Published:Updated:

தூத்துக்குடி ஆட்சியரை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகள்!

இ.கார்த்திகேயன்
தூத்துக்குடி ஆட்சியரை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகள்!
தூத்துக்குடி ஆட்சியரை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகள்!

பயிர்காப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து, தூத்துக்குடியில் விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு அமர்ந்து நேற்று (24.1.2018)  தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த 2016-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டுத் தொகையை, பொங்கலுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கடந்த மாதக் கூட்டத்திலேயே ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது வரையில் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படவில்லை. இந்நிலையில், மக்காச்சோளத்துக்கு அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்நிலையில், இம்மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்திலேயே காரணம் இல்லாமல் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதை தாமதப்படுத்துவதைக் கண்டித்து ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் அமளியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசினோம். ``விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய கடந்த 2016-17 ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை பொங்கலுக்குள் வரவு வைக்கப்படும் என கடந்த மாதம் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் உறுதி அளித்தார். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. காப்பீட்டுத் தொகையை வழங்கிட இன்னனும் கூடுதலாக ஒருமாதம் இன்ஷூரன்ஸ் கம்பெனியினர் கால அவகாசம் கேட்கின்றனர்.  இத்தனை மாதம் என்ன செய்தார்கள் அவர்கள். 

இந்த நிலையில், 2016-17-ம் ஆண்டுக்கான  மக்காச்சோளத்துக்கான பயிர்க்காப்பீடுத் தொகை ரூ.59 கோடியே 78 லட்சத்து 80 ஆயிரத்து 71-ஐ திடீரென நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. முறைகேடான முறையில் ஒரே நிலத்துக்கு பல பெயர்களில் காப்பீடு பணம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக இன்ஷூரன்ஸ் கம்பெனி தரப்பு சொல்கிறது. இதற்கு பெயர்களைப் பரிந்துரை செய்வதே கிராம நிர்வாக அலுவலர்தான். ஒரே நிலத்துக்கு மூன்று பெயர்களை எப்படி பரிந்துரை செய்ய முடியும். மக்காச்சோளப் பயிரில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முறைகேடு நடந்துள்ளது.  இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தொடர்ந்து விவசாயிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால் கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது. கூட்டத்தை முடித்துவிட்டு ஆட்சியர் வெங்கடேஷ் அவசரமாக வெளியேறினார். ஆட்சியர் வெளியேறியதும், ``விவசாயிகளுக்குப் பொறுப்பான பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்ற ஆட்சியர் ஒழிக. செயல்படாத மாவட்ட நிர்வாகம் ஒழிக" என கோஷம் எழுப்பிவாறே, ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைதுசெய்தனர்.