நெய்வேலி போராட்டத்துக்கு ரஜினி காட்டிய எதிர்ப்புக்கு தி.மு.க.வைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. ``தமிழ்த் திரையுலகம் திரண்டு போராட்டம் நடத்தப்போகும் நேரத்தில், ரஜினி தனியாகப் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. நெய்வேலி, தமிழகத்தில்தான் இருக்கிறது. கர்நாடகத்தில் இல்லை. நெய்வேலியில் பாதுகாப்பு இருக்காது என ரஜினி சொல்வதை ஏற்க முடியாது.'' என்றார் திருமாவளவன்.
``கர்நாடகாவில் உள்ள 40 லட்சம் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என ரஜினி கூறுகிறார். அப்படி நடந்தால் தமிழர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.'' என பதிலடி கொடுத்தார் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த். நெய்வேலி போராட்டம் நடந்த 12-ம் தேதிதான் ரஜினியும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். விஜயகாந்த் கேட்டுக்கொண்டதால் அடுத்த நாளுக்கு உண்ணாவிரத தேதியை ரஜினி மாற்றினார்.
``நெய்வேலி மின் நிலையம் தமிழகத்தின் சொத்து அல்ல, அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது'' எனக் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா சொல்ல... நெய்வேலி இன்னும் பதற்றமானது.
12-ம் தேதி காலை ஏக எதிர்பார்ப்போடு விடிந்தது. நெய்வேலியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜார்ஜ் தலைமையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்களில் துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் சென்னையிலிருந்து நெய்வேலியை நோக்கிப் புறப்பட்டார்கள். இந்த சொகுசு பஸ்களுக்கான செலவை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
நெய்வேலி போராட்டத்தை ஜெயா டி.வி நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. சன் டிவி-யும் தனது ஓ.பி வேனை நெய்வேலியில் நிறுத்தியபோது அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒருவழியாகப் போராடித்தான் சன் டிவி நேரடி ஒளிபரப்பை செய்தது. ``நாங்கள் எந்த விளம்பரத்தையும் பெறாமல் நெய்வேலி போராட்டத்தை ஒளிபரப்புகிறோம்'' எனச் சொன்னது சன் டிவி. ஆனால், ஜெயா டிவி இடைஇடையே விளம்பரங்களை ஒளிபரப்பியது.
நெய்வேலியில் நடிகர்கள் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக நெய்வேலி மின் நிலையம் வந்தார்கள். அங்கே கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பாரதிராஜா தலைமையில் ஒரு குழு, என்.எல்.சி. தலைவர் ஜெயராமனைச் சந்தித்து மனு அளித்தது.
கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் உரையாற்றினார்கள். ``இது ஜனநாயக நாடு என்ற நம்பிக்கை தகர்ந்துகொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நம்பியிருக்கும் குடிமக்கள் நாங்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா. காவிரி இந்தியாவின் சொத்து. காவிரியில் தண்ணீர் தர முடியாது எனச் சொல்வது தேசிய ஒருமைப்பாட்டையே தகர்ப்பதற்கு சமம். காவிரிக்குப் புதிய எல்லைக் கோடுகளைப் போடாதீர்கள்.'' என்றார் கமல்.
நெய்வேலி போராட்டத்தில் பாரதிராஜாவின் பேச்சுதான் ஹைலைட்.. `தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார் ரஜினி. எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றால் அது நடக்காது. நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே எனது நண்பர்கள், `உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடாதீர்கள்' என்றார்கள். உணர்ச்சிவசப்பட்டால் தவறா? உணர்ச்சிவசப்படுகிறவன்தான் மனிதன். அவன்தான் தமிழன். எல்லா விஷயத்துக்கும் பயந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக முகவரி இழந்து நிற்கிறான் தமிழன். நெய்வேலி போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் என்றார்கள். எந்த அசம்பாவிதமும் இங்கே நடக்கவில்லை. ரத்த ஆறு ஓடவில்லை. தனது எதிர்ப்பை அமைதியாக வெளிக்காட்டியிருக்கிறான் தமிழன்.
எங்களுக்குத் தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்துக்கு எங்கள் மண்ணில் எங்கள் உழைப்பில் உருவாகும் மின்சாரத்தைக் கொடுக்கக் கூடாது எனச் சொல்லக் கூடாதா? நெய்வேலியை முற்றுகையிட்டால் தண்ணீர் வந்துவிடுமா என்கிறார்கள். தனியாக உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தண்ணீர் வந்துவிடுமா? `தமிழர்கள் ஒற்றுமையாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார். தன் சுயரூபம் தெரிந்துவிடும் என்ற அச்சத்தால்தான் உண்ணாவிரதம் இருக்கிறார். காவிரிப் பிரச்னையைக் களங்கப்படுத்த முயற்சி செய்பவர்களை காலம் மன்னிக்காது'' என்றார் பாரதிராஜா.
