Published:Updated:

`அடிப்படை வசதி கேட்டா, டாஸ்மாக் கடை வைப்பதா?' - கலெக்டரைத் திணறடித்த கிராமப் பெண்கள்

எம்.திலீபன்
`அடிப்படை வசதி கேட்டா, டாஸ்மாக் கடை வைப்பதா?' - கலெக்டரைத் திணறடித்த கிராமப் பெண்கள்
`அடிப்படை வசதி கேட்டா, டாஸ்மாக் கடை வைப்பதா?' - கலெக்டரைத் திணறடித்த கிராமப் பெண்கள்

கிராம மக்கள் கேட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்காத தமிழக அரசு, டாஸ்மாக் கடையை மட்டும் கேட்காமலேயே திறக்கிறதே? டாஸ்மாக் கடையை அகற்றுவதற்காக, ஒரு கிராமமே கலெக்டரிடம் மனு கொடுத்து வாக்குவாதம் செய்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் துளார் அருகேயுள்ளது,  பூமுடையான்பட்டி கிராமம். இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, சில நாள்களுக்கு முன் மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து,  ஆட்சியர் லெட்சுமி பிரியாவிடம் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரி மனு அளித்தனர். அதில், தங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள சிறுகளத்தூர், மாத்தூர் ஆகிய 4 கி.மீட்டர் சுற்றளவில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடையை செந்துறை ஒன்றியத்தில் திறக்க என்ன காரணம் என்ன? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். ''எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது நாங்கள் கேட்காமலேயே டாஸ்மாக் கடையை தமிழக அரசு திறந்துள்ளது. எனவே,  எங்கள் கிராமத்துக்கு டாஸ்மாக் கடைவேண்டாம்' எனக் கூறினர். மேலும், 'கடையை அகற்றவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என எச்சரித்தனர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் கலெக்டர் திணறியுள்ளார். பின்னர் கலெக்டர், டாஸ்மாக் கடை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய பெண்கள், 'மக்களுக்காகத்தானே இந்த அரசாங்கம். மக்களே இந்த டாஸ்மாக் கடை வேண்டாம் என்று சொல்லும்போது, எதற்காக இந்தக் கடையை அகற்றாமல் வைத்திருக்கிறது. அப்போ, பொம்பளைங்க நிம்மதியில்லாம செத்தாலும் பரவாயில்ல. அதிலிருந்து வரும் காசு முக்கியமா? சொல்லுங்க. இந்த டாஸ்மாக் கடையால் தினம் தினம் வீட்டில் பல பிரச்னைகளைச் சந்தித்துவருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் அதிகாரிகளுக்கு துணைபோகாதீர்கள். இங்கிருந்து உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இல்லைனா இந்தக் கடையை எப்படி காலிபண்ணணும்னு எங்களுக்குத் தெரியும்' என்று எச்சரித்தனர்.