Published:Updated:

கேரளாவில் ஸ்டிரைக்! - கோவையில் 18 சாலை மார்க்கங்கள் வெறிச்சோடின

கேரளாவில் ஸ்டிரைக்! - கோவையில் 18 சாலை மார்க்கங்கள் வெறிச்சோடின
கேரளாவில் ஸ்டிரைக்! - கோவையில் 18 சாலை மார்க்கங்கள் வெறிச்சோடின

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டுவருகிறது.

பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி மாற்றியமைக்கும் முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 75.12 ரூபாய்க்கும் டீசல் விலை 66.84-ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயைத் தொட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு 75 ரூபாயைத் தாண்டிவிட்டது.

இந்நிலையில், கேரளாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் ஆட்டோ, டாக்சிகள், தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் ஓடவில்லை. கேரளா செல்லும் தமிழகப் பேருந்துகள் கேரள எல்லையருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக, ஒரு லாரிகூட கோவை வழியாகக் கேரளா எல்லைக்குள் செல்லவில்லை.

அதேபோல, கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் 18 சாலை மார்க்கங்களிலும் வாகனம் செல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேவேளையில், பேருந்துகள் இயங்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.