Published:Updated:

`தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது'... ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

`தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது'... ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

`தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது'... ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

`தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது'... ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

`தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது'... ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

Published:Updated:
`தூத்துக்குடியில் ஒருநாள்கூட இருக்க முடியாது'... ஸ்டெர்லைட் தீமைகள் சொல்லும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே சர்ச்சைகளும், போராட்டங்களுமாக இருந்து வருகிறது. ஆலையை மூடக்கோரும் உயர்நீதிமன்ற தீர்ப்பும், மாசுக்கட்டுபாடு வாரியத்தின் நற்சான்று நாடகமும் நடந்தேறியிருக்கிறது. 'பல மாநிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு பின்னர் தமிழகம் வந்து 23 ஆண்டுகளாக தூத்துக்குடியை மாசுபடுத்தி வருகிறது' என ஸ்டெர்லைட் ஆலையின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த ஆலையால் பல ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சான்று கொடுக்கின்றனர் தற்போது போராடி வரும் மக்கள். ஸ்டெர்லைட் ஆலையில் அடிக்கடி நிகழ்ந்த விபத்துகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. 1997 செப்டம்பர் 30-ம் தேதி உலை ஒன்று வெடித்து ஏற்பட்ட விபத்துக்கு விடுதலைப் புலிகளின் சதி காரணமென அந்த ஆலை நிர்வாகம் கூறிய அவலமும் நடந்திருக்கிறது. தாமிர உருக்கு ஆலை மூலம் கிடைக்கும் பை- பிராடக்ட்களான தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் ஆகியவை வரி கட்டாமல் கடத்திச் சென்ற நிகழ்வுகளும் ஏராளம்... கடல் வளம், நீர் வளம், நில வளம் என எல்லாவற்றையும் நாசப்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜனிடம் பேசினோம்.  

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேலான பொதுமக்கள் கூடியதாகத் தெரிகிறது. இது இன்றோ நேற்றோ நடக்கும் போராட்டமில்லை. இந்த ஆலை தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே மக்கள் பெரும் அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 23 வருடங்களாக அவர்கள் அனுபவித்து வந்த வேதனை. நிலம், நீர், காற்று மாசுபட்டு ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதன் விளைவே இன்று இந்த மாபெரும் போராட்டம் நடக்கக் காரணம். 25 நாள்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் நிறுவனம் அதனுடைய விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி வாங்கி, அந்த வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அதனால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மாபெரும் போராட்டமாய் வெளிவந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை முதன்முதலில் மகாராஷ்டிரா மாநிலத்துக்குதான் சென்றது. அங்கே ஆலை கட்டிமுடிக்கப்பட்ட பின்னர், அங்கிருக்கும் உலக பிரசித்திபெற்ற அல்போன்சா மாம்பழம் பாதிக்கப்படும் என்று தெரியவந்ததும் அங்குள்ள விவசாயிகள் கோடாரியைக் கொண்டு அந்த ஆலையை இடித்தனர். இதனால் பெரும் போராட்டம் அங்கே எழுந்தது. அதன் பின்னரே அந்த ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்துக்கு வந்தது.

நாளொன்றுக்கு 1200 டன் உற்பத்தி செய்யக்கூடிய புதிய ஆலையை நிறுவ உள்ளார்கள். இது மிகப்பெரும் அழிவுக்கு வழிவகுக்கும். ஏற்கெனவே தூத்துக்குடியை ‘வாழும் போபால்’ என்று கூறலாம். போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். தூத்துக்குடியை ‘போபாலின் ஸ்லோ-மோஷன்’ எனலாம். விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விக்குறியாகி வருகிறது. சர்வதேச ஆய்வுகள் ஏற்கெனவே தூத்துக்குடி வாழ்வதற்கு தகுதியற்ற நகரம் என்று சொன்னபோதிலும் இந்த ஆலை மூடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு குறைந்தபட்சம் முதல்படியாக விரிவாக்கப் பணிகளை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர், ஏற்கெனவே உள்ள ஸ்டெர்லைட் ஆலையையும் மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு முன்பே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதினால் ஸ்டெர்லைட் ஆலைக்கு நூறு கோடி ரூபாய் வரை அபராதங்கள் விதிக்கப்பட்டன.

இப்படி தூத்துக்குடி அதிக மாசுக்கு ஆளானது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையிலும் இந்த விரிவாக்கப் பணிகளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது முதல் கேள்வி. பொதுவாக இதுபோன்ற திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் தீமையை பல்வேறு இயக்கங்கள் சுட்டிக்காட்டி வந்தாலும், நடவடிக்கை எடுக்காத அரசின் மெத்தனப் போக்கு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும், ஆளும் அரசுக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறது. தமிழக மண்ணையும், தமிழக கடலையும் பாதிக்கக்கூடிய இந்த ஆலையை கண்டும் காணாமல் சென்ற அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இன்றைக்கும் மத்திய, மாநில அரசுகள் மக்கள் ஒன்றுசேராமல் இருக்க அவர்களை சாதிரீதியாகவும், மதரீதியாகவும், தொழில்ரீதியாகவும் பிரிக்க திட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதுநாள் வரை சிறிய அளவிலான மக்கள் கூட்டம்தான் போராடி வந்தது. ஆனால், தற்போது பெரிய அளவில் போராட்டம் செல்வதை உணர்ந்தாவது அரசு தன்னை திருத்திக்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் தூத்துக்குடி சென்றிருக்கிறேன். என்னால் ஒரு நாள் கூட அங்கு இருக்க முடியாது. கண் எரிச்சல் எடுக்க ஆரம்பித்து விடும். இருமல் தொற்றிக்கொள்ளும். இதை பல வருடங்களாக தங்கள் தினசரி வாழ்வில் அனுபவித்து வரும் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிட்ட வேண்டும். இந்த ஸ்டெர்லைட் ஆலை ஒரு போதும் மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது. கடல் வளம், நீர் வளம் ஆகியவை பாதிக்கப்பட்டுகொண்டே தான் இருக்கும். நிச்சயமாக தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கு 'பூவுலகின் நண்பர்'களின் ஆதரவு இருக்கும். அவர்களின் போராட்டத்தில் கண்டிப்பாக நாங்கள் பங்கெடுத்துக் கொள்வோம்.” என்றார்.