Published:Updated:

தீவிரமடைந்தது மாணவர்கள் போராட்டம்! - திக்குமுக்காடிய காவல்துறை!

தீவிரமடைந்தது மாணவர்கள் போராட்டம்! - திக்குமுக்காடிய காவல்துறை!
தீவிரமடைந்தது மாணவர்கள் போராட்டம்! - திக்குமுக்காடிய காவல்துறை!

போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக் கட்டண உயர்வு, தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில், அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று (23.1.2018) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைவிட அதிக மாணவர்கள் திரண்டு, கட்டண உயர்வுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் கூட்டம், அதிகரிக்க அதிகரிக்க என்னசெய்வதென்று தெரியாமல் காவல்துறை விழிபிதுங்கி நின்றது. ஒருகட்டத்தில், மாணவர்கள் சாலைக்கு வரவே காவல்துறை தங்களது வழக்கமான அஸ்திரத்தை கையில் எடுத்தனர். தடியடி நடத்தாவிடினும் வெறும் கைகளாலும், வாக்கி டாக்கியைக் கொண்டும் மாணவர்களை அடித்து வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி, கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து விடக்கூடாது என்பதற்காக, அரசுக் கலைக்கல்லூரி வளாகம் முன்பு அதிகளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம், மாணவர்கள் பயப்பட மாட்டோம். ஜாக்டோ - ஜியோவினர் போராட்டத்தின்போது, அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக நாங்களும் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால், தற்போது எங்களின் போராட்டத்துக்கு அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெறும்வரை, எங்களது போராட்டம் தொடரும். நாளைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.