Published:Updated:

"போராடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த எந்த சட்டம் சொல்கிறது?" மனித உரிமைக் குரல்

"போராடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த எந்த சட்டம் சொல்கிறது?" மனித உரிமைக் குரல்
"போராடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த எந்த சட்டம் சொல்கிறது?" மனித உரிமைக் குரல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்ற போலீஸார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். `சிறிதும் மனித அறமின்றி இதுபோன்றதொரு கொடூரமானத் தாக்குதலைத் தமிழக போலீஸார் நடத்தியுள்ளனர்' என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும்.

மேலும் `ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியுள்ள இடத்தில் போலீஸார் துப்பாக்கியை உயர்த்தும்போது, தவறுகள் நிகழ வாய்ப்புண்டு' என்பது சாதாரண மக்களுக்கே தெரியும்போது, சட்டம் தெரிந்த போலீஸாருக்குத் தெரியவில்லையா?' என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படியிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரின் உயிரைப் பறித்துள்ளனர் என்றால், இது காவல்துறையினரின் திட்டமிட்ட கொலை என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்வது என்று பல்வேறு தரப்பினரும் கொதிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். எழுச்சிப் போராட்டங்களின்போது, போராடும் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸாரே அத்துமீறி இதுபோன்று அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுவது என்ன நியாயம் என்றும் அவர்கள் வினவுகிறார்கள்.

தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய அத்துமீறியத் தாக்குதல் குறித்து மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸிடம் பேசியபோது, ``போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸார் நடத்தியுள்ள கொடூரத் தாக்குதல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற நிர்வாகத்திற்கு இதைவிட சாட்சியம் வேறு எதுவும் இருக்க முடியாது. அங்கு திரண்டிருந்தவர்கள், திடீரென்று குழுமி உடனே `மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்' நடத்தப்போவதாகக் கூறவில்லை. அவர்கள் முறையாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். மேலும், எங்கெல்லாம் போலீஸார் தடுத்து நிறுத்துகிறார்களோ, அந்த இடங்களில் கைதாகி விடுவது என அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அப்படி அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த அரசாங்கம் அதனைச் சரியான முறையில் கையாளாமல் காவல்துறையினர் மூலம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. குறிப்பாகப் போராட்டம் தொடங்கியதுமே தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் உடனடியாக போலீஸார் களத்தில் மக்கள் மீதான வன்முறையைத் தொடங்கி விட்டனர். முற்றுகைப் பேரணி தொடங்கியதுமே போலீஸார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது, போராட்டக்காரர்கள் இடையே

ஒருவித அச்ச உணர்வு உருவாவது இயல்புதானே. அப்படியான அசாதாரண சூழலை உருவாக்கியது யார்? ஒவ்வொரு போராட்டத்திலும் இப்படியான வழிமுறைகளை போலீஸார் ஏன் கையாள்கிறார்கள் எனத் தெரியவில்லை.

குறிப்பாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியில் பங்கேற்றவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் தொழிலாளர்கள் தப்பியோட வழியின்றி, செய்வதறியாமல் தாமிரபரணி ஆற்றில் குதித்ததில் ஆற்றுநீரில் மூழ்கி 17 பேர் பலியானார்கள். அதேபோல் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின்போதும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் போலீஸார் தடியடி நடத்தியபோதும் தமிழகம் ரத்த பூமியாக மாற்றப்பட்டதை நாம் அறிவோம். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தின்போதும் அப்பாவி பொதுமக்களைப் பழிவாங்கும் நோக்கில் தடியடி, துப்பாக்கிச் சூடு போன்றவற்றைப் போலீஸார் நடத்துவது ஏன்? போலீஸாரின் இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மக்களைப் பார்த்து இந்த அரசாங்கம் பயப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் திட்டமிட்டே இந்தத் தாக்குதலை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றி போலீஸார் யோசித்திருந்தால் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு இடும் உத்தரவுக்கு விசுவாசிகளாக இருந்திருக்க மாட்டார்கள். எந்தவொரு சட்டவிதிமுறைகளையும் பின்பற்றாமல் 12 பேரைச் சுட்டுக்கொன்று விட்டு, இந்த அரசாங்கம் தரும் பதில் `மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகி விட்டது' என்று கூறுவது எவ்வளவு பெரிய மோசடி. மூன்றடுக்குப் பாதுகாப்பு கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் எப்படி சாதாரண மக்கள் நுழைய முடியும்? யாரை ஏமாற்ற இந்த அரசாங்கம் இதுபோன்றதொரு பதிலைத் தருகிறது?" என்றார்