Published:Updated:

`` `உடம்பு சரியில்லை' என்றால்கூட நடவடிக்கை பாயும்"... போராட்டத்தில் குமுறும் ஆசிரியர்கள்!

`` `உடம்பு சரியில்லை' என்றால்கூட நடவடிக்கை பாயும்"... போராட்டத்தில் குமுறும் ஆசிரியர்கள்!
`` `உடம்பு சரியில்லை' என்றால்கூட நடவடிக்கை பாயும்"... போராட்டத்தில் குமுறும் ஆசிரியர்கள்!

`` `உடம்பு சரியில்லை' என்றால்கூட நடவடிக்கை பாயும்"... போராட்டத்தில் குமுறும் ஆசிரியர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டைநிலை ஆசிரியர்கள் போராட்டம் சென்னையில் 3-வது நாளாக தீவிரமடைந்துள்ளது. மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்தப் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. போராட்ட களத்துக்கே சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். `கல்வித்துறை அதிகாரிகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்' என்று அப்போது தெரிவித்தார் ஸ்டாலின்.

`சமவேலைக்குச் சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்திற்கும், அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கான சம்பளத்திற்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 23) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களை, போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் காவலில் வைத்தனர். அன்றைய தினம் மாலையில் விளையாட்டு அரங்கத்திலிருந்து வெளியேற மறுத்த ஆசிரியர்கள், விடிய விடிய போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களுடன் போலீஸாரும், கல்வித்துறை அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், போலீஸார் கொடுத்த உணவையும் ஆசிரியர்கள் சாப்பிடவில்லை. 

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை உடல்சோர்வு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல ஒவ்வோர் ஆசிரியராக மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் 27 ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 ஆசிரியர்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ``கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் மனு கொடுங்கள். மேலும், இதுகுறித்து முடிவெடுக்க 10 நாள்கள் அவகாசம் வேண்டும்'' என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். அதற்கு ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள், ``நாங்கள் ஏற்கெனவே எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தும் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். அதனால், எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தைத் தொடர்வோம்'' என்று உறுதிபடக் கூறியதுடன், போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் கூறுகையில், ``அரசு ஊழியர்களிலேயே வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆசியர்கள்தாம். மழை, வெயில், அரசியல் கட்சிகளின் போராட்டம், எந்தப் பிரச்னை என்றாலும் குறித்த நேரத்துக்கு நாங்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள், போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்குப் புத்தாக்க வகுப்புகள் என்று ஓயாத வேலை உண்டு. பாடத்திட்ட மாற்றம் காரணமாக எங்களுக்குக் கூடுதல் வேலையாக, புதிய பாடத்திட்டப் புத்தகங்களை எழுதும் வேலையும் எங்கள் மேல்தான் விழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் என்று எந்தத் தேர்வுகள் என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகூட நாங்கள் கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் கண்டிப்பாக டூயூட்டி போடுவார்கள். `உடம்பு சரியில்லை' என்று தேர்தல் பணிக்குப் போகவில்லை என்றால்கூட, எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும். பள்ளிக்கூட பணிகளில்கூட டார்கெட் வைத்து வேலை செய்ய வேண்டியுள்ளது. இத்தனை வேலை பளுவுக்கு இடையேயும் எங்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்படவில்லை,

எனவேதான், சென்னையில் திங்கள்கிழமை முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முதலில் போராட்டம் தொடங்கியது. தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி ஒன்றில் போலீஸ் பாதுகாப்புடன் 3-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தின் போது 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசுத் தரப்பில் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம்'' என்கின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 30.06.2009 ம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.5.2009) பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ. 14,000 ஊதிய முரண்பாடு இருப்பதைக் களைய வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு, காவல்துறை மூலம் கலைந்து செல்லுமாறு மிரட்டல் விடுப்பதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை உடனே அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம் குறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட், ``இந்திய அரசியலமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்றமும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கவேண்டும் என்று சொல்கிறது. ஆனால், நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இதைச் சரிசெய்ய வேண்டும் என்று 2016-ம் ஆண்டு எட்டு நாள்கள் உண்ணாநோன்பு இருந்தோம். வரவிருக்கும் ஏழாவது ஊதியக் குழுவில் இந்தக் குறைகள் களையப்படும் என்று எழுத்து மூலம் உறுதி சொன்னபிறகே போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், சொன்னபடி தமிழக அரசு செய்யவில்லை. இந்த ஊதியக்குழுவிலும் எங்களை வஞ்சித்துவிட்டார்கள். எனவேதான் போராட்டத்தில் ஈடுபட்டுளோம்'' என்றார்.  இதற்கிடையே தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், போராட்டக்களத்தில் இருந்த ஆசிரியர்களை நேரில் சந்தித்துப் பேசியதுடன், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், ``இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தை, மாநில அரசு ஏற்க வேண்டும். இந்தப் பிரச்னையில் கௌரவம் பார்க்க வேண்டாம். காலக்கெடு எல்லாம் சொல்லாமல் உடனே அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்றார். 

கோட்டையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஆசிரியர்கள், தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். இப்போது, குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இனி வேறு வகையிலான போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு