும், உடனடி நடவடிக்கை தேவை என்று பள்ளி வளாகத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள் மாணவர்கள்.