Published:Updated:

`அரசு கண்டுக்கல' - ஆளுநரின் கவனத்தை ஈர்க்கவே சிதம்பரத்தில் கடையடைப்பு!

ஜெ.முருகன்
`அரசு கண்டுக்கல' - ஆளுநரின் கவனத்தை ஈர்க்கவே சிதம்பரத்தில் கடையடைப்பு!
`அரசு கண்டுக்கல' - ஆளுநரின் கவனத்தை ஈர்க்கவே சிதம்பரத்தில் கடையடைப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் வருகையையொட்டி, இன்று சிதம்பரத்தில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்  81 - வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிதம்பரத்துக்கு வருகை தந்திருக்கிறார். இந்நிலையில், சிதம்பரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளில் முறைகேடு மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்திய சிதம்பரம் வர்த்தக சங்கம், இந்தப் பிரச்னைகளை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில், இன்று காலை 6 மணி முதல் நாளை 18-ம் தேதி காலை 6 மணி வரை கடையடைப்பு செய்யப்போவதாக அறிவித்திருந்தது.

வர்த்தக சங்கத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, சிதம்பரம் ஆர்.டி.ஓ ராஜேந்திரன் வர்த்தக சங்க நிர்வாகிகளை நேற்று சமாதானக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த வர்த்தக சங்கம், அறிவித்தபடி இன்று முழுக் கடையடைப்புப் போராட்டத்தை நடத்திவருகிறது.