அடுத்த நாள் சென்னை சேப்பாக்கத்தில் ரஜினியின் உண்ணாவிரதம் தொடங்கியது. மேடையின் பின்னால் இருந்த பேனரில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் போட்டு, `உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு' என எழுதப்பட்டிருந்தது. அப்போது மூப்பனாரின் 'தமிழ் மாநில காங்கிரஸ்' கட்சியிலிருந்து பிரிந்து 'த.மா.கா ஜனநாயகப் பேரவை' எனத் தனிக் கட்சி நடத்திக்கொண்டிருந்த ப.சிதம்பரம்தான் ரஜினியின் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் பந்தலை சுற்றி திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள், பாரதிராஜாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
``ரஜினியின் போராட்டத்தை நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்'' என ராமதாஸ் சொன்னபோதும் அதை நடிகர்கள் உதாசீனப்படுத்திவிட்டு உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் பாலசந்தர், மகேந்திரன், பஞ்சு அருணாசலம், பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து, நடிகர்கள் கமல், சரத்குமார், சந்திரசேகர், தியாகு, நெப்போலியன், மனோரமா, மீனா, லிவிங்ஸ்டன், டி.ராஜேந்தர், சிலம்பரசன், லதா, பாண்டியராஜன், பிரசாந்த், ஸ்ரீகாந்த், அர்ஜூன், கார்த்திக், ஜெயராம், ஜெயசித்ரா, விஜயகுமார், மஞ்சுளா, அர்ஜூன், பிரபு, சிவக்குமார், பிரகாஷ் ராஜ், லாரன்ஸ், ஜெமினி கணேசன், செந்தில், பாக்யராஜ், சூர்யா, ரவிச்சந்திரன், அப்பாஸ், முரளி, விஜய், கவுண்டமணி, பார்த்திபன், மலேசியா வாசுதேவன், ஆனந்தராஜ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பி.ஜே.பி.யை சேர்ந்த மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் எனப் பலரும் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர்.
ரஜினியின் உண்ணாவிரதத்துக்கு கருணாநிதி ஆதரவு தெரிவித்தார். அதோடு, நேரில் வந்து ரஜினிக்கு ஆதரவு தரவும் நினைத்தார். ஆனால், கடைசி நேரத்தில் மனமாற்றம் ஏற்பட்டது. தி.மு.க சார்பில் ஆதரவுக் கடிதத்தை ஸ்டாலினிடம் கொடுத்தனுப்பினார். ``கருணாநிதியும் இந்த உண்ணாவிரத மேடைக்கு வருவதாக அறிவித்திருந்தார். ஆனால், நான்தான் அவரை வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அவருக்கு என் அன்பான நன்றி'' என உண்ணாவிரத மேடையிலேயே சொன்னார் ரஜினி.
ரஜினி உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ``உண்ணாவிரத மேடையைப் பார்க்கும் போது ரஜினி வேறு பாதை நோக்கி போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அது அரசியலா என்பது தெரியவில்லை. நெய்வேலியில் பாரதிராஜா பேசியதில் தவறில்லை.'' என்றார்.
``நெய்வேலி போராட்டத்தில் யாருடைய பிரதிநிதியாக பாரதிராஜா பேசினார். காவிரிப் போராட்டத்தில் அரசியலைப் புகுத்தி விட்டார். அரசியல் ஆசை வந்தால் அங்கே போய் சேர வேண்டியதுதானே போராட்டத்துக்குப் பேருந்து வசதிகளை எல்லாம் முதல்வர் செய்து கொடுத்தார் என்றெல்லாம் சொல்லி எங்களைக் கேவலப்படுத்தியதோடு, போராட்டத்தை விளம்பரதாரர் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்'' என்றார் சரத்குமார்.
பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்த ரஜினி, ``கர்நாடக அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கைகளில்தான் இந்த உண்ணாவிரதத்தின் வெற்றி இருக்கிறது. என்ன செய்வார்களோ தெரியாது தமிழகத்துக்குக் காவிரியிலிருந்து தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறுப்பை மத்திய அரசு செய்ய வேண்டும்.'' என்றார்.
உண்ணாவிரதத்துக்குப் பிறகு கவர்னர் மாளிகை சென்ற ரஜினி அங்கே கவர்னர் ராமமோகன் ராவின் செயலாளரிடம் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என மனு அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ``கங்கை - காவிரி இணைப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அதற்காக நான் ஒரு கோடி ரூபாய் தர ரெடியாக இருக்கிறேன்'' என்றார்.
ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகும் எதிர்வினைகள் வர ஆரம்பித்தன. ``தனக்கு ஏற்பட்ட கெட்டபெயரைச் சரிக்கட்டவே ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்'' என்றார் ராமதாஸ்.
கருணாநிதியோ ``நதிகளை இணைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி அறிவித்திருக்கிறார். இது மிகவும் சிறிய தொகையாக இருந்தாலும், அவரது அறிவிப்பு மிகப் பெரியது'' என்றார்.
பாரதிராஜாவோ, ``ரஜினி உண்ணாவிரதப் போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்ட நேரங்களில் என் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது என்னை அ.தி.மு.க.காரன் என்றோ காங்கிரஸ்காரன் என்றோ சொல்லவில்லை. கலைஞருக்குப் பாராட்டு விழா நடந்தபோது எனது ஆயுளின் பாதியை அவருக்குத் தருவதாக வாழ்த்தினேன். அப்போதும்கூட என்னை தி.மு.க.காரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் நெய்வேலிப் போராட்டத்தை நடத்தியபோது மட்டும் எனக்கு வர்ணம் பூசுகிறார்கள்.'' என்றார்.
இந்தத் தொடரின் மற்ற கட்டுரைகளைப் படிக்க காவிரியும் ரஜினியும் க்ளிக் செய்யவும்