Published:Updated:

`எங்களை சுலபமா ஏமாத்திடலாம்னு நினைச்சீங்களா?' - ஓ.என்.ஜி.சி கருத்து கேட்புக் கூட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்

இ.கார்த்திகேயன்
`எங்களை சுலபமா ஏமாத்திடலாம்னு நினைச்சீங்களா?' - ஓ.என்.ஜி.சி கருத்து கேட்புக் கூட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்
`எங்களை சுலபமா ஏமாத்திடலாம்னு நினைச்சீங்களா?' - ஓ.என்.ஜி.சி கருத்து கேட்புக் கூட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்

ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே குழாய்மூலம் இயற்கை எரிவாயு எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு,  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வரியத்தின் சார்பில், கருத்து கேட்கும் கூட்டம் குளத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்திலேயே விவசாயிகளும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால், 15 நிமிடத்தில் கூட்டம் முடிக்கப்பட்டது. 

ராமநாதபுரம் ஓ.என்.ஜி.சி  சேமிப்பு நிலையத்தில் மீள் ஆவியாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைக் குழாய்மூலம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள 50 கிராமங்கள்  வழியாக தூத்துக்குடியில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு  வழங்கத் திட்டமிட்டுள்ளது.  இத்திட்டத்துக்கான  பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இதில், துாத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரக்‌ஷன் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், பொது மக்கள், பல்வேறு கட்சியினர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய உடனேயே, 'இத்திட்டம் எங்களுக்குத் தேவை இல்லை' எனக் கூறி கூச்சலிட்டனர். போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும்,  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால், கூட்டம் ரத்துசெய்யப்படுவதாக அதிகாரிகளால் அறிவிக்கபட்டது.

இத்திட்டத்துக்கான எதிர்ப்புகுறித்து விவசாயிகளிடம் பேசினோம். ' ராமநாதபுரமும் தூத்துக்குடியும் மானாவாரி விவசாயம் நிறைந்த பகுதிகள். அதனால, இங்கு உள்ள விவசாயிகளை சுலபமா ஏமாத்திடலாம்னு நினைச்சுட்டாங்க. ராமநாதபுரம் ஓ.என்.ஜி.சி எரிவாயு சேமிப்பு நிலையத்திலிருந்து  வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 'வாடிக்கையாளர்களுக்காக' எனச் சொல்லி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட  நச்சுப் புகை வெளியிடும் பெரிய ஆலைகளுக்கு அனுப்புவதற்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப் பட  உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு எனச் சொன்னால், தூத்துக்குடி வரை செயல்படுத்த உள்ளதாக உள்ள இத்திட்டத்தை  கன்னியாகுமரி வரை ஏன் செயல்படுத்தவில்லை? கன்னியாகுமரியில் பெரிய ஆலைகள் எதுவும் இல்லை. குழாய்மூலம் இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்வதால்,  நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  ஏற்கெனவே விவசாயம், மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டம் நிறைவேறினால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், தொடர்ந்து பெரிய அளவிலான போராட்டங்களை நடத்துவோம்' என்றனர். கூட்டம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அனைவரின் எதிர்ப்பால் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.