Published:Updated:

`160 தீப்பெட்டிக்கு கூலி 5 ரூபாய்' - தொழிலாளர்களின் 7 ஆண்டு குமுறல்

இ.கார்த்திகேயன்
`160 தீப்பெட்டிக்கு கூலி 5 ரூபாய்' - தொழிலாளர்களின் 7 ஆண்டு குமுறல்
`160 தீப்பெட்டிக்கு கூலி 5 ரூபாய்' - தொழிலாளர்களின் 7 ஆண்டு குமுறல்

ஊதியம் உயர்த்தப்படாததைக் கண்டித்து, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டித் தொழிலாளர்கள் ஆர்.டி.ஓ, அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தீப்பெட்டி உற்பத்தியில், 90 சதவிகிதம் கோவில்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து உற்பத்தியாகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீப்பட்டி தொழில்களில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்கள். பெரும்பாலும் எந்திரமயமாகிவிட்ட தீப்பெட்டித் தொழிலில், தீக்குச்சிகளைப் பெட்டிகளில் அடைக்கும் வேலை மட்டுமே, கையால் செய்து வருகின்றனர்.

தீக்குச்சிகளைப் பெட்டிகளில் அடைக்க, 160 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு வில்லைக்கு, கூலியாக, 5 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாகத் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு, இந்தக் கூலி உயர்த்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜி.எஸ்.டி போன்ற காரணங்களால், 8 முறை உற்பத்தியாளர்கள் விலையை ஏற்றியுள்ளனர். தற்போது பேருந்துக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் இந்தத் தொழிலார்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் நீண்ட நாள்களாகத் தங்களின் ஊதியம் உயர்த்தப்படாததைக் கண்டித்து, தீப்பட்டித் தொழிலாளர்கள், ஏ.ஐ.சி.யூ.டி, பொது தொழிலார்கள் சங்கத்துடன் இணைந்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகங்களை, 200-க்கும் அதிமான தீப்பெட்டித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 7 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஊதியத்தை உயர்த்த கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆர்.டி.ஓ, அலுவலகத் தொழிலாளர் ஆய்வாளரிடம் வழங்கினர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், திங்கள்கிழமை முதல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.