Published:Updated:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் மாபெரும் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் மாபெரும் போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் மாபெரும் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் மாபெரும் போராட்டம்!

நெடுவாசல் முதல் காவிரி வரை துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றுவருகிறது.

``கடைமடை வரைக்கும் காவிரி நீர்ப் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை' என்ற முழக்கத்தை முன் வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி தபால் நிலையம், திருச்சி ஒத்தக்கடை சிக்னல் ஆகிய இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நின்றனர். இதனையறிந்த திருச்சி போலீஸார், தபால் நிலையத்தில் போலீஸாரைக் குவித்துள்ளது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சரவணன், பாடகர் கோவன், அவரது குழுவினர் லதா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் தலைமையிலான போராட்டக்காரர்கள், ``குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே. நர்மதா, கோதாவரி, கிருஷ்ணாவுக்குத் தீர்ப்பு வந்தவுடன் ஆணையம்,11 ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு, சமத்துவம் இல்லாத தேசிய ஒருமைப்பாடு எதற்கு? உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படியும், இறுதித் தீர்ப்பு’ இதுதான் என உச்சநீதிமன்றம் கூறியும்கூட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதைக் கண்டிக்கிறோம். நாட்டுக்கே சோறுபோட்ட உழவர்கள் அகதிகள் ஆவர். தமிழகம், குடிநீரின்றி நா வறண்டு தவிக்கும்” என்கிற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியபடி மக்கள் அதிகாரம் தொண்டர்கள் முழங்கி வருகின்றனர்.

மேலும், ``காவிரி ஆற்றில் தமிழக உரிமையை மறுப்பதிலும் நீரைத் தடுப்பதிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைக்காட்டிலும் கூடுதலான வெறியுடன் செயல்படுகிறது மத்திய அரசு. மத்திய அமைச்சர் கட்கரி, நீர்வளத்துறை செயலர் உ.பி.சிங் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, தமிழக தலைவர்களைச் சந்திக்கவே மறுக்கிறார். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் உச்சநீதிமன்றம் கடுகளவுகூட கண்டிக்கவில்லை.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்த ஓ.என்.ஜி.சி செயல்பட்டு வருகிறது. தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப்போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டை ஒரு பகை நாடு போலவே மத்திய அரசு நடத்துகிறது. ஒரு புறம் உரிமைகளைப் பறிப்பது, மறுபுறம் வளங்களைச் சுரண்டுவது என்பதே இவர்களின் கொள்கை. தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசோ எட்டப்பனைக் காட்டிலும் கீழாகத் தமிழக நலன்களை அடகு வைத்துவிட்டுக் கொள்ளையடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகிறது. 12 மாவட்டங்களின் விவசாயம் 20 மாவட்டங்களின் குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 192 டிஎம்சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசில் தமிழக எம்.பி- க்களுக்கு வேலை இல்லை. எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும்” என முழங்கி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு