Published:Updated:

ஹெச்.ராஜா முதல் காவிரி ஆணையம் வரை... எதற்கு இந்த மௌனம் மோடி? #WeWantCMB

ஹெச்.ராஜா முதல் காவிரி ஆணையம் வரை... எதற்கு இந்த மௌனம் மோடி? #WeWantCMB
ஹெச்.ராஜா முதல் காவிரி ஆணையம் வரை... எதற்கு இந்த மௌனம் மோடி? #WeWantCMB

ஹெச்.ராஜா முதல் காவிரி ஆணையம் வரை... எதற்கு இந்த மௌனம் மோடி? #WeWantCMB

காவிரிப் பிரச்னையில், தமிழகத்தின் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்குத் தீர்வு காணவேண்டிய பி.ஜே.பி., நிர்வாகிகளின் பேச்சுகளோ, எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றுவது போல இருக்கிறது. தமிழகத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளதால், தமிழகம் முழுவதுமே போராட்டக் களமாக மாறியிருக்கிறது. ஒரு மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கும் இத்தனை களேபரத்திலும் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்துவருகிறார். 

உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 2016-ம்  ஆண்டு சம்மதம் தெரிவித்தது. ஆனால், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று அந்தர் பல்டி அடித்தது. இது, பி.ஜே.பி-யின் அரசியல் துரோகம், கர்நாடகத் தேர்தல் கணக்கு என்று தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டின. அதற்கு ஏற்றார்ப்போலவே, டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் மட்டுமல்ல, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சும் இருந்தது. 'உச்ச நீதிமன்றம் கெடு விதித்த 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லை' என்று சொன்னார். அவர் சொன்னது போலவே, மார்ச் 29-ம் தேதி அதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரு துரும்பைக் கூட இதுவரை மத்திய பி.ஜே.பி அரசு கிள்ளிப் போடவில்லை. 

அதோடு நில்லாமல், 'கர்நாடகாவில் பி.ஜே.பி ஜெயித்தால்தான் தமிழகத்திற்கு காவிரித் தண்ணீர் கிடைக்கும்' என்று அரசியல் விஞ்ஞான விளக்கம் கொடுத்தார், அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இவர்தான், தமிழகத்தில் அனைத்துக்கட்சிகள், அமைப்புகள் மத்திய அரசுமீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு,  கலந்துகட்டி விளக்கம் கொடுத்து, பிரச்னையின் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில்,' ஹெச்.ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை' என்று தேசியத் தலைவர் அமித்ஷா சொன்னார். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால், தமிழக பி.ஜே.பி தலைவர்களைப் பற்றியோ தமிழகத்தில் சொந்தக் கட்சியின் கள நிலவரம் பற்றியோ எவ்வித கவலையும் இல்லாமல் கொதிக்கும் கருத்துகளைச் சொல்லி, தமிழக பி.ஜே.பி தலைமைக்கே குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கெடு முடிந்துவிட்ட நிலையில், நேற்று தி.மு.க  செயற்குழுக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், தி.மு.க சார்பில் ஏப்ரல் 1-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது என்று முடிவுசெய்யப்பட்டது. தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், ''தமிழகத்தில் எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டும்'' என்று அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 1-ம் தேதி நடக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அதேநேரத்தில், வரும் 15-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

மேலும், ''தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அ.தி.மு.க எம்.பி-க்கள் 50 பேரும் ராஜினாமா செய்தால், எங்களுடைய 4 ராஜ்யசபா எம்.பி-க்களும் அடுத்த நிமிடமே ராஜினாமா செய்வார்கள். அதுபோல, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால், எங்களுடைய 89 எம்.எல்.ஏ-க்களும் உடனே ராஜினாமா செய்வார்கள். ஆனால், அந்தத் துணிச்சல் ஆளும்கட்சிக்கு இல்லை. மோடியை டெல்லி சென்று பார்க்கும் திட்டம் இல்லை. சென்னைக்கு வரும் அவருக்கு கறுப்புக்கொடியுடன் வரவேற்பு கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார். தி.மு.க நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இப்படி தி.மு.க அறிவித்துள்ள நிலையில், ஆளூம் அ.தி.மு.க-வும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதில், கட்சியினரும் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைப்புவிடுத்துள்ளனர். அ.தி.மு.க., எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் சிலர், தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நவநீதகிருஷ்ணன்  எம்.பி., தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையில், நேற்று சென்னையில், பா.ம.க சார்பில் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், 'காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு' உருவாக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அன்புமணி, ''வரும் 11-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும்'' என்று அறிவித்துள்ளார். 

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ''காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் என்று தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவருகிறது. தமிழகத்தின்மீது அக்கறை இல்லாத அவர்களுக்கு நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும். எனவே,  எதிர்ப்பு வெளிப்படுத்த மத்திய அரசு வரி வசூலிக்கும் டோல்கேட்டுகளில் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து சுங்கவரி கொடுக்க மாட்டோம். அதற்கான போராட்டத்தை நடத்துவோம்'' என்று அறிவித்துள்ளார். ''மத்திய அரசுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து, பெரும் போராட்டத்திற்கு தமிழக அரசு திட்டமிட வேண்டும். இதுகுறித்து விவாதிக்க, அவசரமாக அனைத்துக்கட்சி, அனைத்து விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டத்தை நடத்திட, தமிழக அரசு முன்வர வேண்டுமென்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், மதுரையிலிருந்து தேனி நோக்கி வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணத்தை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்துள்ளார்.

இப்படிப் பல்வேறு பிரச்னைகளில் ஒவ்வொரு அமைப்பும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்துள்ளது. ஆனால், இதற்கு பதில் சொல்லவேண்டிய பி.ஜே.பி அரசு, மௌனமாக இருக்கிறது. தமிழத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகுறித்து இதுவரை மோடியும் வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத்தை தமிழக எம்.பி-க்கள் 10 நாள்களுக்கு மேல் முடக்கியும், நாடாளுமன்ற வளாகத்தில் கையில் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்ற பதாகைகளுடன் கோஷமிட்டும் போராட்டம் நடத்திவிட்டனர். தமிழகத்தில் பல்வேறு முனைகளிலிருந்து மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் கண்டனக் கணைகள் வீசப்பட்டும், தமிழகமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் மத்திய அரசு மௌனமாகவே இருக்கிறது. 

மத்திய அரசே... எத்தனை நாள்களுக்கு இந்த மௌனம்?

அடுத்த கட்டுரைக்கு