
கார்த்திக் சிதம்பரம் கைது..! காங்கிரஸார் ஆர்பாட்டம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து காரைக்குடி எம்.எல்.ஏ ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் போன்றவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ ராமசாமி, 'இந்திய நாட்டின் வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு செல்லுவதற்காக ப.சிதம்பரம் தொடர்ந்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதிவருகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத மோடி அரசு குறுக்கு வழியில் அரசியல் லாபம் தேடுவதற்காக இது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
இதற்கு காரணம், வங்கிகளின் பணம் 15 ஆயிரம் கோடி அளவிற்கு பணம் தனியாரிடம் கைமாறியிருக்கிறது. 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசு வங்கி, தனியார் வங்கிகள் பணம் தனி நபரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எப்படி மோடி மீட்கப்போகிறார்.
கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு சென்று திரும்பியதும் மத்திய அரசின் அனைத்து விதமான அனுமதியை பெற்ற பிறகு கைது செய்திருக்கிறார்கள். ப.சிதம்பரம் கேட்கும் கேள்விக்கு மத்திய அரசால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தியாவில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு, மாணவர்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்னைகள் என இந்த அரசாங்கம் மெத்தனமாகவே இருக்கிறது. உச்ச நீதிமன்றம் காவேரி நடுவர்மன்ற ஆணையத்தை ஆறுவார காலத்திற்குள் அமைக்க உத்திரவிட்டிருக்கிறது. ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் காவேரி ஆணையத்தை அமைக்க முடியாது என்கிறார். இதையெல்லாம் மோடி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது' என்றார்.