Published:Updated:

`சிறையை நிரப்புவோம்' - காவிரி மேலாண்மை வாரியத்துக்காக களமிறங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

எம்.திலீபன்
`சிறையை நிரப்புவோம்' - காவிரி மேலாண்மை வாரியத்துக்காக களமிறங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
`சிறையை நிரப்புவோம்' - காவிரி மேலாண்மை வாரியத்துக்காக களமிறங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

``தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலப் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக்குழு முரண்பாட்டை சரிசெய்து 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் எனக் கூறியதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28 மற்றும் 29-ம் தேதி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து சிறைநிரப்பும் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்படும். எனவே, தமிழக அரசு எங்களை போராட்டத்துக்குத் தள்ளாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.